– செனட்டர் டாக்டர் எஸ். இராம்கிருஷ்ணன்
மனிதக் கடத்தலில் தொடர்பிருக்கும் சந்தேகத்தின் பேரில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்ட 8 குடிநுழைவுத் துறை அதிகாரிகளை, உள்துறை அமைச்சு விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக இம்மாத தொடக்கத்தில் தகவல் ஊடகங்களில் வெளியான செய்தி நம்மை திடுக்கிட வைக்கின்றது.
அந்த 8 அதிகாரிகளும் தங்கள் தவறை உணர்ந்து திருந்தியுள்ளனர். இனி அத்தகைய தவறுகளை செய்யப்போவதில்லை என உறுதியளித்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஹிஷாமுடின் ஹ¤சேன் தெரிவித்துள்ளார். என்ன ஆச்சரியம்! அன்று அவர்கள் கைது செய்யப்பட்ட போது, தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக ஒழுங்குமுறையை நிலைநாட்டுவதில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாட்டை அந்நடவடிக்கைக் காட்டுவதாகக் கூறிய அமைச்சரின் கூற்றில் இப்போது ஏன் இந்த மாற்றம்? மனிதக் கடத்தல் நாட்டுக்கு எதிரான ஒரு துரோகச் செயல் அல்லவா? நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு மருட்டல் இல்லையா? அம்மாபெரும் குற்றச் செயலுக்கு தண்டனை தேவையில்லை குற்றவாளி மன்னிப்பு கோரினால் போதும் என்றால் நீதிமன்றத்திலும் சிறைச்சாலையிலும் மனம் திருந்தி அழுது மன்னிப்பு கோரும் எல்லா குற்றவாளிகளையும் விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்பிவிடலாமே!
மற்றொரு விசயத்தையும் நாம் நியாயப்படுத்த வேண்டும். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 8 அதிகாரிகளை விடுவிக்க இயலுமெனில், அவசர சட்டத்தின் கீழ், மலாயா சோஷலீஸ கட்சியின் 6 உறுப்பினர்களை எதற்கு தடுத்துவைக்க வேண்டும்? நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட அந்த அறுவரும் ஆயுதங்களை வைத்திருக்கவில்லையே! மாறாக நீதி நியாயமான தேர்தல் முறையைக் கோரிய பெர்சே 2.0க்கு ஆதரவாக கையேடுகளைத்தானே விநியோகித்தனர். நீதி கேட்பது நாட்டுத் துரோகமா அல்லது மனித கடத்தலில் ஈடுபடுவது துரோகமா? ஏன் இந்த இரட்டைப் போக்கு?
கும்பல் சண்டைகளில் ஈடுபட்டதற்காக சிம்பாங் ரெங்காம் மற்றும் மாச்சாப்பில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணான மலேசிய இந்திய இளைஞர்களும் தங்கள் செய்கைக்கு மிகவும் வருந்துகின்றனர். தோட்டப்புறங்களிலிருந்து புறநகர்ப் பகுதிகளுக்குக் குடியேறியதால் திடீர் வாழ்க்கை மாற்ற அதிர்ச்சி, வேலையின்மை, வறுமை, கல்வி விசயங்களில் அரசாங்கத்தின் புறக்கணிப்பு போன்ற பல காரணங்- களால் விரக்தி அடைந்து வஞ்சகர்களின் வலையில் விழுந்து, கும்பல்களில் சேர்ந்து அடி தடிகளில் ஈடுபட்டனர். ஆனால் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் போல் அவர்கள் நாட்டுக்கு துரோகம் செய்யவில்லை! தங்களுக்குள் அடித்துக் கொண்டனர், அவ்வளவுதான். ஆனாலும் அவர்களின் தண்டனை காலம் மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எங்கே நீதி?
நியாயமாக நடந்துகொள்வதாக இருந்தால், உள்துறை அமைச்சர் உடனடியாக பெர்சே ஆதரவாளர்களை விடுவிக்க வேண்டும். தங்கள் தவறுக்காக வருந்தும் சிம்பாங் ரெங்காம், மாச்சாப் தடுப்பு முகாம் இளைஞர்களை வெளியாக்க வேண்டும். அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?