காணமால் போனோர் தொடர்பில் தேவையான, உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மூத்த அதிகாரி ஹன்னா சிங்கர் இடம் தான் கூறியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, காணாமல் போனவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து, தாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர்க்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த 17ஆம் தேதி கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து மேலதிக தெளிவை வழங்கும் பொருட்டு, ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
‘காணாமல் போனவர்கள்’ என பட்டியலிடப்பட்டுள்ள 20,000 பேரும் இறந்துவிட்டதாக, ஹானா சிங்கரிடம் தான் தெரிவித்ததாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தச் செய்திகள் அனைத்திலும் இறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்னதாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஹன்னா சிங்கரிடம் தான் தெரிவித்த மிக முக்கியமான விடயம், வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
” நானோ அல்லது சிங்கர் அம்மையாரோ, எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்ற எண்ணிக்கை தொடர்பாக பேசிக்கொள்ளவில்லை என்பதே உண்மை ஆகும். இந்த விடயமானது, பொதுவாகவும் மேலோட்டமாகவுமே கலந்துரையாடப்பட்டதே அல்லாமல், அது தொடர்பாக குறிப்பான விபரங்கள் எதுவும் பேசப்படவில்லை”.
“மிகவும் துரதிர்ஷ்டவசமாக 20,000 க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என நான் ஒப்புக்கொண்டதாகவும், தவறாக அர்த்தப்படுத்தி அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆனால், நான் அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை. எத்தனை பேர் காணாமல் போயினர் அல்லது இறந்துவிட்டனர் என்ற எண்ணிக்கை தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை”.
இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் அமைதியையும் கட்டியெழுப்புவதற்கு எம்மிடமிருக்கும் வேலைத்திட்டம் என்னவென சிங்கர் அம்மையார் அறிய விரும்பிய போது, பொருளாதார அபிவிருத்தி, தமிழ் மக்களையும் காவல்துறையில் சேர்ப்பது என்பவற்றுடன், காணாமல் போனோர் பிரச்சனைக்கும் தீர்வு ஒன்றை காண நான் முயற்சிக்கவிருப்பதாக அவரிடம் நான் விளக்கினேன்.
போரில் இறந்த ஏராளமானோரின் உடல்கள் மீட்கப்படவில்லை என்பதனால், காணாமல் போனவர்களின் நிலை என்னவென்று அவர்களது குடும்பத்தினர் தெரியாது இருக்கின்றனர். அதே வேளையில் – இந்தக் குடும்பங்களில் பெரும்பாலானவர்கள், காணாமல்போன தமது அன்புக்குரியவர்கள் விடுதலைப் புலிகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதன் சாட்சிகளாகவும் இருக்கின்றனர் என சிங்கர் அம்மையாருக்கு நான் விளக்கினேன்.
எனவே, தேவையான, உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், காணாமல்போனோரின் குடும்பங்கள் தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான உதவிகளையும் வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம் என, ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர் இடம் நான் தெளிவுபடுத்தினேன்,” என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.