நாடாளுமன்ற போக்கு, சிலரை மாண்புமிகு  என்றழைக்க கூசுதடி நாக்கு!

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை ‘யாங் பெர்ஹொர்மாட்’ என்று அழைப்பது ஆண்டாண்டு காலமாகவே வழக்கத்தில் உள்ள ஒன்றுதான்.

அவர்களை இப்படித்தான் அழைக்க வேண்டும் என சட்ட ரீதியான கடப்பாடு இல்லையென்ற போதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மரியாதை நிமித்தம் அவர்கள் அப்படி அழைக்கப்படுகின்றனர்.

ஆனால் அண்மைய காலமாக நம் நாட்டில் அரங்கேறிவரும் அசிங்கங்களை அலசிப்பார்த்தால், மாண்புமிகு அல்லது மதிப்புமிகு என்ற பொருளுடைய அந்த சொற்றொடருக்கு எத்தனை பேர் தகுதியடைகின்றனர் என்ற மிகப் பெரிய ஒரு கேள்வி நம் எண்ணங்களில் எழத்தான் செய்கிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நாடு முழவதும் வரலாறு காணாத அளவுக்கு பணத்துக்கும் பதவிக்கும் அடிமையாகி மிகக் கேவலமாக தங்களை வியாபாரப் பண்டமாக்கிக்கொண்ட மக்கள் பிரதிநிதிகள் மீது தேசபக்தி கொண்ட வாக்காளர்கள் அளவுகடந்த சினமடைந்துள்ளனர்.

அந்த கோபம் தணிவதற்குள் இம்மாதத் தொடக்கத்தில் மக்களவையில் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் ‘அவிழ்த்துவிட்ட காளைகளைப்போல’ நடந்துகொண்ட விதம் அனேகமாக சிறு பிள்ளைகளுக்குக் கூட கோமாளித்தனமாகவேத் தோன்றியிருக்கும்.

தேர்தல் காலங்களில் மட்டும் ஒன்றும் தெரியாத பாப்பாவைப் போல அப்பாவி முகத்துடன் வாக்காளர்கள் முன் வந்து நிற்கும் இவர்கள் பிறகு தேர்தலில் வெற்றி பெற்று ‘யாங் பெர்ஹொர்மாட்’ ஆனவுடன் காட்டும் ஆணவமும் ஆர்ப்பரிப்பும் சில சமயங்களில் எல்லைதாண்டிப் போவதை மக்கள் உணராமல் இல்லை.

இத்தகைய அவலங்களுக்கெல்லாம் உச்சமாக அமைந்ததுதான் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸின் இனத்துவேச பிதற்றல்.

பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டுவை ‘இருட்டாக’ இருக்கிறார் என்று உளறியதன் வழி தன்னைத்தானே அவர் படு மோசமாகத் தாழ்த்திக்கொண்டார் என்பதுதான் உண்மை. நாடாளுமன்றத்தில் இவ்வளவு கேவலமாக நடந்து கொண்ட அவரை பாலிங் தொகுதியைச் சேர்ந்த மக்கள் கூட மன்னிக்க மாட்டார்கள்.

தன்னுடைய அநாகரீகச் செயலுக்கு அதற்கடுத்த நாள் அவையில் அவர் மன்னிப்புக் கோரிய போதிலும் ‘தீயினால் சுட்ட புண் உள்ளாரும், ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்பதனை அவர் உணரவேண்டும்.

அதே வாரத்தில் தனது தொகுதியைச் சேர்ந்த இந்தியர்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு ஒன்றில் அவர் கலந்து கொண்டதானது நிலைமையை சாந்தப்படுத்துவதற்கு அவர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை என்று நம்பப்படுகிறது.

அந்த நிகழ்ச்சியில் சில ம.இ.கா. தலைவர்களும் உடனிருந்தது மக்களின் ஐயத்தை மேலும் வலுப்படுத்தியதாகத் தெரிகிறது.

இத்தருணத்தில் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் நாம் இங்கு நினைவு கூறத்தான் வேண்டியுள்ளது.

ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.நேத்தாஜி ராயர் எம்பவுமே நெற்றியில் திருநீறு அணிவது வழக்கம்.

அவரை கிண்டலடித்த சாலாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின், ‘நீங்கள் நெற்றியில் அணிந்திருப்பது மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் சின் பெங்கின் சாம்பலா’ என்று கீழ்த்தரமாக பேசி ஒட்டு மொத்த இந்துக்களின் சினத்திற்கும் ஆளானார்.

இதே போல சில ஆண்டுகளுக்கு முன் பிறிதொரு கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றக் கட்டிடத்தின் சில பகுதிகளில் கூரை ஒழுகுகிறது என அப்போதைய பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் ஃபொங் போ குவான் அவையில் புகாரளித்தார்.

அப்போது தேவையில்லாமல் மூக்கை நுழைத்த சர்ச்சைகளுக்கு பேர்போன கினாபத்தாங்ஙான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் புங் மொக்தார், ‘உங்களுக்கும் மாதம் ஒரு முறை ஒழுகுகிறதுதானே’ என மிகக் கேவலமாக அவரை அவமானப்படுத்தியதை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளை உமிழ்ந்த அவருக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் ஆயிரக்கணக்கானோர் சீற்றமடைந்து போர்க்கொடி உயர்த்தியதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

மறைந்த தலைவர்களான கர்ப்பால் சிங், வி.டேவிட் மற்றும் கஸ்தூரி ராணியின் தந்தை பி.பட்டு முதலியோர் ஒரு காலக்கட்டத்தில் நாடாளுமன்றத்தில் சிங்கங்களாக சீறிய போதிலும் அவையின் மாண்புக்கு எள்ளளவும் பங்கம் ஏற்படாத வகையில் தங்களுடைய கருத்துகளை முன் வைப்பார்கள்.

அவர்களைப் போன்றவர்கள்தான் ‘யாங் பெர்ஹொர்மாட்’ என்ற மரியாதைக்கு உண்மையிலேயே தகுதியுடையவர்கள் என்று தாராளமாகக் குறிப்பிடலாம்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தால் நாடாளுமன்றத்தில் நுழையும் சில தரங்கெட்ட மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து பள்ளிப் பிள்ளைகள் கூட எள்ளி நகையாடுவார்கள் போல் தெரிகிறது.

ஆக இப்படிப்பட்ட  பேர்வழிகளை நினைத்துப் பார்க்கும் போது,

‘நாடாளுமன்றத்தில் போக்கிரித்தன போக்கு, யாங் பெர்ஹொர்மாட் என்றழைக்க கூசுதடி நாக்கு’, என்ற ஒரு கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.