நாவற்குழியில் அமைந்துள்ள அரச காணியில் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்களுக்கு அந்தக் காணிகளை உரித்தாக்கும் முயற்சி நேற்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அங்கு சென்று அதை தடுத்து நிறுத்த முயன்ற சிறீதரன் எம்.பிக்கும் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
இது தங்களுக்கு சொந்தமான இடம் எனவும் அந்த இடத்தில் இருந்து தாம் ஒருபோதும் வெளியேறிச் செல்லப் போவதில்லை எனவும் அங்கு குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்கள் கடும்தொனியில் சிறீதரன் எம்.பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எம்மை விரட்ட முயன்றால் மீண்டும் நாம் மோதுவதற்குத் தயாராகவே உள்ளோம். ஒருபோதும் இங்கு நிரந்தரமாக குடியேறும் முயற்சியில் இருந்து பின்வாங்க மாட்டோம் எனவும் எனவும் அவர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.
போருக்குப் பின்னர் தென்பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்ட 136 குடும்பங்களைச் சேர்ந்த நாவற்குழியில் அடாத்தாக குடியேற்ற்ப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள இந்தக் காணிகளை சிங்களவர்களுக்கே நிரந்தரமாக்கி வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்காக முயற்சிகள் அரசு மற்றும் படையினரின் முழுமையான ஆசியுடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று படையினரின் பிரசன்னத்துடன் அங்கு சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், காணிகளை அளந்து பங்கீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்து அங்கு விரைந்த சிறீதரன் எம்.பி. இம் முயற்சியை தடுத்து நிறுத்தினார்.
சிறீதரன் எம்;.பியுடன் சம்பவ இடத்திற்கு வட மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இதனையடுத்தே சிறீதரன் எம்.பியுடன் சிங்கள மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தக் காணி தமக்கு சொந்தமானது எனவும், அங்கிருந்து தாம் ஒருபோதும் வெளியேற மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் வடமராட்சி கிழக்கு வாழ் மக்கள்: சிறீதரன் எம்.பி நேரில் சென்று பார்வை
2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்கை அனர்த்தத்தின் போதும் கடந்த காலங்களில் நடைபெற்ற போரின் போதும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
வடமராட்சி கிழக்கின் உடுத்துறை, மருதங்கேணி, தாளையடி, ஆழியவளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை வீடுகள் தோறும் சென்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமராட்சிப் பகுதியினைப் பிரதி நிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் சு.சுகிர்தன், வடமராட்சி கிழக்குப் பகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர் க.சூரியகாந்த், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கு.சர்வானந்தா ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற அவல நிலையில் இம்மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இம்மக்களினை நேரடியாகச் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினரிடம் அப்பகுதி மக்கள், தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வீடு உட்பட ஏனைய வசதிகள் எதுவுமற்ற நிலையில் வாழ்ந்து வரும் அம்மக்களின் தேவைகளை உடனடியாக தீர்க்கப்படுவதற்கு உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.