தீவாளியா? தீபாவளியா?

இராகவன் கருப்பையா – கோறனி நச்சிலின் பெருந்தொற்று தணிந்து வரும் இவ்வேளையில் மலேசியா மட்டுமின்றி உலகளாவிய நிலையிலும் கூட மீண்டும் பழைய ஆரவாரத்துடன் கொண்டாடப்படும் முதல் பெருநாள் தீபத் திருநாளாகத்தான் இருக்கும்.

குறிப்பாக நம் நாட்டில் கடந்த 5 நாள்களாகப் புதிய உத்வேகத்துடனும் மிகுந்த உற்சாகத்துடனும் இந்துக்களோடு சேர்ந்து இதர சமயங்களைச் சார்ந்தவர்களும் இப்பெருநாளைக் கொண்டி வருகின்றனர்.

ஆனால் இருளை நீக்கி வெளிச்சத்தைக் கொணரும் இத்திருநாளைத் தீபாவளி என்றழைப்பதா தீவாளி என்று சொல்வதா என நிறைய பேர் இன்னும் குழப்பத்தில் உள்ளனர்.

தீபாவளி என்றால் ‘தீப ஒளி’ என்பது நாம் எல்லாருமே அறிந்த ஒன்றுதான்.

அதே போலத் தீவாளி என்னும் சொல்லைப் பிரித்தால் ‘தீ வாளி’ என்று பொருள்படும். தீ என்றால் நெருப்பு, வாளி என்றால் தண்ணீரை அள்ளுவதற்கோ நிரப்பி வைப்பதற்கோ பயன்படுத்தப்படும் ஒரு உபகரணம் என்பதும் நமக்குத் தெரிந்த ஒன்றே.

ஆக இவ்விரு சொல்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை நன்கு உணர்ந்திருந்தும் நம்மில் பலர் ஏன் இன்னும் அர்த்தமற்ற வகையில் வாழ்த்து கூறுகின்றனர் என்று தெரியவில்லை.

நமது இனத்தைச் சார்ந்த முன்னணி அரசியல்வாதிகளில் பலரும் கூட ‘தீவாளி’ என்று உச்சரிப்பது வேடிக்கையாகத்தான் உள்ளது.

‘தீவாளி’ என்னும் சொல் சமஸ்கிருதத்தில் ‘விளக்குகளின் வரிசை’  என்று பொருள்படுகிற போதிலும் இந்தியாவின் வட மாநிலங்களில் அது ஒரு இந்தி வார்த்தையாகவே கருதப்படுகிறது.

அங்குள்ளவர்களில் கிட்டத்தட்ட எல்லாருமே ‘தீவாளி’ என்றுதான் சொல்கிறார்களே தவிரத் தீபாவளி என்னும் சொல்லைப் பயன்படுத்துவதில்லை.

அதே வேளையில் தென் பகுதி மாநிலங்களில் உள்ளவர்களில் பலர் ஏன் அவ்வாறே பின்பற்றுகிறார்கள் என்றும் தெரியவில்லை.

குறிப்பாகப் பள்ளிகளிலும் இதர நிலைகளிலும் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராகவும் கோயில்களில் சமஸ்கிருதத்திற்கு எதிராகவும் உக்கிரமாகக் குரல் எழுப்பி வரும் தமிழக மக்களில் பலரும் தன்னிலை மறந்துதான் செயல்படுகின்றனர்.

தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற தென்னக மாநிலங்களில் இருந்து புலனம் வழியாக வரும் வாழ்த்துகளிலும் அதிக  அளவில் ‘தீவாளி’ எனும் சொல் இடம்பெறுவது வியப்பாகவே உள்ளது.

ஆனால் நம் நாட்டில் நாம் தெளிவாக இருக்க வேண்டியது அவசியமாகும். மங்களத் தீபாவளி(தீப ஒளி) வாழ்த்துகள் என்று சொல்வதா, என் இனிய தீவாளி (நெருப்பு வாளி) வாழ்த்துகள் என்று கூறுவதா என நாம்தான் சுயமாக முடிவு செய்ய வேண்டும்.

இந்தியாவுக்கு வெளியே மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டுமே தமிழ் செம்மையாக வாழ்கிறது என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில், குறிப்பாகத் தமிழகத் தொலைக்காட்சிகளில் தமிழ் மொழி எந்த அளவுக்கு அல்லோகலப்பட்டு அசிங்கப்படுகிறது என்பது எல்லாருமே அறிந்த ஒன்றுதான்.

எனவே தமிழை வாழவைக்கும் நாடு என்ற வகையில் இதுபோன்ற முக்கிய வார்த்தைகளின் பயன்பாட்டில் குளறுபடிகள் இல்லாதிருப்பதற்கு நாம் அனைவருமே பாடுபட வேண்டும்.

குறைந்த பட்சம் அடுத்த ஆண்டில் இருந்தாவது ‘தீபாவளி’ என்று முறையாக உச்சரித்து, எழுதி, நாம் கொண்டாடும் தீபத் திருநாள் அர்த்தம் பொதிந்த ஒன்றாக இருப்பதை உறுதி செய்வது சிறப்பு.