அன்னையர் தின சிறப்புக் கட்டுரை- இராகவன் கருப்பையா
எனது 3 பிள்ளைகளும் கல்வியில் பட்டதாரிகளாக உருவாக கூடிய சூழலலை உருவாக்குவது சவால்கள் நிறைந்த வாழ்க்கை, ஒவ்வொரு நிகழ்வும் எங்களை செம்மை படுத்தியது, எல்லை என்பது ஒரு வரம்பு என்ற எண்ணம் இருந்ததில்லை, உழைப்பும் ஊக்கமும் தான் காரணம் என்கிறார் இலட்சுமி ஐயாக்கண்ணு (வயது60).
“என் கணவரின் திடீர் மரணத்தினால் நிலைகுலைந்து பரிதவித்த எனக்கு, பிள்ளைகளை கரை சேர்க்க உதவியது அசைக்க முடியாத எனது தன்னம்பிக்கையும் நான் கற்றிருந்த கைத்தொழிலும்தான்,” என்று கூறுகிறார்
தலைநகர் ஜாலான் ஈப்போவில் தற்பொழுது தையல் கடை ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வரும் இவர், தமிழ் இலக்கியத் துறையிலும் சிறந்து விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“பேராக், சுங்ஙை சிப்புட்டில் 9 பேர் கொண்ட குடும்பத்தில் 7ஆவது பிள்ளையாகப் பிறந்த நான் எஸ்.பி.எம். தேர்வுகளுக்குப் பிறகு வேலை தேடி தலைநகர் வந்தேன்.”
“பிறகு 25ஆவது வயதில் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் உறவுக்காரரை திருமணம் செய்த எனக்கு ஒரு ஆண் குழந்தையும் 2 பெண் குழந்தைகளும் பிறந்ததைத் தொடர்ந்து வேலைக்குச் செல்ல என் கணவர் என்னை அனுமதிக்கவில்லை.”
“முழு நேரமாக பிள்ளைகளை பராமரிக்க வேண்டும் என கணவர் என்னை பணித்தது அப்போது நியாயமாகப் பட்டாலும் வீட்டிலிருப்பது எனக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது.”
“அப்போதுதான் நாளிதழ்களுக்கும், வார, மாத இதழ்களுக்கும், வானொலிக்கும், கதை, கட்டுரை, கவிதை, போன்றவற்றை புனையத் தொடங்கினேன். எதிர்பாராத வகையில் எழுத்துத் துறையில் எனக்கு நிறைய விருதுகளும் கிடைத்தன.அதே சமயத்தில் தையல் செய்யும் முறையையும் கற்று, வீட்டில் இருந்தவாறே சிறிய அளவில் தையல் தொழில் செய்யத் தொடங்கினேன்.”
“துரை கணேசன், சுகந்தி கணேசன், மீனாட்சி கணேசன், எனும் எனது 3 பிள்ளைகளும் தங்களுடைய எண்ணங்களில் உயரிய இலக்குகளைச் சுமந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்கள்.”
“எனினும் ‘டேவான் பண்டாராயா’வில் பணிபுரிந்த என் கணவர் கடந்த 2015ஆம் ஆண்டில் திடீரென மரணமடைந்ததைத் தொடர்ந்து எல்லாமே நிலைகுத்தியது.”
“கணவரின் பெயரில் அரசாங்கத்தில் இருந்து வந்த மாதாந்திர ஓய்வூதியத் தொகையான 350 ரிங்கிட்டை வைத்துக் கொண்டு பிள்ளைகளின் படிப்புக்கும் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமலும் தொடக்கத்தில் தடுமாறினேன்.”
“இருப்பினும், ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்,’ என்பதற்கு ஏற்ப, மனதை திடப்படுத்திக் கொண்டு தையல் கடை ஒன்றைத் திறந்து இரவு பகல் பாராமல் உழைக்கத் தொடங்கினேன்.”
“சுயமாக தன்முனைப்பை உள்வாங்கிக் கொண்டு காலை 9 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் இடைவிடாமல் தையல் செய்து வருமானம் ஈட்டியதால்தான் அச்சமயத்தில் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடிந்தது,” என்றார் அவர்.
‘ஊக்கம் நிறைந்த உழைப்பாளி ஊசி முனையில் நடந்து கூட முன்னேறுவான்,’ எனும் தாரக மந்திரத்திற்கு ஏற்ப அக்கடையை தற்பொழுது விரிவாக்கம் செய்து தொழிலையும் மேம்படுத்தியுள்ளார் இலட்சுமி.
இதற்கிடையே தனது பிள்ளைகளைப் போல தானும் பட்டம் பெற வேண்டும் என ஆசைப்பட்ட அவர், அதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.
அதன் பலனாக கடந்த 2022ஆம் ஆண்டில் மனிதவள அமைச்சின்(SKM) தையல் துறையிலும் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் தமிழியல் துறையில் BA இளங்கலை பட்டமும் பெற்று சாதனைப் படைந்தார் இந்த சிங்கப்பெண்.
மகன் துரை கணேசன் கணக்கியல் துறையிலும் மூத்த மகள் சுகந்தி கணேசன் மருந்தகத் துறையிலும் பட்டம் பெற்றுள்ள வேளையில் இளைய மகள் மீனாட்சி கணேசன் ஊடகவியல் மற்றும் ஒலிபரப்புத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.