நாட்டின் தேசிய பிரச்சினையினை தீர்ப்பதற்கு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் இணக்கப்பாட்டிற்கு வருமானால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு முழுமையான ஆதரவளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையையடுத்து அரசாங்கம் உறுப்பு நாடுகளை சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி ஒரு போதும் பயனளிக்கப் போவதில்லை.
எனவே அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச மட்டத்தில் இந்தளவு பிரச்சினைகள் வருவதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம். யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும் நாட்டின் தேசிய பிரச்சினையினை தீர்ப்பதற்கு அரசாங்கம் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக மக்களை ஏமாற்றுவதற்கு அவ்வப்போது ஏதாவது ஏமாற்று வேலைகளை செய்து வருகிறது.
நாட்டின் தேசிய பிரச்சினை தொடர்பாக அரசாங்கம் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும். அதன் பின்னர் அது தொடர்பாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அப்படியில்லாமல் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பது பாரதூரமான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். அந்த நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது.
வடக்கில் தேர்தலை நடத்திய அரசு அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சுயாதீன செயற்பாட்டிற்கு தடையாகவுள்ளது. இவற்றையெல்லாம் சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக சர்வதேசத்தை தாறு மாறாக மேடைகளில் பேசுகிறது. பின்னர் தமது பிரதிநிதிகளை அனுப்பி உதவி கோருகிறது. இவற்றையெல்லாம் சர்வதேசம் அறியாமலி்ல்லை. ஆகையால் இவ்வாறான ஏமாற்று வேலைகளை முதலில் கைவிட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் நெருங்கும் வேளையில் அதை எப்படி எதிர்கொள்வதென தடுமாறாமல் இருப்பதற்கு முறையானதும் தூர நோக்குடையதுமான நல்ல திட்டங்களை வகுக்க வேண்டும். அதற்காக கட்சி வேறுபாடின்றி கலந்துரையாடல்களை நடத்தி இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தனி தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு!