அமெரிக்காவின் அதிகாரபூர்வ டுவிட்டர் குறிப்பாக வெளியான படம்
இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கைக்கு அபாயகரமான பிரதிவிளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் இராஜதந்திர அதிகாரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால், இலங்கை மீதான அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் ஜயதிலக்க கூறினார்.
இறுதிக்கட்டப் போரின்போது நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்த டுவிட்டர் குறுஞ்செய்தி, ‘நடுநிலையற்றது’ என்றும் ‘விசாரணை எதுவும் இல்லாத முன்கூட்டிய அனுமானம்’ என்றும் ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
‘சாதாரண ராஜதந்திர முறைப்படியான வழக்கங்களைவிட வேறுபட்ட விதத்தில் தான் அமெரிக்கா அதிகாரபூர்வமாக நடந்துகொண்டிருக்கிறது’ என்று கூறிய தயான் ஜயதிலக்க, நட்பு நாடொன்றிடமிருந்து இவ்வாறான வழக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் கூறினார்.
‘இந்த டுவிட்டர் குறுஞ்செய்தியைப் போல, சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையும் ஒருபோதும் சுயாதீனமாக இருக்க வாய்ப்பில்லை’ என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக தயான் ஜயதிலக்க பணியாற்றிவந்தார்.
பிற்காலத்தில் அரசாங்கத்தின் பிரான்ஸ் தூதுவராகவும் பணியாற்றிய தயான், பின்னர் அந்தப் பொறுப்பிலிருந்து வெளியேறிய பின்னர் அண்மைக் காலங்களாக அரசாங்கத்தின் வெளியுறவுச் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி கொண்டவராகவும் கருத்துக்களை வெளியிட்டுவந்துள்ளார்.
‘தோல்விகரமான வெளியுறவுக் கொள்கை’
இலங்கை அரசாங்கத்தின் தவறான வெளியுறவுக் கொள்கை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளே தற்போதைய கடுமையான சர்வதேச அழுத்தத்துக்குக் காரணம் என்ற போதிலும் இலங்கை மீதான அழுத்தங்கள் நியாயமானவை என்று கூறமுடியாது என்றும் தயான் பிபிசியிடம் வாதிட்டார்.
‘2009-ம் ஆண்டிலேயே இவ்வாறான விசாரணைக்கான முயற்சியொன்றை அமெரிக்கா எடுத்திருந்தது. ஆனால் அப்போது அது முடியாமல் போய்விட்டது. ஜெனீவாவில் எங்களின் பிரதிநிதித்துவத்தினால் அப்போது கிடைத்த வெற்றி காரணமாக அவர்களின் முயற்சி தோல்வி கண்டது’ என்றார் தயான்.
‘அப்போது இருந்த வெளியுறவுக் கொள்கை மற்றும் இராஜதந்திர நகர்வுகள் இன்று இல்லாதபடியால் தான் இலங்கைக்கு கடுமையான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன’ என்றும் அவர் கூறினார்.
இலங்கை அரசாங்கத்தின் முன்னாள் இராஜதந்திரியிடம், சர்வதேச விசாரணையை நோக்கிய அமெரிக்காவின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் எந்தவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, ‘அதன் பிரதிவிளைவுகள் மிகப் பயங்கரமாக இருக்கும்’ என்று பதிலளித்தார் இலங்கையின் முன்னாள் ராஜதந்திரி.
‘சர்வதேச விசாரணைக்கான பொறிமுறை ஒன்று உருவாகுமானால் இரண்டு வழிகளில் அது ஏற்படலாம். அதாவது- ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவர் நியமிக்கப்படலாம் அல்லது சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்று உருவாகலாம்’ என்றார் தயான் ஜயதிலக்க.
‘சர்வதேச தடைகள் வரலாம்’
அந்த விசாரணையின் தீர்ப்புகளுடன் இலங்கை ஒத்துழைத்துச் செயற்படாதபட்சத்தில், ‘அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் நாடாளுமன்றங்களால் இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியான பொருளாதார, வணிக மற்றும் நிதித் தடைகள் கொண்டுவரப்பட்டு- இலங்கையின் பொருளாதார குரல்வளை நசுக்கப்படலாம்’ என்றும் ஜெனீவாவுக்கான முன்னாள் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
‘அதற்கும் முன்னதாக, எதிர்வரும் மார்ச் மாதத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கை மோசமாக தோல்விகண்டால் அது நேரடியாக இலங்கையின் பங்குச் சந்தைகளைப் பாதிக்கும்’ என்றும் அவர் கூறினார்.
அதேபோல இலங்கை இராணுவ அதிகாரிகள் மட்டுமன்றி மற்றைய அதிகாரிகளுக்கும் சர்வதேச பயணங்களை மேற்கொள்ள முடியாதபடி புலம்பெயர் தமிழர்களால் வழக்குகள் போடப்படலாம் என்றும் தயான் கூறினார்.
அமெரிக்கா போன்ற நாடுகளின் இவ்வாறான கடுமையான நிலைப்பாடுகள் இலங்கைக்குள்ளும் இனரீதியான சமூக இடைவெளியை இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் பிபிசியிடம் கூறினார் இறுதிக்கட்டப் போரின்போது ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்தின் ஐநாவுக்கான தூதுவராக பணியாற்றிய தயான் ஜயதிலக்க. -BBC
தெய்வம் நின்று கொல்லும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இறைவன் நிச்சயம் துணை நிற்பார்.
கதிர்காமம் முருகன் திருவிளையாடல் ஆரம்பம்!