தேவையான தடுப்பூசிக்கு, தேவையில்லா குழப்பம்

இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டின் பெரும்பகுதியை கோறனி நச்சில் ஏற்படுத்திய பயத்திலேயே கடத்திய நாம், தடுப்பூசியின் வருகையால் தற்போது நிம்மதி பெருமூச்சில் திளைத்திருப்பது யாரும் மறுப்பதற்கில்லை.

நோயின் தாக்கம் உலகளாவிய நிலையில் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, ‘இது எங்கே போய் முடியுமோ’ என்ற அச்சம் கலந்த குழப்பத்தில் திக்கற்று இருந்த நம் அனைவரது வாழ்க்கையும் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியான ஒரு விசயம்தான்.

தக்க சமயத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதே இதற்கான மூலக்காரணம் என்ற போதிலும் அதோடு சேர்ந்து மக்களின் ஒரு சாராரை பல சந்தேகங்களும் ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டன.

அதாவது இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானதா, பக்க விளைவு ஏற்படுமா, மரணம் ஏற்படுமா, போன்ற கேள்விகள் பலரது மனங்களையும் இப்போது ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.

ஒரு சில நாடுகளில் இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களில் சிலர் மரணமடைந்ததால்தான் இந்த கலக்கம் என்ற உண்மையை தாம் மறுக்க முடியாது.

இரு வாரங்களுக்கு முன் பினேங் மாநிலத்தில் இத்தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 45 வயது  பெண் ஒருவர் 4 நாள்கள் கழித்து மரணித்ததைத் தொடர்ந்து மலேசியாவிலும் இந்தத் தடுப்பூசி பீதி வலுவடைந்தது என்று சொல்ல வேண்டும்.

ஆனால் அவருடைய மரணத்திற்கும் போட்டுக்கொண்ட தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதே உண்மை. பினேங் பெரிய மருத்துவமனையில் ஒரு தாதியாக பணியாற்றிய அவர் மாரடைப்பால் மரணமடைந்தார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

ஆக உலகம் முழுவதும் பல தருணங்களில் இதுதான் உண்மையான நிலைப்பாடாக இருக்கிறது.

தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் சிலர் மரணித்ததும் மேலும் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதும் உண்மைதான் என்ற போதிலும் பெரும்பாலான சமயங்களில் மரணங்கள் ஏற்பட்டது வேறு காரணங்களினால் அல்லது எதேச்சையான ஒன்று என்றே நம்பப்படுகிறது.

நமக்கு அன்றாட பயன்பாட்டில் உள்ள எந்த மருந்தும் 100% பாதுகாப்பு வழங்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்ற திடுக்கிடும் உண்மையையும் மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

தலைவலி அல்லது வயிற்றுவலி போன்ற உபாதைகளுக்கு சர்வசாதாரணமாக நாம் உட்கொள்ளும் ‘பெணடோல்’ மாத்திரைகள் கூட நீண்டகாலத்தில் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது அவர்களுடைய வாதம்.

அதே போல சளி காய்ச்சலுக்கு நாம் உட்கொள்ளும் ‘எண்ட்டி பயோட்டிக்’ எனப்படும் நுண்ணுயிர்க்கொல்லி கூட சிலருக்கு நீண்டகால எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

எது எப்படியாயினும் தடுப்பூசியைப் போடாமல் இருந்தால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் போட்டுக்கொண்டால் என்ன நடக்கும் என்பதையும் சரிசமமாக ஒப்பிட்டுப் பார்த்து நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என மருத்துவ வல்லுனர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு கார்களில் உள்ள பாதுகாப்பு இருக்கை பட்டைகளை எடுத்துக்கொள்ளலாம். கடுமையான ஒரு விபத்து ஏற்படுமேயானால் அந்த பட்டையை அணிந்துள்ளவரைவிட அதனை அணியாதவருக்குத்தான் மரணம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

‘தடுப்பூசி ஒருபோதும் வேண்டாம்’ என பிடிவாதமாக இருப்போர் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் முககவசத்தை அணிந்துகொண்டு தனித்தே இருக்க வேண்டிய அவல நிலை கூட ஏற்படலாம்.

தங்களைச் சுற்றி சுயமாகவே ஒரு சிறையை ஏற்படுத்திக்கோண்டுள்ளதைப் போல்தான் இருக்கும் வாழ்க்கை.

விமானப் பயணங்கள் மேற்கொள்வதிலிருந்து கூட அவர்கள் தடை செய்யப்படலாம்.

எனினும் இதுவெல்லாமே ஒரு சாத்தியக் கூறுதான். உலகின் மக்கள் தொகையில் குறைந்த பட்சம் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகுதான் ஓரளவு பாதுகாப்பான சூழலை நாம் எதிர்பார்க்க முடியும்.

உலகம் இந்நிலையை அடைவதற்கு இன்னும் பல ஆண்டுகள் கூட ஆகலாம். ஏனென்றால் 7.8 பில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவது என்பது சாதாரண விடயமில்லை.

எனவே அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் மனதைப் போட்டுக் குழப்பிக்கொண்டு காலத்தை கடத்தாமல் ‘பந்திக்கு முந்து படைக்கு பிந்து’ என்பதற்கு ஏற்ப தடுப்பூசிக்கு பதிவு செய்துகொள்வதே விவேகமான செயலாகும்.