தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின் போது பழனி நகராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சோலை கேசவன் என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் மீது ஆணை கூறி பதவியேற்றுள்ளார்.
பழனி நகராட்சியின் 1வது வார்டு அ.தி.மு.க கிளை செயலாளரான 55 வயதுடைய சோலை கேசவன் என்பவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரை காட்டிலும், 120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவர் கடந்த 25-ம் தேதி நகர மன்ற உறுப்பினராக பதவியேற்கும்போது, “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்த்து உருவாக்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தம்பி பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக நான், எனக்கு வாக்களித்த மக்களுக்கும், இந்த நாட்டுக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் கடமை தவறாமல் பணியாற்றுவேன்” என்று உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்துகொண்டார் எடுத்துள்ளார்.
உங்களுக்கு எப்படி பிரபாகரன் மீது இவ்வளவு பற்றுதல் என்று சோலை கேசவன் பதவிப்பிரமாணத்தின் போது மேலும் தெரிவித்ததாவது:
“விடுதலைப் புலிகள், நம் தமிழினத்துக்கு விடுதலையும், தனி நாடும் என்னுடைய வாழ்நாளிலேயே வாங்கிக் கொடுக்கும் என்று நம்பியிருந்தேன். ஆனால், சோனியா என்ற ஒருவரால் என்னைப் போன்ற கோடான கோடி தமிழ் மக்களின் கனவும், விருப்பமும் நாசமாய் போனது. எப்படி போனாலும் பிரபாகரனின் விடுதலை வேட்கை ஒருக்காலும் தோற்காது. அது நம் இனத்துக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும்” பதவியேற்பின் பின் செய்தியாளர்களிடம் பேசிய சோலை கேசவன் கூறினார்.
“இன்றில்லை, நாளை நிச்சயம் தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பிரபாகரன் அதை செய்து முடிப்பார். அவரது விடுதலை வேட்கை பலம் மிகுந்தது. அந்த விடுதலை வேட்கையை நானும் நம்புகிறேன், அதனால் தான் நான் பிரபாகரனின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக பதவி ஏற்றுக்கொண்டேன்” என்று மேலும் கூறினார்.