இராகவன் கருப்பையா- நம் நாட்டில் முதல் வெளிப்புற விளையாட்டு அரங்கத்தைக் கட்டியது தமிழர்கள்தான் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவரம் தற்போதைய இளைய தலைமுறையினரில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தலைநகர் பெரிய மருத்துவமனை வளாகத்தில், ஜாலான் டொக்டர் லத்திஃப், ஜாலான் ராஜா மூடா சந்திப்பில் அமைந்துள்ள அந்த அரங்கத்தின் தற்போதைய பெயர் ‘ஸ்டேடியம் ஜாலான் ராஜா மூடா’ என்பதாகும்.
1914ஆம் ஆண்டில் அரசாங்கத்தில் பணியாற்றிய சில இலங்கைத் தமிழர்கள் ஒன்று கூடி, தமிழர்களுக்காகவே பிரத்தியேகமாக ஒரு கலாச்சார, விளையாட்டு மையம் வேண்டும் என தீர்மானித்து, டி.பி.சி.ஏ(TPCA – Tamilians Physical & Cultural Association)) எனும் சங்கத்தை அமைத்தனர்.
அதற்கு அடுத்த ஆண்டு தங்களுடையத் திட்டத்தை அப்போதைய சிலாங்கூர் சுல்தானிடம் தெரிவித்த அவர்கள், சங்கத்திற்கான விளையாட்டு மையம் ஒன்றை நிறுவுவதற்கு நிலம் ஒன்று வேண்டும் எனும் கோரிக்கையையும் முன்வைத்தனர்.
உடனே அதற்கு இணக்கம் தெரிவித்த மாநில ஆட்சியாளர், பெரிய மருத்துவமனை (அப்போது மாவட்ட மருத்துவமனை) வளாகத்தில் இருந்த ஒரு சதுப்பு நிலத்தை வழங்கி அச்சங்கத்தினரை ஊக்கப்படுத்தினார்.
பள்ளமாகக் கிடந்த அந்நிலத்தை சீர்படுத்தி விளையாட்டு மைதானம் ஒன்றை அங்கு அமைப்பதற்கு பொது மக்களிடமிருந்து நிதி திரட்டி, 1919 ஆண்டு வாக்கில் சங்கத்திற்கான கட்டிடம் ஒன்றையும் அதன் உறுப்பினர்கள் அங்கு நிர்மாணித்தனர்.
அதனைத் தொடர்ந்து, தேசிய நிலையிலான கிரிக்கெட், டென்னில், ஹொக்கி, கால்பந்து மற்றும் பூப்பந்து போன்ற பல விளையாட்டுக்களை நடத்துவதற்கான வசதிகளை அந்த மைதானம் கொண்டிருந்தது.
பிறகு 1955ஆம் ஆண்டில் சுமார் 7,000 பேர்கள் அமரக்கூடிய ஒரு அரங்கத்தை அங்கு நிர்மாணித்த அச்சங்கம் தேசிய சாதனை ஏற்படுத்தியது மட்டுமின்றி மலேசிய இந்தியர்களுக்கு ஒரு வரலாற்று முத்திரையையும் பதித்தது என்றே சொல்ல வேண்டும்.
அதன் அடிப்படையில், டி.பி.சி.ஏ. அரங்கம்தான் நாட்டின் முதல் ‘ஸ்டேடியம்’ என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அரங்கமான ‘மெர்டேக்கா ஸ்டேடியம்’ கூட 2 ஆண்டுகள் கழித்து 1957ஆம் ஆண்டில்தான் கட்டப்பட்டது.
கடந்த 1960களிலும் 70ஆம் ஆண்டுகளிலும் கிரிக்கெட், கால்பந்து, ஹொக்கி மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களில் எண்ணற்ற தலைச் சிறந்த ஆட்டக்காரர்களை உருவாக்குவதில் அந்த மையம் முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை நாம் நினைவுக் கூறத்தான் வேண்டும்.
அது மட்டுமின்றி, டி.பி.சி.ஏ. கால்பந்து கிளப், VOC(வ.உ.சிதம்பரம் பிள்ளை), செந்தூல் இந்தியன் ரேஞ்சர்ஸ் மற்றும் கிலாட் கிளப் போன்ற, அச்சமயத்தின் நாட்டின் முன்னணி இந்திய கால்பந்து அணிகளின் வழி உச்சத்தை அடைந்த பல விளையாட்டு வீரர்களுக்கும் அந்த அரங்கம் சரித்திரம் கூறும் ஒரு மையமாகும்.
