இனவாத பரிணாம அரசியலில் சிக்கிய மக்கள்!   

இராகவன் கருப்பையா- தேசிய முன்னணியில் இருக்கும் அம்னோவுக்கு நிகராக எதிரணியான பக்காத்தான் ஹராப்பானிலும்ஒரு மலாய்க்கார கட்சி இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மகாதீர் கண்ட கனவின் விளைவுதான் பெர்சத்துவின் உதயம் என்பது நமக்குத் தெரியும்.

இனவாதம் வழி ஒரு பெரும்பான்மையைப் பெற்று அதில் அதிகாரத்தைச் சுவைக்கும் அரசியலாகும். 1969-க்கு பிறகு உண்டான அரசியல் பரிமாணம் ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்கியுள்ளது.சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் அந்த கட்சியைத்  தோற்றுவித்த போது இவ்வாறுதான் அவர் வெளிப்படையாக அறிவித்தார்.

எனினும் அந்த சமயத்தில் அம்னோவில் இருந்து நீக்கப்பட்டுத் திக்கு திசையின்றி தத்தளித்துக்கொண்டிருந்த தற்போதைய பிரதமர் முஹிடினுக்கும் தனது புதல்வர் முக்ரிஸுக்கும் அரசியலில் மறு வாழ்வளிப்பதே அவருடைய பிரதான நோக்கமாக இருக்கலாம்,

ஆனால், அதன் பின்னணியில், இனவாதத்தின் அடிப்படையில் உருவாகி வரும் மலாய் தேசியவாத வலதுசாரி அழுத்தமும் அதை நிலைப்படுத்த நிகழும் போட்டாபோட்டியும் நாட்டின் மைய சித்தாந்தத்தை ஒரு குறுகிய இனவாதத்துடன் ஆழப்படுத்துவதை உணர முடிகிறது.

இருந்த போதிலும் மகாதீரின் அன்றைய கனவை முஹிடின் தற்போது இரட்டிப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் சுவாரசியமான விசயம்.

கட்சியின் தோற்றுனரையும் அவருடைய மகனையும் கட்சியிலிருந்தே தூக்கியெறிந்துவிட்டு அம்னோவைவிட பன்மடங்கு பலமிக்க ஒரு கட்சியாகத் தோற்றமளிக்கும் அளவுக்கு பெர்சத்துவை அவர் கொண்டுவருவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

அரசாங்கத்தின் இயந்திரங்களை நெறியற்ற வகையில் நகர்த்தி, ஒரு மசாலா அரசாங்கத்தை உருவாக்கி அதன் வழி உண்டாக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு மேலும் வலிமையைக் கூட்டி, முதன் முறையாக மக்கள் தேர்வு செய்யாத கட்சி ஆட்சி நடத்தும் விந்தையில் நாம் வாழ்கிறோம்,

அரசியலில் எம்மாதிரியான திருப்பங்கள் எப்போது, எப்படி ஏற்படும் என்பதை யூகம் செய்ய முடியாது எனும் கூற்றுக்கு பெர்சத்துவின் நிலைப்பாடு நல்லதொரு உதாரணம் என்பதில் ஐயமில்லை.

மேலும் கொல்லைப்புற ஆட்சியின் வழி தனது பலத்தைப் பெருக்கிக் கொண்ட முஹிடின், அம்னோ தனது கட்சியிடம் ஏறக்குறைய மண்டியிடும் அளவுக்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டது அம்னோவின் அறுபது ஆண்டுகளுக்கும் மேல் யாரிடமும் தலை குனியாமல் அகங்கார ஆட்சிபுரிந்தே வந்த அம்னோவின் நிலை தற்போது ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது.

அம்னோவின் பலம் மலாய் இனவாத அரசியல், அந்தக் கட்சியின்  பரிணாம வளர்ச்சியில் உருவான வலதுசாரி இனவாத சித்தாந்தம், புதிய அரசியல் கட்சிகள் மேலும் வழுவான அழுத்தத்துடன் உருவாக்கம் காண வழிவகுத்தது.

மேலும், தூரநோக்கு சிந்தனையில், மலாய் தேசியவாதம்தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற அம்னோவின் கனவு நினைவானதின் தாக்கம்தான் இதுவாகும்.

அவசரக்கால சட்டத்தை அமலாக்கியதன் வழி எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அம்னோவின் சிண்டையும் தனது டிக்குள் வைத்திருக்கும் முஹிடின் அம்னோவின் நகர்வுகளைத் தவிர்த்து வருகிறார்,

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அம்னோ தலைவர்கள் தங்களுடைய கட்சித் தலைவர் அஹ்மட் ஸாஹிட்டின் உத்தரவுகளைப் புறக்கணித்து முஹிடினின் ஆலோசனைகளுக்கு அடிபணிந்து கிடப்பதற்குக் காரணம், அம்னோ தொடர்ந்து அரசாங்க நிருவாகத்தில் இருக்கும் தனது ஆதிக்கத்தைப் பாதுகாக்கத்தான் என்பதையும்  காணமுடிகிறது.

அரசாங்கத்தில் அம்னோவை பிரதிநிதிக்கும் 9 முழு அமைச்சர்களையும் 6 துணையமைச்சர்களையும் மட்டுமின்றி 14 அரசாங்க சார்பு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகிப்போரையும் முஹிடின் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதைப் போல் தெரிந்தாலும், அடிப்படையில், அம்னோ இல்லாத அரசாங்கத்தை ர்சத்துவால் நகர்த்த இயலாது என்பதுதான் உண்மை.

நிலைமை இவ்வாறு இருக்க அவசரக்கால சட்டத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாடாளுமன்றத்தைக் கூட கூட்டாமல் காலம் கடத்தும் முஹிடினுக்கும் பெர்சத்துவுக்கும் நீண்டகால அடிப்படையில் க்கள் எவ்வாறான தீர்ப்பை வழங்கக் காத்திருக்கிறார்கள் என்றும் இப்போது யூகிக்க முடியாது.

ஏனெனில் நாடு தழுவிய நிலையில், ‘தோல்வியுற்ற அரசாங்கம்’, ‘முட்டாள் அரசாங்கம்’, போன்ற கோஷங்களுக்கெல்லாம் தற்போது இலக்காகியுள்ள இந்த அரசு, மக்களின் சீற்றத்திற்கு இரையானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அந்த கட்சியில் சேர்ந்தவர்கள் அனைவரும் பெரும்பாலும் தற்காலிக சுகத்திற்காக அங்குப் போய் இணைந்து கொண்டவர்கள்.

அரசியல் தவளைகள் என முத்திரை குத்தப்பட்டுள்ள அவர்களுடைய நிலைமையும் எப்படி இருக்கும் என்று தெளிவாக தெரியவில்லை.

எது எப்படியாயினும் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு பெர்சத்து எனும் ஒரு கட்சி இருக்குமா அல்லது ‘நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்’ என்ற நிலையில் காணாமல் போய்விடுமா என நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இருப்பினும், அடுத்த தேர்தல் தொடர்ந்து ஒரு இழுபறியாக்கத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இனவாத அரசியல் என்பது மலாய் இனத்தின தேசிய அரசியலாக உள்ளது. அடித்த தேர்தலில் 18- வயதானவர்கள் வாக்களிக்க இயலும் என்றால், ஒரு புதிய திருப்பம் உருவாக வழியுண்டு. இல்லையென்றால், இன்னொரு குழப்படியான குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் அரசியல் ஆட்சிதான் அமையும்.