‘ஞாயிறு’ நக்கீரன், ஜனவரி 1, 2018. தீபகற்ப மலேசியாவின் வடபுலத்து மண்டலமாகவும் மலாய்க்காரர் அல்லாதவர் முதல்வராக இருக்கும் ஒரே மாநிலமாகவும் இருக்கும் பினாங்கு மாநில காவல் துறைத் தலைவராக பொறுப்பேற்கும் டத்தோ ஆ.தெய்வீகனுக்கு செம்பருத்தி இணைய இதழ் முதற்கண் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது.
தன்னுடையை காவல் துறைப் பயணத்தில் நிகழும் ஆண்டின் நிறைவு நாளான டிசம்பர் 31-ஆம் நாளில் புதிய அத்தியாயம் படைக்க புறப்படும் தெய்வீகன், காவல் துறை என்ற கட்டமைப்பைக் கடந்து இலக்கிய தாகமும் சமூக நாட்டமும் கொண்டவர்.
சங்க காலம் முதல் தற்காலம் வரை தமிழ் இலக்கிய உலகில் எவராலும் நிகழ்த்த முடியாத ஓர் அற்புத சாதனையை நிறுவிய தமிழ்க் கோமகன் சதாவதானி(நூறு அவதானி) செய்கு தம்பி பாவலர், “மனித மனம் என்னும் அடுப்பை அணையவிடவேக் கூடாது; அதை எந்நேரமும் எரிய விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மனம் சோர்ந்து விடாமல் எழுச்சி பெற்றுக் கொண்டே இருக்கும்” என்று பலவிடங்களில் பதிவு செய்துள்ளார்.
அந்தக் கருத்திற்கு சரியான சான்றாகத் திகழும் பெருமக்களில் தெய்வீகனும் ஒருவர். போர் முனைக் கருவிகளான ஈட்டியும் வாளும் செப்பனிடப்படும் இரும்பு உலைகள் எந்நேரமும் கதகதக்கும் கொல்லர் தெருவில் ஈரடியும் நாலடியும் பதிக்கப்பெற்ற ஓலைச் சுவடிகளை கையிலும் தோள்பையிலும் சுமந்து திரிந்த அக்காலப் புலவரைப் போல, இடுப்பில் துப்பாக்கியும் கையில் கோலையும் ஏந்தும் இந்த காவல் துறை அதிகாரி, வேளை வாய்க்குந்தோறும் நூலை ஏந்தத் தவறுவதில்லை.
படித்து முடித்து பணியிலும் அமர்ந்த பின், இவரின் இலக்கிய தாகம் மட்டும் தீர்ந்தபாடில்லை; காவல் துறைப் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தாலும் புத்தம்புது நூல்களை தேடியலையும் புத்தகப் புழு மனப்பான்மை இவரை விட்டு அகலவேயில்லை;
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஒரு முறை சென்னைக்கு அலுவல் பயணம் மேற்கொண்டபொழுது, இரண்டு மூன்று நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து கலந்து கொள்ள வேண்டி இருந்தது. செய்தியாளர் சந்திப்பை எல்லாம் அடியோடு தவிர்க்கும் அளவிற்கு நேர நெருக்கடி; இடைவெளி இன்றி நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள வேண்டி இருந்த நிலையிலும் கையில் ஒரு நூலை எடுத்துக் கொண்டுதான் அப்போது புறப்பட்டார் நேரு.
“புத்தகத்தைப் படிக்க இன்று உங்களுக்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது?” என்று கேட்ட உதவியாளரிடம் ஓர் அசட்டுப் புன்னகையை சிந்திவிட்டு, “ அது எனக்கும் தெரியும்தான்; இருந்தாலும் கையில் ஒரு நூல் இருக்கட்டுமே; அது எனக்கு ஒரு மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கும்” என்று சொன்னாராம் நேரு.
ஏறக்குறைய நேருவைப் போல, புத்தகப் பிரியரான தெய்வீகன், இலக்கிய படைப்பாளியும் கூட; மாணவர்களுக்காக, குறிப்பாக இளைஞர்களை இலக்கு வைத்து இவர் இயற்றிய நூல்கூட அண்மையில் வெளியிடப்பட்டது.
மனிதர்கள், குறிப்பாக இந்த மலேசிய மண்ணில் வாழும் தமிழர்கள் அதிகமாக படிக்க வேண்டும்; அதைப் போல அதிகமாக சிந்திக்கவும் வேண்டும். பள்ளிகளிலும் உயர்க்கல்வி நிலையங்களிலும் தேர்வில் பெறும் புள்ளிகளுக்காக படிப்பது படிப்பாகாது; அதையும் கடந்து பல்துறைசார் நூல்களைப் படிக்க படிக்கத்தான் மனம் செம்மையுறும்; தெளிவு பெறும். அப்படி செம்மையும் தெளிவும் பெற்ற மனிதர்கள் வாழ்க்கையில் தவறு செய்ய மாட்டார்கள்.
