கொரோனா கற்பிக்கும் பாடமும், கற்க மறுக்கும் மனிதனும்

கா. ஆறுமுகம் – அறிவியலில் அபார நடைபோடும் அமெரிக்காவை மண்டியிட வைத்துள்ளது இந்த மிக நுண்ணிய கிருமி. இதற்கான மருத்துவம் இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை.

சுமார் பத்தாண்டுகளுக்கு (2009-2010) முன்பு பரவிய பன்றிக் காய்சலை நாம் மறந்திருப்போம். அப்போது H1N1 என்று அழைக்கப்பட்ட அந்த தொற்று நோய் 214 நாடுகளுக்கு பரவியதோடு 18,449 பேர்களை பலிகொண்டது. இதில் பெரும்பாலோர் இளவயதினர் ஆவர்.

அதன்பிறகு தற்போது வந்துள்ள நோவல் கோரோனா சார்ஸ் கோவி-2 (novel coronavirus called SARS-CoV-2), இதை கோவிட்-19 எனப்பெயரிட்டுள்ளனர். பன்றிக்காய்சல் குழந்தைகளையும் இளைய வயதினரையும் தாக்கியது. ஆனால், கோவிட் 60 வயதுக்கு மேற்பட்ட  முதியவர்களைத்தான் அதிகம் பலியாக்குகிறது.

இவை இரண்டுக்கும் முன்பு 2000-இல் சார்ஸ் (SARS) என்ற சலிக்காய்சல் கிருமி தொற்று நோயாக பரவி பலரை பலி கொண்டது.

தற்போது இந்த கோவிட் நம்மை தாக்கியுள்ளது. இதை நாம் எதிர்பார்க்கவில்லை என்றால், அது நமது அறியாமையா அல்லது மடமையா? என்ற வினாவும் எழுகிறது.

கடந்த பத்தாண்டுகளாக இது சார்பான போதுமான ஆய்வுகளையும், இயற்கை சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கையுடன் ஒன்றிய வாழ்வியலை முன்னிலை படுத்த உலக அளவில் போதுமான முனைப்புகள் இல்லை.

இந்த கோவிட் பரவும் விதம் மிகவும் பரபரப்பாக உள்ளது.

கடந்த சனவரி மாதம் 22ஆம் தேதி முதல் இன்றுவரையில் (22.1.2020 – 13.4.2020) இந்த நோய் பற்றியுள்ளவர்களின் எண்ணிக்கை 1,926,305 ஆகும். இறந்தவர்களின் எண்ணிக்கை 119,732 ஆகும்.

அதாவது ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய இரட்டிப்பாக இதன் எண்ணிக்கை கூடி வருகிறது. அதிதீவிர அளவில் அறிவியல் வளர்ச்சி கண்ட நிலையில் இந்த ஒரு கிருமி உலகத்தை அப்படியே   ஆட்கொண்டுள்ளது எதிர்பார்க்கப்படாத ஒன்றாக உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் இதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வை தீவிரமாக மேற்கொண்டுள்ளதாக தனது அகபக்கத்தில் கூறுகிறது. இதன் காலகட்டம் வரையறுக்கப்பட வில்லை. இன்னும் ஓராண்டுக்கு மேலாகலாம்.

இந்தக் காலகட்டத்தில் கோவிட்டின் பாதிப்புகள் இன்னும் அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நோய் மனிதனை தாக்குகிறது. அறிவியல் வளர்ச்சியால் அதை தடை செய்ய இயலவில்லை.

மனிதனும் இயற்கையும் இணைந்து வாழும் வழிமுறைகளுக்கு நாம் திரும்ப வேண்டும் என்ற பாடத்தை கோவிட் சொல்லாமல் சொல்கிறதோ!