ஜிஇ15-இல் ஜொகூரில் 1 நாடாளுமன்றம் 2 சட்டமன்றங்கள் – ஜசெக இந்தியர்கள் கோரிக்கை

நாட்டின் 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), ஜொகூர் மாநிலத்தில் ஜசெக கட்சியைப் பிரதிநிதித்து, இந்தியர்களுக்கு 1 நாடாளுமன்றமும் 2 சட்டமன்றங்களையும் வழங்க வேண்டும் எனும் கோரிக்கை ஜொகூர் ஜசெக இந்திய ஆதரவாளர்களிடமும் அக்கட்சியைச் சார்ந்த இந்திய உறுப்பினர்களிடையேயும் எழுந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஜொகூர் மாநிலத்தைப் பொருத்தமட்டில், ஜசெக வலுவாகவே உள்ளது. அதில் இந்தியர்களின் பங்களிப்பும் அரசியல் ரீதியிலான ஆதரவும் நிறைவானத் தடத்தில் இருந்தும் வருகிறது. இருந்த போதிலும், பொதுத் தேர்தல்களில் இந்தியர்களுக்காக அக்கட்சி சார்பில் போட்டியிட வழங்கப்படும் வாய்ப்பானது தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருவதாகவும் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜசெக கட்சி தொடங்கப்பட்டது முதல் இன்றைய காலக்கட்டம் வரை, கட்சியில் இருக்கும் இந்திய உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, கட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவோராக இருந்தாலும் சரி, அவர்களின் ஆதரவும் பங்களிப்பும் என்றுமே கட்சியின் பலத்தை நிரூபிக்கும் சக்தியாகவே இருந்து வந்ததை ஜசெக தலைமையகமும் மாநில ஜசெகவும் நினைத்துப் பார்க்க வேண்டும் எனும் கோரிக்கையும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தேசிய முன்னணி பலமாக இருந்த காலம்தொட்டு, அஃது இன்றைய நிலையை எட்டியுள்ள வரையில் ஜசெகவின் வெற்றிக்கும் அக்கட்சியைப் பலமான கட்சியாக உயிர்ப்பிக்கவும் ஜொகூர் மாநிலத்தில், இந்தியர்களின் ஆதரவும் அக்கட்சியின் இந்திய உறுப்பினர்களின் பங்களிப்பும் காலத்தால் மறக்கப்பட்டு விடக்கூடாது எனவும் மாநிலம் முழுவதுமுள்ள அக்கட்சி இந்தியர்கள் கட்சிக்குத் தொடர்ந்து நினைவுறுத்தி வருகிறார்கள்.

ஜொகூர் மாநிலத்தில் கெஅடிலான் கட்சியின் சார்பில் இந்தியர்களுக்கு ஒரு நாடாளுமன்றமும் இரு சட்டமன்றங்களும் கடந்த 14-வது பொதுத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட நிலையில், தேசிய முன்னணி சார்பில் மஇகாவிற்கு 1 நாடாளுமனறமும் 4 சட்டமன்றங்களும் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இம்மாநிலத்தில் சுமார் 15 ஜசெக கிளைகள் இருக்கும் சூழலில் 1 நாடாளுமன்றமும் 2 சட்டமன்றங்களும் இந்தியர்களுக்கு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை நியாயமானதாகவே உள்ளது.

நாட்டின் 15-வது பொதுத் தேர்தலில், ஜொகூரில் ஜசெக அதன் செல்வாக்கை நிரூபிக்கவும், தொடர்ந்து வெற்றியோடு பயணிக்கவும் இந்தியர்களின் இக்கோரிக்கையில் அக்கட்சி கவனம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜொகூர் மாநிலத்தில் ஒரு கிளைகூட இல்லாத நிலையில், மலாய்காரர்களின் கவனத்தையும் வாக்கையும் கவர்வதற்காக இதற்கு முன்னர் பாலோ சட்டமன்றத்தை மலாய்காரர்களுக்கு ஒதுக்கியிருந்த நிலையில், 15-வது பொதுத் தேர்தலில் லாயாங் – லாயாங் சட்டமன்றத் தொகுதியும் மலாய் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.

15 ஜசெக கிளைகள் இருந்தும், ஒரு சட்டமன்றம் மட்டுமே இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது ஜொகூர் இந்தியர்களிடமும் அக்கட்சி உறுப்பினர்களிடையிலும் அதிர்ப்தியை ஏற்படுத்தியிருப்பதைக் கட்சியின் மாநில தலைமைத்துவம் உணாரமல் இல்லை. இருந்தும், அவர்களின் தொடர் அலட்சியம் அக்கட்சியில் இந்தியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறதா எனும் கேள்வியும் உலா வருகிறது.

அக்கட்சி இந்தியர்களின் இக்கோரிக்கைக்கு, நடப்பு மாநில ஜசெக தலைவர் செனட்டர்  லீயு சின் தோங் செவிசாய்க்க மறுத்து வரும் நிலையில், தேசிய ஜசெக தலைவர்கள் இப்பிரச்னையில் தலையீடு செய்து நல்லதொரு முடிவை வரும் 15-வது பொதுத் தேர்தலில் ஏற்படுத்துவார்களா எனும் எதிர்பார்ப்போடு அம்மாநில ஜசெக-வினர் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜொகூர் மாநிலம், இந்தியர்களின் எண்ணிக்கையில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள நிலையில் ஜசெகவின் வெற்றிக்கும் அவர்களின் பங்களிப்பு பெரும் சாத்தியமானது. இந்நிலையில், வரும் 15-வது பொதுத் தேர்தலில், இந்தியர்களுக்கு கூடுதலாக ஒரு சட்டமன்றமும் நாடாளுமன்றமும் கிடைக்க கட்சி வழிசெய்ய வேண்டும் என்பது பெரும் எதிர்பார்ப்பாகவே திகழ்கிறது எனலாம்.


எழுத்து :- சிவா லெனின், சமூக ஆர்வலர்