தமிழீழத்தில் ஏற்றப்பட்ட மாவீரர் நாள் ஈகச் சுடர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளின் தண்ணீர் தாங்கி உச்சியில் நேற்றுமாலை 6.05 மணிக்கு திடீரென மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. தகவல் அறிந்ததும் உடனடியாகப் சிறீலங்கா இராணுவத்தினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனால் நேற்றிரவு சில மணிநேரம் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவின.

மாணவர்கள் விடுதியைவிட்டு வெளியேறவில்லை. இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவர்களால் விடுதியின் காப்பாளர்கள் இருவர் தாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

முன்னதாக, யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிகளின் உச்சியில் சரியாக 6.05 மணிக்கு மாவீரர் நாள் ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கட்டடத்தின் நாற்புறமும் அறைகளிலும் மெழுகுதிரிகளை ஏற்றி மாணவர்கள் அகவணக்கம் செலுத்தினர்.

விடுதியில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெறுவதை அறிந்தும், விடுதியின் உச்சியில் ஈகச் சுடர் ஏற்றப்பட்டதைக் கண்டும் இராணுவத்தினர் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்தனர். ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகள் இரண்டும் சுற்றி வளைக்கப்பட்டன.

விடுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் சீருடையுடனும் சீருடை இல்லாமலும் கொட்டன்கள், பொல்லுகள் சகிதம் நின்றனர் என்று மாணவர்கள் கூறினர். இரவு 7.30 மணியளவில் அப்பகுதியிலிருந்த பெரும்பாலான படையினர் வெளியேறினர். அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறவில்லை.