இனவாத அரசியல் ஒழிய, பல்லின கட்சிகள் மலர வேண்டும்

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை கடந்த 1950கள் மற்றும் 60களில் இருந்ததைப் போல இப்போது இல்லை என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

இனவாதத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் பிரச்னைகள் ஏதும் மிகப் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட, பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் உள்பட பல நிலைகளில் இனங்களுக்கிடையிலான நட்புறவுகள் அவ்வளவு சுமூகமாக இல்லை என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

ஒரு காலக்கட்டமுள்ள இன ஒற்றுமைக்கு உதாரணமாகத் திகழ்ந்த நம் நாட்டில் தற்போதைய இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் பெரும்பாலான சமயங்களில் பேச்சளவிலேயே நின்றுவிடுகிறது.

இன ஒற்றுமையை மேலோங்கச் செய்வதற்கு தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூட வேண்டும் என சில மலாய் அரசியல்வாதிகள் அவ்வப்போது அசட்டுத்தனமாக அறைகூவல் விடுத்துவரும் போதிலும் அதுவெல்லாம் வெறும் அரசியல் சித்து விளையாட்டு என்ற உண்மையை மக்கள் அறியாமல் இல்லை.

இனங்களுக்கிடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தி நடுவில் குளிர் காயத்துடிப்பது தங்களைப்போன்ற அரசியல்வாதிகள்தான் என்பது அத்தகைய கோமாளிகளுக்கும் நன்றாகவே தெரியும்.

ஆக ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்ற கூற்றுக்கு ஏற்ப தங்களுடைய அரசியல் ஆதாயத்தை முன்வைத்தே இனவாதத்திற்கு அவர்கள் தொடர்ந்து உரமூட்டி வருவதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் யார் இத்தகைய குறுக்கு வழிகளில் அரசியல் நாடகமாடுகின்றனர் என்று பார்த்தால் பெரும்பாலான சமயங்களில் அம்னோ மற்றும் பாஸ் போன்ற ஒரே இனத்தை பிரதிநிதிக்கும் கட்சிகளைச் சார்ந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆகக் கடைசியாக பிரதமர் முஹிடினை தலைவராகக் கொண்ட பெர்சத்துவும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது சற்று வேதனையாகத்தான் உள்ளது.

சரித்திரத்தை புரட்டிப் பார்ப்போமேயானால் பல்லினங்களிலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளில் இத்தகைய நிலை அறவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தற்போது தேசிய நிலையில் வலுவிழந்து நிற்கும் கெராக்கான் கட்சி ஒரு காலக்கட்டத்தில், குறிப்பாக பினாங் மாநிலத்தில் பலமிக்க ஒரு சக்தியாக இருந்தது நமக்குத் தெரியும். அப்போது கூட அக்கட்சியைச் சேர்ந்த யாரும் இனத்துவேசக் கருத்துகளை வெளியிட்டதாகத் தெரியவில்லை.

நாட்டில் இன்று ஆகப் பெரிய எதிர்க்கட்சியாகத் திகழும் ஜ.செ.க.விலும் இதே நிலைமைதான். அதிகமான சீனர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஒரு சீனர் கட்சி என்று முத்திரை குத்தப்பட்டுள்ள போதிலும் ஓரளவு இந்தியர்களும் மலாய்க்காரர்களும் உயர்நிலையில் அங்கு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்வாரின் பி.கே.ஆர். கட்சி தோற்றுவிக்கப்பட்டு 20 ஆண்டுகளைத் தாண்டிவிட்ட போதிலும் பல்லினங்களைக்கொண்டு தொடங்கப்பட்ட ஆகக் கடைசியான கட்சி அதுதான். அதன் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் மலாய்க்காரர் அல்லாதார் என்பதும் விசேஷமான ஒன்றுதான்.

இந்த கட்சியிலும் கூட யாரும் தமிழ், சீனப் பள்ளிகளை மூட வேண்டும் என்றோ இனப்பாகுபாடு தொடர்பான கருத்துகளையோ வெளியிடுவதில்லை.

இதனையெல்லாம் சீர்தூக்கி பார்ப்போமேயானால் சமீபகாலமாக பல தரப்பினராலும் ஊக்குவிக்கப்பட்டுவரும் பல்லின கட்சிகளுக்கான தேவைகளை நாம் வரவேற்க வேண்டும்.

இதன் அடிப்படையில் பார்த்தால் மகாதீர் அண்மையில் அறிவித்த பெஜூவாங்(போராட்டவாதி) எனும் புதிய கட்சி ஒரு பின்னடைவு என்றே கருதப்படுகிறது. இதில் மலாய்க்காரர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல்தான் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் முஹிடினுடன் சேர்ந்து பெர்சத்து கட்சியை அவர் ஆரம்பித்தார்.

அரசாங்கத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் மற்றொரு விண்ணப்பம் மூடா(மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி) எனும் கட்சியாகும்.

பக்காத்தான் ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த 28 வயதுடைய சைட் சாடிக் இந்த கட்சியை தோற்றுவிக்கிறார். பல்லினக் கட்சி என்ற வகையில் இவருடைய முயற்சியை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது.

ஆனால் மகாதீர் இந்த புதிய கட்சியை விரும்பவில்லை. மலாய்க்காரர்களை அது மேலும் பிளவுபடுத்துகிறது என்று அண்மையில் அவர் அங்கலாய்த்துக்கொண்டார்.அவர் தொடங்கும் பெஜுவாங் கட்சி மட்டும் மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கிறதா எனும் பொது மக்களின் வாதத்தில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

‘மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டியா,’ என்பதே அவர்களுடைய ஆதங்கமாகும். எது எப்படியாயினும், எல்லா இனங்களையும் சேர்ந்த அதிகமான இளைஞர்களை அரசியலில் ஈடுபடச்செய்வதே தமது நோக்கம் என்று அறிவித்துள்ள சைட் சாடிக் நீண்டகால மலேசிய அரசியலுக்கு ஒரு விடிவெள்ளியாக இருக்கக் கூடும்.

மகாதீர் போன்றவர்கள் இத்தகைய கட்சிகளின் உதயத்தை விரும்பாத போதும் சன்னம் சன்னமாக இதுபோன்ற பல்லின கட்சிகள்தான் இனங்களுக்கிடையிலான விரிசலை நிவர்த்தி செய்து நாளடைவில் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்.