தமிழர் பிரச்சனைக்கு தீர்வு… மோடியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் வலியுறுத்தல்

கொழும்பு: ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர்.

இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இன்று சந்தித்தனர், இரா. சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் மோடியை சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பின் போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர். தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதன் மூலமாக இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மோடிக்கு சுட்டிக்காட்டினர்.

இச்சந்திப்பின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். இந்தியத் தூதர் ரன்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் இருந்தனர்.

மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே, மோடியை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது இருநாடுகளிடையேயான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது.

மைத்திரியின் பரிசு

முன்னதாக அதிபர் மாளிகையில் மைத்திரிபால சிறிசேனாவை மோடி சந்தித்து பேசினார். மோடிக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்த சிறிசேனா, தியான நிலையில் உள்ள புத்தர் சிலையையும் பரிசாக கொடுத்தார். இந்த புத்தர் சிலை வெண் தேக்குமரத்தால் ஆனது. இச்சிலை கையால் செதுக்கப்பட்டது. இச்சிலையை கையால் செதுக்க 2 ஆண்டுகளானதாம்.

tamil.oneindia.com

TAGS: