இலங்கைக்காக அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் குழு ஒன்று திடீரென நேற்று புதனிரவு யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
வருகை தந்திருந்த குழுவினர் உடனடியாகவே வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை சந்தித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கெடுத்திருந்ததாக தெரியவருகின்றது. இரவு 8 மணிக்கு ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் மூன்று மணிநேரம் நீடித்திருந்தது.
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் சிறீலங்கா தொடர்பான பிரேரணைகளை கொண்டுவரப்படவுள்ள நிலையில் சர்வதேச போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்க அதிகாரி ஸ்ரீபன் ரப் இலங்கை வந்து இறுதி யுத்தம் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு பகுதிக்கு விஜயம் செய்து வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பான சர்ச்சை இன்னமும் ஓய்ந்திருக்கவில்லை. அவர்கள் விஜயம் செய்து திரும்பி இரண்டு வாரங்கள் ஆவதற்குள் மீண்டும் மற்றொரு குழு யாழ் வந்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனிடையே இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை மார்ச் 4 ஆம் எடுக்கவுள்ளதாக உயர்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீர்மானித்துள்ளது. இலங்கையின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க,பீ.பி அலுவிஹார ஆகியோர் நீதியரசர் குழாமில் இருந்தனர்.
‘இலங்கை தமிழரசு கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் இலக்கு,நோக்கம் இலங்கையின் ஆட்புலத்தில் தனிநாடு அமைப்பதாகும்’ என நீதிமன்றம் பிரகடனப்படுத்த வேண்டுமென இந்த மனுக்களிலும் கேட்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் பிரதிவாதிகளாக இந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கூட்டமைப்பினை ஜெனீவாவிற்கு முன்னதாக இம்முறையும் வழிக்கு கொண்டுவர முயலும் மஹிந்த தரப்பினது முன்னேற்பாடாகவே இவ்வழக்கை அரச ஆதரவு தரப்புக்கள் தாக்கல் செய்துள்ளதாக நம்பப்படுகின்றது.