விடுதலைப்புலிகளை கேவலப்படுத்தாதீர்கள்; மைத்திரிக்கு சரத்பொன்சேகா கடுமையான பதில்!

ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காகவே விடுதலைப்புலிகளின் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின்று போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்திக் கேவலப்படுத்த முயல்வது படுமுட்டாள்தனம் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு இந்தியா, கனடா, சுவிஸ், ஆஸ்திரேலியா, இலண்டன், அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ் என உலகெங்கும் வாழ்ந்த தமிழர்கள் நிதி உதவிகளை வழங்கினார்கள். அந்த நிதிகள் மூலம்தான் போராட்டத்தைப் பிரபாகரன் முன்னெடுத்தார். அந்த நிதிகள் மூலம்தான் நவீனரக ஆயுதங்களைக் கூட வெளிநாடுகளில் இருந்து விடுதலைப்புலிகள் கொள்வனவு செய்தனர் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

போதைப் பொருள் விற்பனை தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருமானமாக இருந்தது எனவும், உலகத்திலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பிரபாகரனுக்குத் தொடர்பு இருந்தது எனவும், போதைப் பொருள் வர்த்தகத்தின் மூலம் தான் பிரபாகரன் ஆயுதங்களை வாங்கிப் போர் நடத்தினார் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

விடுதலைப்புலிகளின் தலைவர் மது, போதையை விரும்பாதவர். அதற்கு அவர் எதிரானவர். போர்க்காலங்களில் இது எமக்கு நன்கு தெரியும்.

இறுதிப்போர் ஆரம்பமான போது விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை ஏற்றி வந்த பல கப்பல்களை எமது படையினர் தாக்கி அழித்த வரலாறும் உள்ளது.

இன்றும்கூட புலம்பெயர் அமைப்புகள் விடுதலைப்புலிகளின் நினைவு தினங்களை பெரும் தொகைப் பணங்களைச் செலவிட்டு பெரு விழாவாக நடத்தி வருகின்றார்கள்.

விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கில் போதைப்பொருள் விற்பனை கொடிகட்டிப் பிறக்கவில்லை. போர் நிறைவுக்கு வந்த பின்னர்தான் வடக்கில் போதைப்பொருள் பாவனையும், விற்பனையும் தலைவிரித்தாடுகின்றது. இதை ஜனாதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆயுதப் போரின் போது எம்மீது விடுதலைப்புலிகள் மிலேச்சத்தனமான படுமோசமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள். எனினும், இறுதியில் அவர்களை நாம் கூண்டோடு இல்லாதொழித்தோம். மாபெரும் வெற்றிச் செய்தியை இந்த நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்தோம். ஆனால், விடுதலைப்புலிகள் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக அவர்களையும் அவர்களின் போராட்டத்தையும் கேவலப்படுத்தி எவரும் கருத்துக்களை வெளியிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: