மலேசியாவின் கல்வி கொள்கையின் வழி ஒரு நிரந்தரமான தரமான ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி சூழல் உண்டாகாது. அனைவருக்கும் சமத்துவம் என்பதோ அறிவாளிகளுக்கு அந்தஸ்து என்பதோ கிடையாது.
இனவாதத்தின் பிடியில் கல்வி கொள்கைகள் சிக்கிகொண்டுள்ளதால், அதனால் ஒரு கற்ற அறிவாற்றல் கொண்ட மலேசிய சமூதாயத்தை உருவாக்க இயலாது.
இவைகளுக்கு இடையே, அரசாங்கம் தமிழ்பள்ளிகளை நமக்கென நடத்துவது பாரட்டக் கூடியது. ஆரம்ப தாய்மொழி கல்வி வழி அறிவாற்றல் ஆழமாகும் என்பது பல ஆய்வுகள் மூலம் நிருபிக்கப்படுள்ளன. சிலர் இதை நம்புவதில்லை காரணம், அவர்களுக்கு அந்த ஆற்றலை அறிய வாய்ப்பில்லாமல் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் மூழ்கியிருப்பதாகும்.
“உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், எப்படி கற்றுக்கொள்ள முடியும்? என்ற தலைப்பில் 2016 இல் யுனஸ்கோ வெளியிட்ட ஆய்வின் முடிவை நமது தமிழ்ப்பள்ளி செல்வங்கள் மெய்பித்து வருகின்றனர்.
சீனப் பள்ளிகளையும் மலாய்ப் பள்ளிகளையும் பின்தள்ளி பல அடைவு நிலையில் தமிழ்ப்பள்ளிகள் புரிந்த சாதனைகள் உண்மையிலேயே நமக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
அடுத்த 15 அல்லது 20 ஆண்டுகளில் இவர்கள்தான் பல்வேறுத் துறைகளில் வல்லுநர்களாகவும், கல்விமான்களாகவும், அரசியல், சமூகத் தலைவர்களாகவும் நாட்டை வலம் வரப் போகிறார்கள் என்பதில் துளியளவும் ஐயமில்லை.
இத்தருணத்தில், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் இப்படிப்பட்ட அறிவுத்திறன்மிக்கத் தூண்களை உருவாக்கும் தமிழ்ப்பள்ளிகளை மூடச் சொல்லி திமிர் போதையில் உளரும் இனவெறி ஜந்துகளை சாக்கடை சனியன்கள் என்று முத்திரைக் குத்தினால் அதில் தவரே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ், சீனப்பள்ளிகளை மூடச் சொல்வதில் அப்படி என்னதான் இவர்கள் இன்பம் காண்கின்றனர் என்று புரியவில்லை. அதிலும் ஒரு படி மேலாக, இந்நாட்டில் தமிழ், சீனப்பள்ளிகள் அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒன்று என வழக்கறிஞர் ஒருவர் அண்மையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
நீதிபதி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்ட போதிலும் தமிழ் சீனப்பள்ளிகளுக்கு எதிராக ஏன்தான் தேவையில்லாத இந்த வெறியாட்டம் என்றுதான் தெரியவில்லை.
இந்நாட்டில் சீன சமூகத்தினர் உயர்ந்து நிற்பதற்கு முதல் காரணம் கல்வி. குறிப்பாக பொருளாதாரத்தில் நாம் அனைவரும் அண்ணாந்துப் பார்க்கும் அளவுக்கு அவர்கள் அடைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு மூலக்காரணம் கல்வி, ஒற்றுமை, உழைப்பு, ஆகிய 3 அம்சங்களுக்கும் அவர்கள் முன்னுரிமை கொடுப்பதுதான்.
இந்நிலையில், கல்வியில் நம் சமூகம் அடைந்துவரும் வளர்ச்சியை வைத்துப் பார்த்தால் உலகம் வியக்கும் அளவுக்கு இந்நாட்டில் நாம் உயர்வடையும் காலம் வெகுதூரமில்லை என்றேத் தெரிகிறது. எனினும் திட்டமிட்டப்படி குறித்த நேரத்தில் அந்த இலக்கை அடைவதற்கு நாம் அனைவருமே கடப்பாடுக்கொண்டுள்ளோம்.
முதல் கட்டமாக அடுத்த மாதத்தில் படிவம் ஒன்றில் கால் பதிக்கவிருக்கும் நம் செல்வங்களுக்கு முறையான வழித் தடத்தை அமைத்துக் கொடுப்பதாகும்.முதல் முறையாக மற்ற இன மாணவர்களுடன் இனைந்து கல்வி பயிலத் தொடங்கும் அவர்களுக்கு ‘கல்ச்சர் ஷொக்’ எனப்படும் கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாகும் நிலை அதிகமாகவே இருக்கும்.
இந்த சூழ்நிலை அவர்களுடைய கல்வியை பாதிக்காமல் இருப்பதை பெற்றோர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் பரிவுமிக்க சமுதாயமும் உறுதி செய்ய வேண்டும்.
அவர்கள் பல்கலைக் கழகம் வரையில் தங்குதடையின்றி பயணிப்பதை உறுதி செய்வதற்கு கல்வி இயக்கங்களை அமைப்பது குறித்து சமுதாயத் தலைவர்களும், கல்விமான்களும், அரசு சாரா இயக்கங்களும் அவசியம் பரிசீலிக்க வேண்டும்.
இதனைத்தான் சீனர்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். கல்வித் தொடர்பான எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் சக்திவாய்ந்த அந்த இயக்கங்கள் உடனே களமிறங்குகின்றன.ஆக, அதுபோன்று அமைக்கப்படும் நமது இயக்கங்கள், கல்வியில் பின்தங்கியிருக்கும் நம் மாணவர்களையும் தூக்கிவிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அதே சமயத்தில் தேசியப்பள்ளிகளில் இருந்து இடைநிலைப் பள்ளிகளுக்கு செல்லும் நம் இன மாணவர்களையும் அந்த இயக்கங்கள் அரவணைக்கத் தவரக்கூடாது.