வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறிகுமிடையில் முறுகல் தீவிரமாகியுள்ளது.
வடமாகாண பிரதம செயலாளராக உள்ள விஜயலட்சுமி சுரேஸுக்கு இலங்கை தொலைபேசி இலக்கத்தில் இருந்தும், வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்தில் இருந்தும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளமையை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தலின்போது பதவி விலகுமாறு விஜயலட்சுமி கோரப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஆளுநர் பொலிஸாரிடம் கோரியுள்ளார்.
இதேவேளை வடமாகாணத்துக்கு இராணுவ அதிகாரி ஒருவர் ஆளுநராக இருப்பது பொருத்தமற்றது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தம்மை கலந்தாலோசிக்காமல் அரச நியமனங்களை வடமாகாண ஆளுநர் வழங்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.எனினும் மாகாணசபை சட்டத்துக்கு கீழ் தமக்கு அந்த அதிகாரம் உள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தேசிய இனப்பிரச்சினைக்காக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை மீண்டும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.