கோவிட் அரசியலில் சிக்கிய மக்கள் – பூனைக்கு யார் மணி கட்டுவது?

கி. சீலதாஸ் – நாட்டில் தொடர்கின்ற முழு அடைப்பு பல பிரச்சினைகள் உருவெடுக்க உதவுகிறது எனின் அது மிகைப்படுத்துவதாகக் கருத இயலாது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டதற்கான காரணங்களை ஆய்ந்துப் பார்க்கும்போது அது வணிக முடக்கம், வணிகக் கட்டுப்பாடு, நடமாட்டத் தடை, உற்பத்தி சாலைகள் இயங்க முடியவில்லை, முழுமையாகச் செயல்பட முடியவில்லை. அதற்குத் தடையாக இருப்பது கட்டுப்பாடற்ற போக்கு, மக்களிடம் காணப்படும் பழக்க வழக்கங்கள், மூர்க்கத்தனமான நடவடிக்கைகளே. இவற்றோடு வெளிநாட்டு முதலீடும் வெகுவாகவே பாதித்துவிட்டது.

இந்தக் காலகட்டத்தில் நாட்டுப் பொருளாதாராப் பிரச்சினை ஒரு பக்கம் தலைவிரித்தாடும்போது குடும்பங்களிலும் பலவிதமான பிரச்சினைகள் அதிகரித்து வருவதை எவரும் கவனித்ததாகத் தெரியவில்லை. குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள், கணவன் – மனைவி பிரச்சினை, பெருகி வரும் மணவிலக்கு. இவற்றிற்கான சான்றுகள் ஏராளம்.

நம் நாட்டில் மட்டுமல்ல பிற நாடுகளிலும் குடும்பப் பிரச்சினைகள் அபரிமிதமாகப் பெருகி வருவதைச் சில ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இது ஒரு புறமிருக்க, நீதிமன்றங்கள் முன்பு போல் இயங்காததும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. நீதிமன்றங்கள் இயங்கினால்தானே குடும்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். சமீபத்தில் இஸ்லாமிய வழக்குரைஞர் அமைப்பு ஷரியா நீதிமன்றம் முழுமையாகச் செயல்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. காரணம், குடும்ப வழக்குகள் தீர்க்கப்படவில்லை, அவை நிலுவையில் இருக்கின்றன.

இந்தக் கொடுமையான கோவிட்-19இன் காரணமாக குடும்பப் பிரச்சினைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். இதே நிலைதான் மற்ற சமயத்தினரின் குடும்பங்களில் நிலவுகிறது என்பது நிதர்சனம்.

அடுத்து, மது பழக்கத்தில் எந்த மாற்றமும் கிடையாது. மது கடைகள் அடைக்கப்பட்டாலும் அது கிடைப்பது அரிதல்ல. போதைப்பொருள் பிரச்சினை எப்பொழுதும் போல் நீடித்து வருகிறது. போதைப்பொருள் கிடைப்பதை, விநியோகிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். இதுவும் ஒரு பிரச்சினையாகவே சொல்லப்படுகிறது.

மேலே குறிப்பிட்டவை சமுதாயப் பிரச்சினைகளாகும். இவை அன்றி, முழு அடைப்பால் வேலை இழந்தோரின் எண்ணிக்கை என்ன என்பதை இன்றும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அன்றாட காட்சிகளின் நிலவரம் படுமோசமாகிவிட்டது. வருமானம் இல்லை எனும்போது குற்றச் செயல்கள் பெருகும். அதையும் நம் சிந்தையில் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.

இப்படிப்பட்ட படுமோசமான நிலைக்கு கோவிட்-19தான் காரணம். மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும், வாழ்க்கை என்ற அங்கமும் பாதிப்புற்றிருக்கிறது. இதுதான் உண்மை.

பயங்கரவாதம், போர் போன்ற கொடுமையான நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது கோவிட்-19 தொடுத்திருக்கும் பயங்கரமான அழிக்கும் நடவடிக்கை ஒரு நாட்டை மட்டும் குறிவைக்காமல் உலகத்தை, மனித இனத்தையே குறிவைக்கிறது என்றால் அது பிழையா?

இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போர் அவ்விரு நாடுகளின்  எல்லைக்குள் நடக்கும். பயங்கரவாதத்திற்கு எல்லை இல்லை. அது எங்கும் பரவுவதைத் தடுக்க இயலாது. கோவிட்-19ஐ பயங்கரவாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு சங்கடத்தை எதிர்பார்க்கலாம். போரின் நோக்கம் தெரியும்! போர் தொடுத்தவர்களின் அடையாளம் தெரியும்! வெற்றியாளர்களைத் தெரிய வாய்ப்புண்டு.

பயங்கரவாதிகளின் நோக்கம் தெரியும். பயங்கரவாதத்தைத் தொடுத்தவர் யார் என்பதும் அறிய முடியும். அவர்களின் அடையாளம் தெரியும். ஆனால், கோவிட்-19இன் நோக்கம் என்ன? அதன் அடையாளம் என்ன? இலக்கு என்ன? தெரியாது. தெரிய வழியில்லை. அது இயற்கையாக உருவாகியிருந்தால் அதன் நோக்கம் புலப்படாது.

