அமெரிக்க தூதுவர் சிசன் யாழில் அனந்தி சசிதரனை சந்தித்து பேச்சு!

michele_sison03வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப  இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், அனந்தியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் உள்ள மார்கோசா விடுதியில் கடந்த புதன்கிழமை இரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராப்போசன விருந்துடன் நடந்த இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பில், அனந்தியைப் புனர்வாழ்வுக்கு அனுப்பும் பாதுகாப்பு அமைச்சின் திட்டம் குறித்துக் கலந்துரையாடப்பட்டதா என்று, கொழும்புத் தூதரகப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பியதற்கு, கலந்துரையாடல் குறித்த எந்த தகவலையும் வழங்க முடியாது என்று கூறியுள்ளார்.

யுஎஸ் எய்ட் அனுசரணையுடன் சேவாலங்கா நிறுவன திட்டத்தின் மூலம் மீனவர்களுக்கு 196 மில்லியன் ரூபா உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

அவர் யாழ்ப்பாணம் சென்ற மறுநாளான கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உரையாற்றிய போது, அமெரிக்கத் தூதுவர் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடுவதாக குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: