ஹாங்காங்கில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்குகளை அந்நாட்டுப் போலீசார் புலனாய்வு செய்வது “அரசியல் நோக்கம்கொண்ட” போலீஸ் புகார்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என புத்ரா ஜெயா கூறியது.
முன்னாள் பத்து கவான் அம்னோ உதவித் தலைவர் கைருடின் அபு ஹாசான் ஆகஸ்ட் 3-இல், ஹாங்காங்கில் செய்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிரெடிட் சுவிஸ் வங்கியில் நான்கு நிறுவனங்கள் ரிம1.125 பில்லியனைப் போட்டு வைத்திருப்பதாகவும் அந்நிறுவனங்களில் நஜிப்பும் பங்குதாரர் என்றும் கைருடின் கூறினார்.
அந்நிறுவனங்கள் பினாங்கு கோடீஸ்வரர் ஜோ லவ்சுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் சொந்தமானவையாம்.
மலேசிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் அக்கூற்றை மறுத்தார். அது “அடிப்படையற்றது, அரசியல் நோக்கம்கொண்ட பொய்மூட்டை”, என்றவர் வருணித்ததாக பைனான்சியல் டைம்ஸ் கூறியது.
“பிரதமருக்கு ஹாங்காங்கில் கெரெடிட் சுவிஸ் வங்கியில் அவருடைய பெயரிலோ மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பெயரிலோ வங்கிக் கணக்குகள் கிடையாது”, என அப்பேச்சாளர் கூறினார்.