ஆனால், அது மனிதனால் கட்டவிழ்த்து விடப்பட்டது எனின் அவ்வாறு நடந்தவர்களின் நோக்கம் என்ன? எனவே, இவற்றை எல்லாம் நினைக்கும்போது துயரத்தில் உழன்று கொண்டிருக்கும் மக்கள் யாரிடம் முறையிடுவார்கள்? யார் தங்களின் துயரைத் துடைத்தொழிக்கும் அதிகாரத்தை, ஆற்றலைப் பெற்றிருக்கின்றனர் என்று கேட்பார்கள் அல்லவா? அரசுதான் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றால் அது தவறாகுமா?

ஜனநாயகம் என்றால் என்ன? மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கோட்பாடு. மக்களின் குறைகளைத் தீர்க்கும் கோட்பாடு. எனவே, ஜனநாயகத்தின் பேரில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றவர்கள், மக்களுக்கு நன்மை செய்வோம் என்று உறுதி தந்தவர்கள் மக்களின் நலனில்தான் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டுமே அல்லாது அரசியல் லாபத்தைக் காண முற்படுவோரின் நலனை, அதிகாரத்தைப் பாதுகாப்பது அல்ல.

மாமன்னர், இந்நாட்டு பிரதமரின் ஆலோசனைக்கிணங்க நெருக்கடி நிலை பிரகடனம் செய்தார். பிரதமரின் ஆலோசனை எதை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதைக் கவனியுங்கள். கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைத் தடுப்பதே நோக்கம். நிறைவேறியதா? இல்லை! கோவிட்-19 நோயால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை மேலும், மேலும் உயர்ந்தது.

இறப்பின் எண்ணிக்கையும் உயர்ந்தது. நெருக்கடி நிலை பிரகடனத்தின் நோக்கம் வெற்றி பெறவில்லை. மேலும், கட்டுப்பாடுகள் ஜனநாயகத்தின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கூட பயங்கரவாத நோயின் கடுமையை விவாதிக்க முடியாதவாறு நாடாளுமன்ற அமர்வு நிறுத்திவைக்கப்பட்டது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாகச் சட்டம் இயற்றினார்கள். அப்படிப்பட்ட நடவடிக்கை கோவிட்-19 பரவுவதைத் தடுக்கவில்லை. பாதிப்புறுவோரின் துயரும் களையப்படவில்லை.

நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிராகரித்தது. நாட்டின் நிலவரம் மோசமடைந்து வருவதை உணர்ந்து மாமன்னர் தம் சக ஆட்சியாளர்களோடு கலந்து ஆலோசித்து நாடாளுமன்றம் விரைவாகக் கூட்டப்பட வேண்டுமென அறிவித்தார். பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற தர்ம சங்கடமான அரசமைப்புச் சட்டச் சிக்கல் எழுந்துள்ளது.

மாமன்னரே நாடாளுமன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கு ஆதரவாக அரசமைப்புச் சட்டத்தின் 55ஆம் பிரிவைக் குறிப்பிடுகிறார்கள். இந்தப் பிரிவை மட்டும் வாசித்தால் மாமன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டலாம். ஆனால், அது அவ்வளவு எளிதானது அல்ல. அரசமைப்புச் சட்டத்தின் 40ஆம் பிரிவின்படி அமைச்சரவை ஆலோசனைக்கு இணங்க மாமன்னர் தமது அரசமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தலாம்.

மாமன்னர் தன்னிச்சையாக யாதொரு அரசமைப்புச் சட்டம் வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. அமைச்சரவை அல்லது அமைச்சரவையின் ஒப்புதலோடு நியமிக்கப்பட்ட அமைச்சர் ஒருவரின் ஆலோசனைபடிதான் மாமன்னர் அரசமைப்புச் சட்டம் தெளிவுபடுத்தி இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும். இது நாட்டின் பிரதமரையே குறிக்கும். அதோடு, மற்றுமொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். நாடாளுமன்றத்தை யார் திறப்பார்? இப்படிப்பட்ட கருத்துகள் அரசமைப்புச் சட்டச் சிக்கலுக்கு வழிகோலும். அவ்வாறு நடந்தால் பலனடைய போவது மக்கள் அல்ல. அதிகாரத்தை விலைபேசுவோரின் அரசியல் ஆயுளை நீட்டிக்க உதவும்.

இப்பொழுது, யார் நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்டலாம் என்ற சர்ச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஏற்பட்டிருக்கும்  கோவிட்-19 பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக விதண்டாவாதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வேடிக்கையாக இருக்கிறது அல்லவா?

இதுதான் ஜனநாயகக் கோட்பாட்டைத் தவறாகப் பயன்படுத்துவோரின் சாணக்கியம். பிரச்சினையை ஏற்படுத்தி அது விவாதிக்கப்பட்டால் அதுவே அதிகார மோகிகளுக்கு வெற்றி. ஏனெனில், இந்த விவகாரத்தை இழுத்தடித்துக் கொண்டே போகலாம் அல்லவா? முறையான தீர்வு வராது.

இப்பொழுது இருக்கும் சங்கடமான சூழ்நிலை, குழப்பமான அரசியல் நிலை பற்றி தெரியாதவர்கள் எவரும் இல்லை. ஆனால், அணுகுமுறைதான் வித்தியாசமாக இருக்கிறது. நேர்மையான எண்ணம் இருந்தால் தீர்வுக்கு வழி உண்டு. சிறிதளவு அரசியல் நாகரிகம் பேணப்பட்டால் தீர்வுக்கான வழியைக் காணலாம். அந்தச் சிறிதளவு அரசியல் நாகரிகம்தான் இப்பொழுது தேவை. அது குதிரை கொம்பு போல் தெரிகிறது.