கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ள சீனாவின் வுஹான் மற்றும் சிச்சுஆன் மாகாணங்களில் உள்ள இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்காக ஜனாதிபதி அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை ஆகியன இணைந்து விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
150 மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை
மாகாணத்தில் செங்டு நகரில் உள்ள சுமார் 150 மாணவர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்டிருந்த செய்தியொன்றில் தெரிவித்திருந்தது.
இதற்காக ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சர்வதேச உறவுகளுக்கான மேலதிகச் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
தெனின் நகரில் உள்ள இலங்கையைச் சேர்ந்த மேலும் 30 மாணவர்கள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் கல்விகற்று வரும் 790 பேர் தொடர்பான தகவல்கள் தூதரகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்களும் விரைவாக அழைத்து வரப்படவுள்ளனர் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீனா எங்கும் பரந்திருக்கும் அனைத்து இலங்கை மாணவர்கள் மற்றும் இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
தூதரக அதிகாரிகளுக்கும் இலங்கையர்களுக்குமிடையே We chat தொடர்பாடல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் அனைவரும் விமான நிலையத்தில் நோய்த்தொற்று தடுப்புக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்திருக்கின்றார்.
காய்ச்சல் நிலைமைக்குள்ளாகி இருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்கள் தொற்று நோய் மருத்துவமனைக்கு (IDH) அனுப்பி வைக்கப்படுவர் எனவும், அத்தகையவர்களது இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சி அனைத்து சுகாதார அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார் என்றும், நோய் கண்காணிப்பு வசதிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடம் உள்ளது எனவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்திய உபகரணங்கள் அல்லது ரசாயனப் பொருட்களை கொண்டு வருவதற்கான தேவை ஏற்பட்டால் விமானத்தின் மூலம் கொண்டு வருவதற்கு அறிவுறுத்தல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
அதேவேளை தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு உதவிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனமும் முன்வந்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருக்கிறது.