பி.எஸ்.எம். போட்டியிட்டால் ம.இ.கா. மண்ணை கவ்வும் ~இராகவன் கருப்பையா

எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பி.எஸ்.எம். கட்சி பக்காத்தானுடன் கூட்டு சேரவிருப்பது ம.இ.கா.வுக்கு ஒரு பேரிடியாக அமையக்கூடும்.

பேராக் மாநிலத்தில் உள்ள சுங்ஙை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுப்பதற்கு ம.இ.கா. அண்மைய காலமாக பலதரப்படட் வியூகங்களைத் தீட்டிவருவதாகத் தெரிகிறது.

ம.இ.கா.வின் நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது, வரவேற்கத்தக்கது. ஏனெனில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கும் மேல் அந்தத் தொகுதி அக்கட்சியின் அசைக்க முடியாதக் கோட்டையாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1955ஆம் ஆண்டிலிருந்து 18 ஆண்டுகளுக்கு முன்னாள் ம.இ.கா. தலைவர் மறைந்த துன் சம்பந்தனும் பிறகு 1974ஆம் ஆண்டிலிருந்து 2008 வரையில் சாமிவேலுவும் அத்தொகுதியை தக்க வைத்திருந்தனர்.

ஆனால் கடந்த 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடைபெற்ற ‘ஹிண்ட்ராஃப்’ பேரணியைத் தொடர்ந்து ஏற்பட்ட எதிர்ப்புப் பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட பெரும்புள்ளிகளில் சாமிவேலுவும் ஒருவர் என்பதை நாம் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அப்பேரணியைத் தொடர்ந்து சில மாதங்கள் கழித்து நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தலில் பி.எஸ்.எம். கட்சியைச் சேர்ந்த டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் சுங்ஙை சிப்புட்டின் இரும்பு மனிதர் என்று வருணிக்கப்படட சாமிவேலுவின் தலைவிதியை நொடிப்பொழுதில் புரட்டிப் போட்டார்.

சாமிவேலுவின் அந்தத் தோல்வி சுங்ஙை சிப்புட்டில் ம.இ.கா.வின் சகாப்தத்தை நிரந்தரமாக ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது என்று சொன்னாலும் அது மிகையில்லை.

ஏனெனில் 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற 13ஆவது பொதுத் தேர்தலில் அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்ட மைக்கல் 14ஆவது பொதுத் தேர்தலில் பி.கே.ஆர்.இன் கேசவனிடம் தோல்வியடைந்தார்.

சுங்ஙை சிப்புட் அரசியலைப் பொறுத்த வரையில் மைக்கலோடு ஒப்பிட்டால் கேசவன் ஒரு கத்துக்குட்டிதான். ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஏற்படுத்திய அதிர்வலையில்தான் அவர் அத்தொகுதியைக் கைப்பற்றினார் என்பதுவே உண்மை.

இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் அத்தொகுதியைத் தற்காக்க அவருக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்று தெரியவில்லை.

ஏனென்றால் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் அவருடைய சொந்த ஊழியரே அவருக்கு எதிராக பாலியல் புகார் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் களங்கத்திற்குள்ளான அவரை பி.கே.ஆர். களமிறக்குமா, அப்படியே போட்டியிட தேர்வு செய்யப்பட்டாலும் அவர் வெற்றி பெறுவாரா போன்ற சரளமான கேள்விகள் எழத்தான் செய்கிறது.

இதற்கிடையே கடந்த பல மாதங்களாக ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் சுங்ஙை சிப்புட் பகுதி மக்களுக்கு பிரத்தியேகமாக சேவையாற்றி வருவதையும் மக்கள் கவனிக்காமல் இல்லை.

அடுத்த பொதுத் தேர்தலில் ம.இ.கா. சார்பாக சுங்ஙை சிப்புட்டில் அவர் களமிறங்கக் கூடும் எனும் யூகங்கள் வலுத்து வருகிற இவ்வேளையில்தான் திடீரென கிழக்கு ஆசியாவுக்கான சிறப்புத் தூதராக பிரதமர் அவரை நியமனம் செய்துள்ளார்.

அந்த நியமனம் முழு அமைச்சர் அந்தஸ்த்தைக் கொண்ட ஒரு பொருப்பு என்பதால் சுங்ஙை சிப்புட் தொகுதி தொடர்பாக அக்கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை எவ்வாறாக இருக்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை.

அதே வேளை இத்தகைய நியமனங்களும் நிரந்தரமான ஒன்றல்ல என்பதும் எல்லாரும் அறிந்த ஒன்றுதான். கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து அப்பதவியை வகித்த சாமிவேலு, பக்காத்தான் ஆட்சிக்கு வந்த மறுகனமே அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

எது எப்படியாயினும் ம.இ.கா.வை பிரதிநிதித்து சுங்ஙை சிப்புட்டில் யார் போட்டியிட்டாலும் வெற்றியை எதிர்பார்ப்பது வெறும் பகல் கனவாகவே முடியும் என்பதில் ஐயமில்லை.

பி.எஸ்.எம். கட்சியின் தேசியத் தலைவருமான மைக்கல் ஒரு மருத்துவராக மட்டுமின்றி சமூக சேவையிலும்அந்த வட்டார மக்களிடையே பெரும் செல்வாக்குடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பக்காத்தான்  கூட்டணியுடன் இணைந்து செயல்பட எண்ணம் கொண்டிருப்பதாக அண்மையில் அவர் செய்த அறிவிப்பு ம.இ.கா. வட்டாரத்தில் பெரும் சலசலப்பு மட்டுமின்றி ஒரு விதப் பீதியையும் கண்டிப்பாக ஏற்படுத்தியிருக்கும்.

தொகுதி மக்களை கவருவதற்கு அக்கட்சியினர் எப்படிப்பட்ட ஏற்பாடுகளை அங்கு மேற்கொண்டு வந்தாலும் அவர்களுடைய ஜம்பம் பலிக்காது என்றே தெரிகிறது.

எனவே சுங்ஙை சிப்புட்டில் மைக்கல் களமிரங்கும் பட்சத்தில் ம.இ.கா. மண்ணைக் கவ்வும் என்பது மட்டும் உறுதி.