வழக்கறிஞரான தேவிகா சாய், சோதனைகளை சாதனையாக்கியவர்

இராகவன் கருப்பையா-  ஒரு பயங்கர சாலை விபத்து அதை அடுத்து கணவரின் இருதய அறுவை சிகிச்சை வரையில் தனது வாழ்வில் அடுத்தடுத்து நிகழ்ந்த  பெரும் சோதனைகளை வைராக்கியத்துடன் கடந்து தன் இலக்கை அடைந்துள்ளார் தேவிகா சாய் பாலகிருஷ்ணன்.

பல்வேறு சவால்களுக்கிடையே தனது 14 ஆண்டு கால கனவு நிறைவேறியதாகக் கூறுகிறார், ஒரு அதிகாரப்பூர்வ வழக்கறிஞராககவும் வழக்குரைஞராகவும் கடந்த வாரம் நியமனம் பெற்ற 41 வயது தேவிகா.

சிலாங்கூர், பூச்சோங்கில் பாலகிருஷ்ணன் – தனலட்சுமி தம்பதியருக்கு 2ஆவது மகளாகப் பிறந்த அவர் தனது தொடக்க கால கல்வியை சிகாம்புட் தமிழ் பள்ளியிலும் செந்தூல் தமிழ் பள்ளியிலும் நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செந்தூல் கொன்வென் மற்றும் அசுந்தா பள்ளிகளில் இடைநிலை கல்வி பயின்ற தேவிகா, பிறகு தனியார் துறையில் வேலைக்கு அமர்ந்தார்.

கடந்த 2006ஆம் ஆண்டில் காப்புறுதி நிர்வாகி சரவணனை மனம் புரிந்த அவர், சமூகச் சேவைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.

குறிப்பாக திவால் மற்றும் விவாகரத்து போன்ற விஷயங்களில் உதவி தேவைப்படுவோருக்கு தன்னால் இயன்ற ஆலோசனைகளையும் அடிப்படை சேவைகளையும் அவர் வழங்கியுள்ளார்.

“அந்த காலக்கட்டத்தில்தான், ஒரு வழக்கறிஞராக இருந்தால் இதுபோன்ற சேவைகளை விரிவாக்கம் செய்து மக்களுக்கு நிறைவாக பங்காற்றலாமே என்று எனக்குத் தோன்றியது.”

“எனவே என் கணவரின் முழு ஆதரவோடும் ஊக்குவிப்போடும் தனியார் கல்லூரி ஒன்றில் பதிவு செய்து சட்டத்துறையில் என் உயர் கல்வியைத் தொடங்கினேன். அப்போது எங்களுக்கு இரு குழந்தைகள் இருந்தனர்.”

எனது இறுதியாண்டு கல்வியை இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்ஃபர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்ய அங்குச் சென்ற போது, 8 வயது மற்றும் 5 வயதிலான இரு பிள்ளைகளையும் என் கணவரின் பராமரிப்பில் விட்டுச் சென்றேன்.”

“குடும்பத்தைப் பிரிந்து காலத்தை நகர்த்துவது அப்போது எனக்கு மிகவும் சிரமமாக இருந்த போதிலும், அதையும் தாங்கிக் கொண்டு எனது இலட்சியப் பாதையில் முழு கவனம் செலுத்தினேன.”

“சட்டத்துறையில் அங்கு பட்டம் பெற்று நாடு திரும்பியவுடன்  2019ஆம் ஆண்டில் மலேசியாவில் வழக்கறிஞர் சான்றிதழுக்கான தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருந்த போதுதான் எனக்கு மிகப்பெரிய சோதனையொன்று ஏற்பட்டது.”

“கார் விபத்தொன்றில் சிக்கிய எனக்கு முதுகெலும்பில் கடுமையான காயம்  ஏற்பட்டு பல மாதங்கள் படுத்த படுக்கையானேன். இருந்த போதிலும், ஒரு தேர்ச்சி பெற்ற வழக்கறிஞராக வேண்டும் எனும் குறிக்கோளில் இருந்து கிஞ்சிற்றும் நான் நகரவில்லை.”

“அறுவை சிகிச்சைக்குப் பிறகு சற்று குணமடைந்த நான் மீண்டும் தேர்வு எழுத பதிவு செய்த போது 2ஆவது சோதனை குறுக்கிட்டு தடங்களை ஏற்படுத்தியது. அதாவது 2020ஆம் ஆண்டில் உலகை புரட்டிப் போட்ட கோறனி நச்சிலினால் தேர்வுகள் தடைபட்டன.”

“அதனையும் தாண்டி 3ஆவது முறையாக தேர்வு எழுத நான் முயற்சி மேற்கொண்ட போது என் குடும்பத்தில் மற்றொரு பேரிடி விழுந்தது.”

“திடீரென என் கணவருக்கு இருதய நோய் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலுக்கு உள்ளானதால் தற்காலிகத்திற்கு தேர்வில் நாள் கவனம் செலுத்த இயலவில்லை.”

எது எப்படியாயினும், ‘திசை திரும்பாத அம்புதான் ஆற்றலுடையது. அதுவே இலக்கை அடையும்,’ என்பதற்கு ஏற்ப, தனது கணவர் பூரண குணமடைந்தவுடன் மீண்டும் தேர்வுகளுக்கு பதிவு செய்து கடந்த 2023ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றார் தேவிகா.

தற்போது கவின்ரா, லக்ஷனா, துஷேன்ரா சாய் ஆகிய 3 பிள்ளைகளுக்குத் தாயான அவர் சொந்த வழக்கறிஞர் அலுவலகம் ஒன்றையும் விரைவில் நிறுவவிருக்கிறார்.

இவரின் மன உறுதியும் விடா முயற்சியும் பாராட்டத் தக்கவை. அவரின் கனவுகள் தொடர்ந்து மெய்பட நமது வாழ்த்துக்கள்.