பாகிஸ்தான் தாலிபன் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூத் கொல்லப்பட்டுள்ளார்.
வடக்கு வாசிரிஸ்தான் பகுதியில் உள்ள மெஹ்சூத்தின் வீட்டின் மீதும் காரின் மீதும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
முன்னதாக, இந்தத் தாக்குதல்களில் ஹக்கிமுல்லா மெஹ்சூதின் சகோதரர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாக பிபிசிக்கு தகவல் கிடைத்தது.
அதில் தாலிபன் தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சூதும் கொல்லப்பட்டுவிட்டதை முக்கிய தாலிபன் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் பழங்குடிப் பிரதேசமான வடக்கு வாசிரிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
தாலிபன் அமைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்காக தூதுக்குழுவொன்றை தாலிபன் பகுதிக்கு அனுப்பவுள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், நாட்டில் தாலிபன்களின் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.