இலங்கை தமிழர்கள் 8 பேரை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை

மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்புக்கு இணங்க அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தமிழ் மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை போன்று அமைந்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“அண்மையில் பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்தப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் நீதிமன்றத்தில் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், சிறை வைக்கப்பட்டிருந்த ராணுவத்தினர் 34 பேரும் அடங்குகின்றனர். அதிலும் குறிப்பாக, மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தறுத்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்” என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், இது தமிழர்களுக்கு விடுக்கின்ற எச்சரிக்கை போன்று அமைந்துள்ளது” என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் வைத்து 19 டிசம்பர் 2000ஆம் ஆண்டு ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட எட்டு தமிழர்களின் சடலங்கள், கழுத்தறுக்கப்பட்ட நிலையில், மலசலக் குழியொன்றிலிருந்து மீட்கப்பட்டன.

மேற்படி நபர்கள் கடத்தப்பட்ட மறுநாள் 20ஆம் தேதி இந்தப் படுகொலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எட்டுப் பேரில் 05 வயது சிறுவனும், பதின்ம வயதுடைய மூவரும் அடங்குவர்.

இதனையடுத்து இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்டார்கள் எனும் குற்றசாட்டில் ராணுவத்தைச் சேர்ந்த ஐவர், போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆம் தேதி, ராணுவத்தில் சார்ஜன் தரத்திலிருந்த சுனில் ரத்நாயக்க என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சந்தேக நபர்களான ஏனைய ராணுவத்தினர் நால்வருக்கும் எதிராக, போதியளவு ஆதாரங்கள் இல்லை என்கிற காரணத்தினால், அவர்களை குறித்த வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

இவ்விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியபோது,”தண்டனை விதிக்கப்பட்ட ராணுவத்தினரை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கும்போது, சிறையிலுள்ள முன்னாள் போராளிகளை ஏன் விடுவிக்க முடியாது,” என்று கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “மேற்படி 34 முன்னாள் ராணுவத்தினருக்கு புதுவருடத்தன்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி உள்ள ஒரு நாட்டில், எல்லோருக்கு பொதுவானதாக சட்டம் இருக்க வேண்டும். சகல மக்களும் சட்டத்தின் முன் – சமமாக மதிக்கப்பட வேணே்டும்.

சிறைச்சாலைகளில் சந்தேக நபர்களாக அல்லது தண்டனை அனுபவித்துக் கொண்டு, கடந்த காலங்களில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் இருக்கின்றார்கள். அதேபோன்று முன்னாள் ராணுவத்தினர் மற்றும் போலீஸாரும் உள்ளனர்.

எனவே, கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பினை, வழங்குகின்றபோது, பல்வின சமூகங்களின் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும். அப்படிச் செய்திருந்தால் எல்லா இன மக்களும் அந்தப் பொதுமன்னிப்பினை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.

உதாரணமாக ஆனந்த சுதாகரன் என்பவர் சிறையில் கைதியாக இருக்கின்றார். அவருடைய மனைவி கடந்த வருடம் மரணமடைந்தார். இந்த நிலையில், மனைவியின் அடக்க நிகழ்வுக்கு அவர் சிறையிலிருந்து வந்து, மீண்டும் சிறைச்சாலை வாகனத்தில் திரும்பிய போது, அவரின் பிள்ளைகளும் அந்த வாகனத்தில் ஏறுவதற்கு முயற்சித்தனர். ஏனென்றால் அந்தப் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு எவரும் இருக்கவில்லை.

எனவே, அந்தப் பிள்ளைகளின் அனாதரவான நிலையினைக் கருத்திற் கொண்டு, அவர்களின் தந்தையை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை.

இவ்வாறு சிறு குழந்தைகளின் பரிதாப நிலையைக் கூட கவனத்தில் எடுக்காமல் செயற்படுகின்ற தலைவர்களால், மிருசுவிலில் எட்டுப் பேரின் குரல் வளையை அறுத்து படுகொலை செய்த ஒரு மரண தண்டனைக் கைதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த செயற்பாடானது ஜனநாயகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலாகும்,” என்றும் அவர் தெரிவித்தார்.