கடந்த வாரம் புதுடில்லியை மட்டுமன்றி, இந்தியாவையே அதிரவைத்த ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
அண்மையில் நடந்த டில்லி சட்டமன் றத் தேர்தலில், வியக்கவைக்கும் வகை யில், இரண்டாவது அதிக ஆசனங்களைப் பிடித்து பிரமிப்பை ஏற்படுத்தியவர் அவர்.
ஊழலுக்கு எதிரான, அன்னா ஹசாரேயின் போராட்டத்தின் ஊடாக அரசியலுக்கு வந்த அவர், திடுதிடுப்பென டில்லி முதல்வரானார். அதன் பின்னர் அதிரடி நடவடிக்கைகளால், மக்களின் கவனத்தை ஈர்த்த அவர், கடந்த வாரம் நடத்திய போராட்டத்தினால், டில்லியே ஆடிப் போய் விட்டது.
நோர்த் புளொக் எனப்படும் உள்துறை அமைச்சுக்கு எதிரே நடத்தப்பட்ட அந்தப் போராட்டத்தின் போது ஒரு நாள் இரவு முழுவதும் அவர் நடுவீதியில், கடும் குளிருக்கு மத்தியில் படுத்துறங்கினார். எப்படியோ அந்தப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.
கெஜ்ரிவாலின் அந்தப் போராட்டம் இந்திய மக்களிடையே சற்று வெறுப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், அவரது போராட்டத்தின் மீது ஒரு நியாயம் உள்ளதாக பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
அதாவது டில்லிக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என்பதே அது. டில்லி மாநில அரசுக்கு பொலிஸ் அதிகாரம் கிடையாது. அங்கு துணைநிலை ஆளுநர் எனப்படும் கவர்னர் ஜெனரலும், தலைமைச் செயலரும் தான் அதிகாரம் படைத்தவர்கள். பொலிஸாரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே உள்ளது.
டில்லி மாநில அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை கவனிக்க, பொலிஸ் அதிகாரம் தரப்பட வேண்டும் என்று அவர் கோரினார். ஆனால், மத்திய அரசு அதனை உறுதியாக நிராகரித்து விட்டது.
டில்லியின் கேந்திர முக்கியத்துவம் கருதி, பொலிஸ் அதிகாரம் மத்திய அரசின் வசமே இருக்க வேண்டும் என்று கூறி விட்டது.
எது எவ்வாறாயினும், டில்லி, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில், துணைநிலை ஆளுநருக்கு உள்ள பொலிஸ் அதிகாரங்கள் மாநில அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விரைவில் பூதாகரமாக வெடிக்கலாம்.
அதற்கான முன்னோட்டம் தான் கெஜ்ரிவாலின் இந்தப் போராட்டம்.
கிட்டத்தட்ட டில்லியில் உள்ள தைப் போலத் தான், பெருவாரியான மக்களாதரவுடன் வடக்கில் முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார் சீ.வி. விக்னேஸ்வரன்.
டில்லியில், மாநில அரசுக்கு உள்ள சொற்ப அதிகாரங்கள் கூட, வடக்கு மாகா ண சபைக்கு கிடையாது. வடக்கு மாகாண சபைக்கு மட்டுமன்றி இலங்கையிலுள்ள எந்த மாகாண சபைக்குமே கிடையாது.
காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கோரி வந்த வடக்கு மாகாண சபை இப் போது, தம்மிடம் உள்ள அதிகாரங்களையே பயன்படுத்திக் கொள்ள முடியாதளவுக்கு திணறுகின்ற நிலை தான் காணப்படுகிறது.
ஒரு பெரிய பிரச்சினையை இலகுவாக மறக்கச் செய்ய வேண்டுமானால், இன்னொரு புதிய பிரச்சினையை உருவாக்கி விடுவது பொதுவாக அரசியலில் கடைப்பிடிக்கப்படும் உபாயம்.
அதாவது ஒரு கோட்டுக்கு அருகே மற்றொரு பெரிய கோட்டை வரைவதன் மூலம், முன்னையதை சிறியதாக்கி விடுகின்ற உத்தி தான் இது. அதுபோலத் தான், வடக்கு மாகாணசபையும், ஆரம்பத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேவை என்ற குரல் கொடுக்கத் தொடங்கியது.
அந்தக் கோரிக்கை வலுப்பெறுவதை அரசாங்கம் விரும்பவில்லை. ஏனென்றால் 13வது திருத்தச்சட்டத் தின் படி, காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டவை.
எனவே, அந்தக் கோரிக்கை பெரியளவில் பூதாகரமாக வடிவெடுப்பதைத் தடுப்பதற்காக, வடக்கு மாகாண சபையில் அரசாங்கம் புதுப்பிரச்சினைகளை உருவாக்கி விட்டது.
ஆளுநர் தொடர்பான வடக்கு மாகாண அரசின் கோரிக்கையை ஏற்காமல், இழுத்தடிப்பதன் மூலமும், வடக்கு மாகாண சபையின் விருப்புக்கு முரணான வகையில், தலைமைச் செயலரை இயங்கச் செய்வதன் மூலமும், தொந்தரவு கொடுக்கத் தொடங்கியது அரசாங்கம்.
இப்போது, வடக்கு மாகாண சபைக்கு, புதிய சிவில் ஆளுநரை நியமிக்க வேண்டும், தலைமைச் செயலரை மாற்ற வேண்டும் என்பனவே முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன.
கடந்த மூன்று மாதங்களாக நிலவும் இந்த இழுபறிகளுக்குத் தீர்வு காண்பது போன்று அரசாங்கம் பாவனை காட்டிக் கொள்வதும், அதனைத் தீர்க்காமல் இழுத்தடிப்பதும் தான் இப்போது அரசாங்கத்தின் பாணியாகத் தெரிகிறது.
