இராகவன் கருப்பையா – தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை கடந்த மாதம் ‘ஹராம்’ என சில மலாய் அரசியல் தலைவர்கள் முத்திரை குத்தியதைத் தொடர்ந்து, ‘மடை திறந்த வெள்ளமாக’ பல இடங்களில் தற்போது இந்து கோயில்களுக்கு நெருக்குதல்கள் ஏற்படுவதை நாம் பார்க்கிறோம்.
பிறர் நிலத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆலயங்கள் கடந்த கால சூழலுக்கு ஏற்ப, அகநிலைக்குரிய ஒரு விஷயம் என்பது எல்லாருக்கும் தெரியும்.
எனினும் ம.இ.கா. தலைமையகமும் இத்தகைய ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நம் எல்லாருக்கம் அது அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது.
தலைநகர் ஜாலான் ரஹ்மாட்டில் அமைந்துள்ள ம.இ.கா. தலைமையகக் கட்டிடத்திற்கு பக்கத்தில் அக்கட்சிக்கு சொந்தமான ஒரு பெரிய நிலம் நீண்ட நாட்களாகவே காலியாக உள்ளது.
இந்த நிலத்தில்தான் ம.இ.கா. அதன் பதிய தலைமையகக் கட்டிடத்தை நிர்மாணிக்கவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது நாம் அறிந்ததே.
திட்டமிடப்பட்டுள்ள அந்த 44 மாடிக் கட்டிடம் சுமார் 250 மில்லியன் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. எனினும் இதுவரையிலும் கட்டுமானப் பணிகள் எதனையும் அங்கு காணவில்லை.
அந்நிலத்தின் ஒரு மூலையில் சிறிய அளவிலான காளியம்மன் ஆலயமொன்றுக்கான நிர்மாணிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ‘அரசாங்க அனுமதி பெறவில்லை,’ எனும் அடிப்படையில் டி.பி.கே.எல். எனப்படும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் அண்மையில் அதற்கு தடையுத்தரவு விதித்தது.
சொந்த நிலமாக இருந்தாலும் வழிபாட்டுத் தளம் ஒன்றை அமைப்பதற்கு அவ்வட்டார ஊராட்சி மன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனும் விவரம் ம.இ.கா. தலைமையகத்திற்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான்.
குறைந்த பட்சம் அந்த கட்டுமானப் பணியை மேற்கொண்ட குத்தகையாளருக்காவது இந்த விதிமுறை குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
இதற்கிடையே தங்களுடைய மசூதிக்கு அருகில் இந்து கோயில் ஒன்றை கட்டக்கூடாது என சுமார் 30 பேர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று அங்கு அமைதி மறியலில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஜாலான் ரஹ்மாட் சாலைக்கு அப்பால் சுமார் 40 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ‘பெர்கிம்’ எனப்படும் மலேசிய முஸ்லிம் சமூக நல இயக்கத்தின் தலைமையகக் கட்டிடம் உள்ளது. அக்கட்டிடத்தின் உள்ளே, கண்ணாடியால் மூடப்பட்டுள்ள மேல் மாடியில்தான் அவர்களுடைய மசூதி அமையப் பெற்றுள்ளது.
எனினும், ‘இந்தக் கோயிலினால் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும், முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்கு இடையூராக இருக்கும், நாற்றம் அடிக்கும், சத்தம் கேட்கும்,’ போன்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏத்தி அவர்கள் மறியல் செய்தனர். மதம் மாறிய, சீன சமூகத்தைச் சேர்ந்த 2 பேர்கள் அதற்கு தலைமையேற்றிருந்தனர்.
“ஒரு தனியார் நிலத்தில் அந்த ஆலயம் கட்டப்படுகிறது. அக்கோயில் அந்நிலத்தின் உரிமையாளரின் சொந்த வழிபாட்டுக்குத்தானே ஒழிய பொது மக்களுக்காக அல்ல. அந்த ஆலயம் இடைக்காலத்திற்குதான் அங்கு இருக்கும்,” என ம.இ.கா. துணைத் தலைவர் சரவணன் சாளிக்க விடுத்த அறிக்கையை நாம் அதுவும் ஒரு வியூகம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
இருப்பினும், விஷயத்தை சுற்றி வலைக்காமல், “அந்நிலம் ம.இ.கா.விற்குச் சொந்தம். நாங்கள்தான் அந்த ஆலயத்தை அங்கு கட்டுகிறோம்,” என்று நேரடியாகவே சொல்லியிருக்கலாமே என நினைக்கத் தோன்றுகிறது.
அக்கட்சியின் உதவித் தலைவர் முருகையா, ஊடகத்திற்கு வழங்கிய விரிவான விளக்கத்திற்கு பிறகுதான் இவ்விஷயத்தில் தெளிவு பிறந்தது.
“டி.பி.கே.எல். தரப்பிடம் நாங்கள் முறையீட்டுக் கடிதம் அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் கட்டுமானப் பணிகளைத் தொடருவோம். அப்படி கிடைக்கவில்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி சிந்திப்போம்,” என்று அவர் கூறினார்.
இவ்விவகாரத்தில் அநாவசிய நெருக்குதலுக்கு அடிபணிந்து ம.இ.கா. பின்வாங்குமா அல்லது “அது எங்களுடைய சொந்த நிலம்,” எனும் அடிப்படையில் உரிமைக்காக அது போராடுமா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
“இந்தியர்களின் உரிமைக்காக போராடுகிறோம்,” என்று பறைசாற்றிக் கொள்ளும் அக்கட்சிக்கு, இந்த முடிவானது, அதன் மீது நம்பிக்கை இழந்திருக்கும் நம் சமூகத்தினரிடையே பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.