ஆட்களில்லா இடங்களில் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம்

இலங்கையில் 2009-ல் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் படுகொலை செய்யப்பட்ட பல பொதுமக்களது சடலங்கள் வன்னியில் இதுவரை ஆட்கள் அனுமதிக்கப்படாத இடங்களில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதிகளுக்கு முழுமையாகச் சென்றுவர வசதி செய்யப்பட்டாக வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான றிச்சர்ட் ஹொவிட் கூறியுள்ளார்.

ஆனால், அந்தப் பகுதிகளில் நிலக்கண்ணிகள் இருப்பதன் காரணமாகவே அங்கு செல்ல எவரும் அனுமதிக்கப்படுவதில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.

இந்தப் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை என்ன என்பது இன்னமும் ஒரு மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாகவே இருக்கிறது.

ஆட்கள் செல்வதற்கு இதுவரை அனுமதிக்கப்படாத பகுதிகளின் எல்லைகள் வரை செல்வதற்கு சோஷலிச யூரோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த பகுதிகளில்தான் போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளுடன் போரிட்ட இலங்கை அரசாங்கப் படைகளின் குண்டுத்தாக்குதலும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்போதைக்கு அந்தப் பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை என்றும் அந்தப் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள கிராமங்களில் எல்லாம் ஒருவிதமான அச்ச உணர்வு மக்களின் மத்தியில் காணப்படுவதாகவும் அங்கு சென்று வந்த அந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்ற றிச்சர்ட் ஹொவிட் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தப் பகுதிகளில் சில இடங்களில் நிலக்கண்ணிகள் இருப்பதனாலேயே மக்கள் இன்னமும் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்றும், அங்கு சடலங்களோ அல்லது வேறு எதுவுமோ கிடையாது என்றும் இலங்கைப் பாதுகாப்புத்துறை பேச்சாளரான கெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.