கடந்த 2 ம் திகதி, அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக் னேஸ்வரனுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போது, சில இணக்கப்பாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக, தலைமைச் செயலரை இடம்மாற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இணங்கியதாக கூறப்பட்டது.
ஆனால், அதற்குப் பின்னர், வடக்கு மாகாண தலைமைச் செயலர், நிர்வாக சேவை அதிகாரிகளின் சங்கத்துடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தாம் பழிவாங்கப்படுவதாக குற்றச்சாட்டு சுமத்தினார்.
அதற்குப் பின்னர், அவரை இடம்மாற் றும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, இந்தப் பிரச்சினை தீர்க்கப்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை.
அது தீர்க்கப்பட்டு விட்டால் வடக்கு மாகாண சபையின் கவனம் காணி, பொலிஸ் அதிகாரங்களை நோக்கித் திரும்பி விடலாம் என்று அரசாங்கம் நினைக்கிறது போலும்.
வடக்கு மாகாணத்தில் மக்களின் ஆணை பெற்ற ஒரு அரசுக்கும், மத்திய அரசின் செல்வாக்குப் பெற்ற ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரிகள் கூட்டத்துக்கும் இடையில் மூட்டி விடப்பட்டுள்ள இந்தப் பனிப்போர், வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை பெரிதும் பாதிப்பதாகவே தெரிகிறது.
அரசாங்கமும் இத்தகைய நிலை தொடர்வதையே விரும்புகிறது.
டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, ஆளும் காங்கிரஸூக்கு எதிராக கடுமையான அரசியல் யுத்தத்தை நடத்திய போதிலும், அந்தக் கட்சி ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸே ஆதரவு கொடுத்தது.
அதாவது ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமானால், அவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்களே என்பதை நிரூபித்தாக வேண்டும் என்று கருதியது காங்கிரஸ்.
அவர்களால் எதையும் செயல் ரீதியாக சாதிக்க முடியாது என்பதை நிரூபிப்பதற் காகவே, காங்கிரஸ், அந்தக் கட்சியை ஆட்சியில் ஏற்றியது. அதுபோலத் தான், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆட்சி யைப் பிடிக்கும் என்பதை அரசாங்கம் நன்கறிந்திருந்தது.
அவ்வாறு கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிப்பதை, அரசாங்கம் விரும்பாது போனாலும், தவிர்க்க முடியாமல் தேர்தலை நடத்தி அதற்கு ஒத்துழைக்க வேண்டியதாயிற்று. ஆனால், கூட்டமைப்பு ஆட் சியைப் பிடித்தாலும், நிர்வாகத்தைத் திறமையாக முன்னகர்த்த முடியாத வகையில் முட்டுக்கட்டைகளைப் போடும் உபாயங்களை நன்றாகவே கற்றுவைத்துள்ளது அரசாங்கம்.
அந்த உபாயங்களைக் கொண்டு தான் வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் குழப்பங்கள் உருவாக்கப்படுகின்றன.
எந்தக் குழப்பங்களுமின்றி நிர்வாகத்தை முன்னகர்த்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் முயற்சிகளை மேற்கொண்டாலும், அரசாங்கமும், அதன் கைப்பொம்மைகளாகச் செயற்படும் அதிகாரிகளும், அதற்கு இசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.
வடக்கு மாகாண சபை வெறும் பிரேரணைகளை நிறைவேற்றும் ஒரு சபையாக மட்டும் இருப்பதாக அண்மையில் கிண்டலடித்திருந்தார் ஈ.பி.டி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார். அது உண்மையே.
ஏனென்றால், வடக்கு மாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தக் கூட முடியாதளவுக்கு அங்கு நிலை உள்ளது.
அந்த தீர்மானங்களை நிறைவேற்ற தலைமைச் செயலரும், ஏனைய அதிகாரிகள் பலரும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பீடமேறிய ஒரு அரசாங்கத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, மாகாண சபைத் தேர்தலில் 72 சதவீத வாக்குகளை அளித்த, வடபகுதி மக்களின் ஆணையையும் அப்பட்டமாக மீறுகின்ற செயல்.
வடக்கு மாகாண சபைக்குத் தேர்தலை நடத்தி விட்டோம், ஒரு முதல்வரை நியமித்து விட்டோம் என்று கூறிக் கொள்கிறது அரசாங்கம்.
ஆனால், அந்த மாகாண சபையின் அதிகாரங்கள் எந்தளவுக்குப் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன – எந்தளவுக்கு முடக்கப்பட்டுள்ளன என்ற உண்மை இப்போது தான், பகிரங்கமாகத் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், ஒன்றுக்கும் உதவாத மாகாண சபையைக் கொடுத்து தம்மை ஏமாற்றி விட்டதாக வடக்கிலுள்ள மக்கள், இலங்கை அரசாங்கத்தை நோக்கியோ, இந்தியாவை நோக்கியோ கேள்வி எழுப்பலாம்.
மாகாண சபையின் அற்பசொற்ப அதிகாரத்தின் மீது கூட, மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தும் போக்கு தொடருமேயானால் இந்த நிலை விரைவில் உருவாகலாம்.
அது டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வீதியில் படுத்துக் கிடந்து போராடியது போன்று, வடக்கு மாகாண முதல்வரையும் போராட்டத்தில் இறங்க வைக்கலாம்.
அப்படியொரு நிலை உருவாகுமேயானால், அதற்காக வருத்தப்படப் போவது அரசாங்கமாகவே இருக்கும்.
– ஹரிகரன்