தமிழக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை உடைத்து, சட்டவிரோதமாக கேரளத்துக்குக் கடத்துவதைக் கண்டித்துப் பேசிய, “சாட்டை” வலையொளி பேச்சாளர் துரைமுருகனையும் பெரியாரின் மர்ம மறுபக்கம் எனும் தலைப்பில் ஈவே இராமசாமி நாயக்கரின் மாயத்தோற்றத்தச் சுக்குநூறாகி தகர்க்கும் வகையில் தக்க சான்றுகளுடன் இரண்டு காணொளிகளை வெளியிட்ட “ழகரம்” வலையொளி பேச்சாளர் சீதையின் மைந்தன் இருவரையும் கைது செய்தது, பழிதீர்க்கும் படலமாகும். எனவே, அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
அன்னை தாயகத்தின் வளங்களைக் கொள்ளையிடுவோரைக் கண்டிப்பதும், ஒழுக்கமற்ற ஒருவரை ஒழுக்க சீலர் போல அடையாளப்படுத்தும் போலி பிம்பத்தை உடைத்தெறிவதும் எவ்வகையில் குற்றமாகும்?
கருத்துக்களைக் கருத்துக்களால் மறுக்க இயலாமல், கருத்து சுதந்திரத்தை மறுக்கும் வகையில் அரசியல் காழ்புணர்ச்சியால் அதிகார வர்க்கத்தால் திட்டமிட்ட சமூக குரலை அடக்கும் செயலே இக்கைது நடவடிக்கை என்றார்.
தமிழிய சிந்தனை, தமிழர் நல செயல்பாடு என முன்னெடுக்கும் அனைத்து விடயங்களுக்கும் திட்டமிட்ட சூழ்ச்சிகள், குறுக்கீடுகள், இடையூறுகள் தொடர்ந்த வண்ணமாகவே தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. அதிலும் அதை வெளிக் கொண்டுவரும் உறவுகளை வஞ்சிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது என எண்ணத் தோன்றுகிறது.
இவ்விருவரின் விடுதலைக்கு ஆதரவாக கையெழுத்து பிரச்சாரம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தாய்த் தமிழகத் தமிழர்கள் விழிப்பு நிலைக் கொள்ள வேண்டும். தமது இனம், மொழி, சமயம், பண்பாடு, உரிமை, உடமை போன்ற விவகாரங்களில் விட்டுக்கொடுக்கும் போக்கைக் கைவிட வேண்டும். தமக்கானவர்களை நசுக்க நினைக்கும் அந்நியர் சூழ்ச்சிகளைக் களையெடுக்க வேண்டும். குறிப்பாக, உலகத் தமிழர்கள் இதை எதிர்த்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் சார்பில் கேட்டுக் கொள்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தமது அறிக்கையில் தெரிவித்தார்.