வடக்கு மாகாண ஆளுநராக இராணுவ அதிகாரி அல்லாத சிவில் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என கோரப்படுகிறது எனவும் சிங்களவரை நியமிக்க வேண்டாம் எவரும் கூறவில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த கோரிக்கையில் நான் எந்தப் பிழையையும் காணவில்லை.
ஏகாதிபத்தியவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மகிந்த ராஜபக்ஷ அடிபணியவில்லை. அனைத்தையும் அவர் தோல்வியடையச் செய்தார்.
நிதிக் குழுவினால் தான் மாகாண சபைகளுக்கு நிதி வழங்கப்படும். வட மாகாண சபைக்கு அதன் ஊடாகவே நிதி வழங்கப்படுகிறது. எனவே நிதி வழங்கப்படவில்லை எனக் கூறமுடியாது.
வட மாகாண சபையும் அரசாங்கமும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். ஏகாதிபத்தியத்தின் கீழ் ஆட்சி செய்ய முடியாது. இணக்கப்பாடு தேவை.
வடமாகாண சபை ஆளுநரை வேண்டாம் எனவும் சிவிலியன் ஒருவரை நியமிக்குமாறும் கோரியுள்ளதே தவிர, சிங்களவர் எவரையும் நியமிக்க வேண்டாமெனக் கூறவில்லை.
அதேபோன்று யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அத்தியட்சகர் நியமிக்கப்படும் போது மாகாண சபையுடன் கலந்துரையாடவில்லை என குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
இதில் பிழையொன்றுமில்லை. எனவே எதிர்காலத்தில் மத்திய அரசாங்கமும் வட மாகாண சபையும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.
மக்களின் இதய துடிப்பை உள்ளூராட்சி சபைகளே அதிகம் தெரிந்து கொள்கிறது. எனவே ஏதாவது திட்டங்களை முன்னெடுக்கிறோம் என்றால் உள்ளூராட்சி சபைகளை இணைத்துக் கொண்டு திட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே வெற்றிகரமானதாக அமையும் என்றார்.