டி.பி.சி.ஏ. அரங்கில் எண்ணற்ற உயர்நிலை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ள போதிலும் 1975ஆம் ஆண்டில் மலேசியா ஏற்று நடத்திய 3ஆவது உலகக் கிண்ண ஹொக்கி போட்டிகளின் பல ஆட்டங்கள் அங்கு நடைபெற்றதுதான் அதற்கு உலகத் தரத்திலான அந்தஸ்தை வழங்கி பெருமை சேர்த்தது.
அந்த சமயம் மழைக்காலம் என்பதால் மெர்டேக்கா அரங்கின் திடலில் தண்ணீர் தேங்கியதைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருந்த பல ஆட்டங்கள் கடைசி நேரத்தில் டி.பி.சி.ஏ. அரங்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
ஏனெனில் டி.பி.சி.ஏ. அரங்கின் வடிகால் அமைப்பானது திடலில் தண்ணீர் தேங்காதபடி நிர்மாணிக்கப்பட்ட நவீனமயமான, உயர் ரகத்திலானது என்பது குறிப்பிடத்தக்கது.
குறைவான இருக்கைகளைக் கொண்டிருந்தாலும் நாட்டின் தலைச்சிறந்த விளையாட்டு அரங்கத்தையும் இதர வசதிகளையும் தன் வசம் வைத்திருந்த அச்சங்கத்திற்கு 1982ஆம் ஆண்டில் பெரும் சோதனை மிக்க சோகம் ஏற்பட்டது.
ஏனென்றால் அந்த ஆண்டில்தான் சற்றும் எதிர்பாராத வரையில் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சு டி.பி.சி.ஏ. அரங்கை கையகப்படுத்தி அரசாங்கமயமாக்கியது.
எனினும் இன்று .வரையிலும் அந்த அரங்கம் ‘ஸ்டேடியம் ஜாலான் ராஜா மூடா’ எனும் பெயர் மாற்றத்தை மட்டும்தான் கண்டுள்ளதேத் தவிர வேறு எவ்விதமான மேம்பாடும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. கார் நிறுத்தும் இடமோ இதர தொழில்நுட்ப வசதிகளோ அங்கு இல்லாததால் அது பொருத்தமான இடமில்லை என காரணம் காட்டப்பட்டது.
அந்த மையத்தை ஒட்டு மொத்தமாக கையகப்படுத்துவதற்கு முன் இதுபோன்ற விவரங்களை அரசாங்க அதிகாரிகள் அலசி ஆராய்ந்திருக்க வேண்டாமா, எனும் கேள்வியும் நம்முள் எழவேச் செய்கிறது. அப்படியென்றால் அதனை கையகப்படுத்தியதற்கான உள்நோக்கம்தான் என்ன, எனும் ஐயப்பாடும் நிலவுகிறது.
சிறிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மட்டுமே அங்கு தற்போது நடைபெற்று வருவதால் அவ்வரங்கம் அதன் இயல்பான வசீகரத்தை இழந்து, சோம்பிப் போய் கிடப்பதைப் பார்க்க நமக்கு மிகவும் வருத்தமாகவே உள்ளது.
ஒரு காலக்கட்டத்தில் மிகவும் பரபரப்பான விளையாட்டு நடவடிக்கைகளில் இயங்கிக் கொண்டிருந்த அங்குள்ள சங்கத்தின் கட்டிடம் தற்போது ‘சரக்கு சேமிப்பு அறை’யாக(ஸ்டோர் ரூம்) பயன்பாட்டில் உள்ளது என்று கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், அரங்கத்துடனான அந்த மையத்தை தங்களிடமே திரும்பி ஒப்படைக்குமாறு கடந்த 2004ஆம் ஆண்டில் அப்போதைய இளைஞர், விளையாட்டுத் துறையமைச்சர் அஸாலினாவிடம் சங்கம் மேற்கொண்ட கோரிக்கை பலனளிக்கவில்லை.
இதற்கிடையே சிலாங்கூர் காஜாங் வட்டாரத்தில் நிலம் ஒன்றை அடையாளம் கண்டுள்ள அச்சங்கம், ஒரு புதிய விளையாட்டு மையத்தை அங்கே நிறுவுவதற்கான நடவடிக்கைளை தற்போது மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.