வீடு வாங்கினால் மனைவி இலவசம்!

வீடு விற்பனை செய்வதற்கான விளம்பரம் ஒன்று இணையதளங்களில் திடீர் பிரபலம் அடைந்துள்ளது.

அந்த வீட்டை வாங்கினால், கூடவே வீட்டின் தற்போதைய உரிமையாளர் வினா லியாவை (படம்) திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுதான் இதற்குக் காரணம்.

40 வயதாகும் வினா லியா, ஜாவா தீவிலுள்ள தனது வீட்டை 75,000 டாலர்களுக்கு (சுமார் ரூ.47 லட்சம்) விற்பனை செய்வதற்காக அளித்துள்ள விளம்பரத்தில்தான் இந்தச் “சலுகை’ இடம் பெற்றுள்ளது.

இந்த விளம்பரத்தைப் பார்த்து வியப்படைந்த இந்தோனேசிய இணையதளவாசிகள், உடனடியாக இதனை தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள, அது காட்டுத் தீபோல் இணையதளங்களில் பரவியது.

சமூக வலைதளங்களில், “”வினா லியா ஒரு அதிபுத்திசாலி. வீட்டை விற்பனை செய்தாலும், அது தன் கைவிட்டுச் செல்லாமல் பாதுகாக்கும் வகையில் இந்த விளம்பரத்தைக் கொடுத்துள்ளார்” என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

எனினும் இதுகுறித்து வினா லியா கூறியதாவது:

எனது விளம்பரத்தைப் பார்த்து ஊடகங்களைச் சேர்ந்தவர்களும், அது சரியான விளம்பரம்தானா என்பதை உறுதிப்படுத்த போலீஸாரும் வந்தது திகைப்பை ஏற்படுத்தியது. உண்மையில் அந்த விளம்பரத்தை நான் அளிக்கவில்லை.

வீடு, மனைகள் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள எனது தோழியிடம் வீட்டை விற்றுத்தரச் சொன்னேன்.

கூடவே, விதவையான எனக்கு ஏற்ற மணமகனையும் தேடச் சொன்னேன். ஆனால், அதுகுறித்து குறிப்பிட்ட சில நபர்களிடம் மட்டுமே அவர் விசாரிப்பார் என நினைத்தேன்.

ஆனால், அவர் இரண்டையும் சேர்த்து விளம்பரம் தருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இருந்தாலும் எனது விளம்பரத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.

-http://www.dinamani.com