எனவே, நம் மக்கள் நிறைய வாசிக்கப் பழக வேண்டும். குறிப்பாக இளைஞர் அதிகமாக படிக்க வேண்டும் என்று சந்தர்ப்பம் கிட்டும் பொழுதெல்லாம் படிப்பை வலியுறுத்த தெய்வீகன் தவறுவதேயில்லை. சீருடையைக் களைந்து சாதாரண உடையில் இவரைக் கண்டால், இவராவது காவல்துறை அதிகாரியாவது என்று எண்ணும் அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட – கனிவான மனிதராகக் காட்சி தருவார். யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் இந்த காவல் அதிகாரி, எதையும் ஒப்பிட்டு, ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளும் பாங்கு நிறைந்தவர்.
ஆங்கிலம்-மலாய் ஆகிய இரு மொழிகளிலும் விளக்கம் அளிக்கப்பட்ட திருக்குறள் நூல், உமா பதிப்பகத்தின் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழ் உள்ளிட்ட மும்மொழிகளிலும் வெளியீடு கண்ட அந்நூல், சில ஆண்டுகளுக்கு முன் கோலாலம்பூர், ஈப்போ சாலை(ஜாலான் அஸ்லான் ஷா) டைனஸ்டி தங்கும் விடுதியில் வெளியீடு செய்யப்பட்டது. அந்த இலக்கிய விழாவில கலந்து கொண்டு உரையாற்றிய தெய்வீகன், இனம் மொழி சமயம் உள்ளிட்ட அனைத்துக் கூறுகளையும் கடந்து உலக மக்கள் யாவருக்குமான ஒரே இலக்கியப படைப்பான இந்தத் திருக்குறளில் சொல்லப்பட்ட கருத்துகளை மனதில் ஏந்தினால், ஒரு மனிதன்கூட வாழ்வில் தவறிழைக்க மாட்டான்; அப்படியொரு நிலை ஏற்பட்டால், இந்த நாட்டில் மட்டுமல்ல; உலகில் எங்குமே சிறைச்சாலைக்கு வேலை இருக்காது.
எனவே, மும்மொழியில் வார்க்கப்பட்ட இந்தத் திருக்குறளை மாணவர்களுக்கு கொடுப்பதைவிட சிறையில் உள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படியேக் கொடுத்தாலும் மாறுகின்ற மனம் படைத்தவர்களுக்குத்தான் இந்த நூல்கூட பயன்படும். தவறு செய்ய மறுக்கிறவர்கள், வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் என்பதைப் போல, பொல்லாத மனம் படைத்தவர்களுக்கு இந்த நூலும் அடிக்கின்ற ஆயுதமாகப் பயன்படலாம். எனவே, மனிதர்கள் எவராயினும் மனம் பண்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் என்று அந்த நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
காவல்துறை பணிக்கு இடையிடையே தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொது இயக்கத் தலைவர்கள், தவத்திரு பாலயோகி சுவாமிகள் போன்ற ஆன்மிகப் பெருமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புத் தலைவர்களையும் சந்தித்து அளவளாவி சமூகத்தின் நோக்கையும் போக்கையும் அளந்து பார்க்கும் இவர், காவல்துறையில் ஆணையர் பொறுப்பு வகிக்கும் அளவிற்கு உயர்ந்தது, நம் சமுதாயத்திற்கு பெருமையாகும். தற்பொழுது, புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தின் வணிகக் குற்றப் பிரிவின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து விடுபட்டு இந்தப் புதியப் பொறுப்பை இவர் ஏற்க உள்ளார்.
பினாங்கு மாநில காவல்துறைத் தலைவர் பொறுப்பிலிருந்து சுவா கீ லாய், பதவி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பை தெய்வீகன் ஏற்கிறார். முன்னமே, பினாங்கு மாநில காவல்துறை துணைத் தலைவராக பனியாற்றியுள்ளதால், பினாங்கு மக்களுடன் நல்ல பரிச்சயம் உண்டு.
சமூக மேம்பாட்டிலும் தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட தெய்வீகன், சந்தர்ப்பம் கிட்டும் பொழுதெல்லாம் இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தவறுவதில்லை; தலைநகர் செந்துல் மாவட்ட காவல் நிலையத்தின் தலைவராக பொறுப்பு வகித்த தெய்வீகன், கெடா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய காவல் துறையில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட இவர், ஈப்போவை பூர்வீகமாகக் கொண்டவரும் மலாயாப் பல்கலைக் கழகத்தில் உயர்க்கல்வி பெற்றவருமாவார், அநேகமாக, இந்தப் புதிய பொறுப்புடன் பணி நிறைவு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் தெய்வீகனை செம்பருத்தி மிண்டும் வாழ்த்துகிறது.
Vaalthugal