இஸ்ரேலிய குடியேற்றங்களைத் தடுக்க மேற்கத்திய நாடுகள் செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் அன்வார் கோரிக்கை

சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து 12 மேற்கத்திய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கை நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்ட ஒன்று என்றும், அது உறுதியான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார்.

அவர் தனது முகநூல் பதிவில், குடியேற்ற விரிவாக்கம் மற்றும் கட்டாய இடப்பெயர்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், காசாவில் ஏற்படுத்தப்பட்ட பேரழிவிற்கு பொறுப்பேற்கச் செய்யவும், தடையற்ற மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யவும், இந்த அரசாங்கங்கள் இஸ்ரேல் மீதான தங்களின் கணிசமான இராஜதந்திர மற்றும் பொருளாதார செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ள பல ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து, குடியேற்றப் பகுதிகளில் இருந்து வரும் பொருட்களின் வர்த்தகத்தைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்னெடுக்கும் என்பதை தாம் கவனித்துள்ளதாக அன்வார் கூறினார்.

பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபான்ட்  நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையின் முக்கியத்துவத்தையும் நான் அங்கீகரிக்கிறேன். ஒட்டுமொத்தமாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்பதை ஐக்கிய இராச்சியம்  இப்போது அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது,” என்று அன்வார் கூறினார்.

மேற்கு கரையின் சில பகுதிகளில், திரு. மிலிபான்ட் மிகச் சரியாகக் குறிப்பிட்ட ‘குடியேற்ற பயங்கரவாதிகள்’ மூலம் பாலஸ்தீனியர்களின் இனச்சுத்திகரிப்பு நடப்பதையும் அது ஒப்புக்கொண்டுள்ளது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும், பாலஸ்தீனிய மக்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்களின் அடிப்படையிலும் இவை மிக முக்கியமான அங்கீகாரங்கள் ஆகும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச சட்டத்தை நிலைநாட்டவும், பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய கிழக்கில் ஒரு நியாயமான மற்றும் நிலையான அமைதியை உறுதி செய்யவும் உறுதியான மற்றும் பிணைப்புக்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்வார் அழைப்பு விடுத்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், சர்வதேச சட்டத்தின்படி சட்டவிரோதமான குடியேற்றப் பகுதிகளுடனான பொருட்களின் வர்த்தகத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கில் நகர்ந்துள்ளனர்.

 

 

-fmt