தமிழ் பள்ளிகளை ஏமாற்றும் உள்நாட்டு மோசடிக் கும்பல்

இராகவன் கருப்பையா – அண்மைய காலமாக நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் புரிந்துவரும் சாதனைகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

அவர்களைச் செம்மைப்படுத்தி அவர்களுடைய வளர்ச்சிக்கும் வெற்றிகளுக்கும் இரவு பகலாகப் பாடுபடும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் இத்தருணத்தில் நாம் நினைவுக் கூறத்தான் வேண்டும்.

ஆனால்  ஊண் உறக்கமின்றிக் கடுமையான முயற்சிகளுக்கிடையே மேற்கொள்ளப்படும்  இவ்வளவு ஏற்பாடுகளும் வெறும் வெத்து வேட்டாக வீண் போகாமல் இருப்பதை உறுதி செய்வது அனைவரது கடமையாகும்.

வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் படங்களும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பெயர்களும் தமிழ் தினசரிகளில் மட்டுமே பிரசுரிக்கப்படுகின்றன. இதர மொழியிலான ஊடகங்களில் ஏன் அவை வெளிவருவதில்லை என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இதற்கு இனவாதப் போக்கோ வேறு எந்தக் காரணமோ இல்லை. கல்வி அமைச்சின் அங்கீகாரம் இல்லை என்பதுதான் உண்மை. இல்லாத ஒன்றைக் கல்வியமைச்சு எப்படி அங்கீகரிக்கும்?

ஏனெனில் உள்நாட்டு அரசு  சாரா நிறுவனம் ஒன்று அனைத்துலக நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி இல்லாத போட்டிகளை ஏற்பாடு செய்து தமிழ்ப்பள்ளிகளைச் சரட்டு மேனிக்கும் ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வருவதாக அண்மையில் தகவல் கசிந்துள்ளது.

விஞ்ஞானம், சுற்றுப்புறச் சூழல், கணிதம், பொறியியல், பௌதிகம், சமூக அறிவியல், கணினி அறிவியல் மற்றும் எந்திரவியல்(ரோபோட்டிக்ஸ்) போன்ற துறைகளில் அனைத்துலகப் புத்தாக்கப் போட்டிகள் நடைபெறுவதாக அறிவித்துத் தமிழ்ப்பள்ளிகள் வாயிலாகப் பெற்றோர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் அந்தக் கும்பல் வசூலிப்பதாக நெடுமாறன் இளங்கோவன் எனும் ஒரு சமூக ஆர்வலர் தனது முக நூலில் அம்பலப்படுத்தியுள்ளார்.

தமிழ்ப் பள்ளிகளை மட்டுமே குறிவைத்துத் தனது நடவடிக்கைகளை மிகவும் லாவகமாகச் செயல்படுத்தும் அக்கும்பல் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வெற்றிப் பதக்கங்களை வழங்கி உற்சாகப்படுத்துவதால் யார் மீதும் யாரும் சந்தேகப்படுவதில்லை.

சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அந்தக் கும்பல் நைஜீரியா, மெக்சிக்கோ, பிரிட்டன், பிரேஸில், மசிடோனியா மற்றும் பராகுவே போன்ற நாடுகளின் பெயர்களைப் பயன்படுத்தி அப்போட்டிகளுக்குத் தலைப்பிடுவதாக நெடுமாறன் தனது ஆய்வின் வழி கண்டுபிடித்துள்ளார்.

எனினும் அவை எல்லாமே இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரே முகவரியைத்தான் தளமாகக் கொண்டுள்ளன.

அந்த முகவரியில் செயல்படும் இந்தோனேசிய அமைப்பு ஒன்றுடன் கூட்டு சேர்ந்து இத்தகைய ஏமாற்று வேலைகளை இக்கும்பல் வெற்றிகரமாக நடத்தி வருவதாக நெடுமாறன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

போட்டிகளுக்குக் கவர்ச்சிமிக்க வெவ்வேறு தலைப்புகளைச் சூட்டி அந்த ஒரே இயக்கம்தான் எல்லாவற்றையும் செய்கிறது.

தமிழ்ப் பள்ளிகளையோ, மாணவர்களையோ, அவர்களுடைய கடுமையான உழைப்பையோ அல்லது வெற்றிகளையோ சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் இந்தப் புலனாய்வு செய்யப்படவில்லை.

மாறாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்று கூறுகிறார் நெடுமாறன்.

இத்தகைய ஏமாற்று வலைகளில் இனிமேலும் விழாமல் இருக்கும் பொருட்டு, எந்த ஒரு அனைத்துலகப் போட்டியாக இருந்தாலும் மாணவர்களைப் பதிவு செய்வதற்கு முன் அதன் நம்பகத்தன்மை குறித்துக் கல்வி இலாகாவிடம் கேட்டறிய வேண்டும் என்பதே அவருடைய ஆலோசனையாகும்.

இந்தப் பின்னடைவானது, ‘பால் பொங்கி வரும் வேளையில் தாழி உடைந்த கதை’யாகிவிடக் கூடாது.

ஏனெனில் சமீபக் காலமாக நமது செல்வங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கல்வி மற்றும் விளையாட்டு மட்டுமின்றிப் புத்தாக்கம் போன்ற பல்வேறு துறைகளிலும் புரிந்துவரும் சாதனைகள் உண்மையிலேயே அளப்பரியது.

இந்நிலை தங்குதடையின்றித் தொடர வேண்டும். நமது பிள்ளைகளின் வெற்றிப் பாதையில் எவ்விதத் தடங்களும் இருக்கக் கூடாது.

அதிகச் சிரத்தையெடுத்து நேரம் காலம் பாராமல் மாணவர்களின் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஆசிரியர்களும் ஏமாற்றுப் பேர்வழிகளின் இனிப்புப் பேச்சுக்கெதிராகச் சற்றுக் கவனமாக இருப்பது அவசியமாகும்.