இலங்கையின் வடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் தமது கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கையை விடுத்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டபோரின் போது முஸ்லிம்கள் நேரடியாக பாதிக்கப்படவில்லை.
எனினும் 30 வருட போர்க்காலப் பகுதியில் 20 ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
எனவே இவை தொடர்பில் விசாரணைகள் அவசியம் என்று ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போரில் தமிழர்களும் சிங்களவர்களுமே பாதிக்கப்பட்டதாக சர்வதேச ரீதியில் இன்று பேசப்படுகிறது.
இலங்கையின் நல்லிணக்க பாடங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூட இவையே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் இல்லை என்று ஹசன் அலி சுட்டிக்காட்டியுள்ளார்.