இராகவன் கருப்பையா- நடந்து முடிந்த மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காடெக் தொகுதியில் போட்டியிட்ட ம.இ.கா.வின் சண்முகம் அடைந்த வெற்றி அக்கட்சிக்கு ஒரு திடீர் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
சென்ற 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடளாவிய நிலையில் படுதோல்வியைத் தழுவிய அந்தக்கட்சி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் மிகவும் நலிவடைந்து உற்சாகமின்றிக் காணப்பட்டது.
எனினும் கொல்லைப்புறமாக ஆட்சியைக் கைப்பற்றிய சில அரசியல்வாதிகள் அரசாங்க நிர்வாகத்தில் இடம்பெற ம.இ.கா.வுக்கும் வாய்ப்பளித்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் மட்டுமின்றி எல்லா நிலைகளிலும் உள்ள உறுப்பினர்களும் சற்று விழித்தெழுந்தனர். ஏனெனில் 14ஆவது பொதுத் தேர்தலில் அடைந்த தோல்விக்குப் பிறகு அதன் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் உள்பட நிறையப் பேர் அரசியலை விட்டே விலகினார்கள்.
சுப்ரமணியம் தனது மருத்துவத் தொழிலுக்குத் திரும்பியுள்ள வேளையில் அந்தக் கட்சியின் துணைத்தலைவராக இருந்த தேவமணி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.
அவ்வாண்டில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் அப்போதைய உதவித் தலைவர் விக்னேஸ்வரன் போட்டியின்றித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவருக்கான போட்டியில் எம்.சரவணன் தொழிலதிபர் ராமசாமியைத் தோற்கடித்தார்.
இந்நிலையில் மலாக்காவில் கிடைத்த வெற்றியானது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதால் வரும் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனல் பறப்பதாகத் தெரிகிறது.
விக்னேஸ்வரனும் சரவணனும் தங்களுடைய பதவிகளைப் போட்டியின்றித் தற்காத்துக் கொண்ட வேளையில் 3 உதவித் தலைவர்களுக்கான போட்டியில் 6 பேர் களம் காண்கின்றனர்.
நடப்பு உதவித் தலைவர்களான முருகையா, சிவராஜ் மற்றும் மோகனை எதிர்த்துத் தலைமைச் செயலாளர் அசோகன், தகவல் பிரிவுத் தலைவர் குணாளன் மற்றும் நிர்வாகச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் போட்டியில் குதித்துள்ளனர்.
21 இடங்களைக் கொண்ட மத்தியச் செயலவை உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு மொத்தம் 60 பேர் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
உதவித் தலைவர் முருகையா அரசாங்க நிர்வாகத்தில் பரந்த அனுபவமுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009ஆம் ஆண்டில் பி.பி.பி. எனும் மக்கள் முற்போக்கு கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்த காலத்தில் நஜிப் அரசாங்கத்தில் பிரதமர் துறைத் துணையமைச்சராக 2 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அந்தச் சமயத்தில் அவர் ஆற்றிய மகத்தான சேவைகளை இன்றளவும் கூட நிறையப் பேர் நினைவு கூறுகின்றனர்.
முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரான சிவராஜ் கடந்த பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார். ஆனால் அந்த வெற்றி மிகக் குறுகிய காலமே நீடித்தது. தேர்தலில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதன் அடிப்படையில் அவ்வெற்றியை நீதிமன்றம் பிறகு ரத்து செய்தது நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.
அசோகன் முன்னாள் ஜொகூர் மாநிலச் சட்ட மன்ற உறுப்பினராவார். மோகன் ஒரு மேலவை உறுப்பினர். இதர 2 பேருக்கும் அரசாங்க நிர்வாகத்தில் அனுபவம் இருப்பதாகத் தெரியவில்லை.
மலாக்கா சட்டமன்றத்திற்குத் தேர்வாகியுள்ள சண்முகம் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படக் கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சண்முகத்தின் வெற்றியும் அவர் ஆட்சிக்குழு உறுப்பினராவதற்கான சாத்தியமும் ம.இ.கா. தேர்தலை நொடிப் பொழுதில் விறுவிறுப்பான ஒன்றாக மாற்றியுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடைபெறக்கூடும் எனும் யூகங்கள் வலுத்து வரும் இவ்வேளையில் ம.இ.கா.வைப் பொறுத்த வரையில் உதவித்தலைவராக தேர்வு செய்யப்படுவதும் மத்தியச் செயலவையில் இடம்பெறுவதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
கட்சியைப் பிரதிநிதித்துப் பாரிசான் சார்பில் நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்கோ போட்டியிடக் குறைந்த பட்சம் 15 பேருக்காவது வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியே இப்பட்டியலில் விடுபட்டாலும் பாரிசான் ஆட்சியமைத்தால் மேலவை உறுப்பினராக நியமனம் பெறுவது அல்லது அரசாங்க நிறுவனங்களில் உயர் பதவிகளில் அமர்த்தப்படுவது போன்ற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. ஏனெனில் இத்துறைகளில் எல்லாம் அரசியல் நியமனங்களே ஆதிக்கம் செலுத்துகிறது. இத்தகைய காரணங்களினால்தான் தற்போதைய கட்சித் தேர்தல் அதிகச் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
கடந்த காலங்களில் போல் இல்லாமல் தற்போதைய சூழலில் நிறைய கட்டுப்பாடுகள் உள்ளதால் பிரச்சாரம் செய்வதற்கு வேட்பாளர்கள் சற்றுச் சிரமப்படுவதாகத் தெரிகிறது. இருந்த போதிலும் வெற்றியடைந்தால் கிடைக்கக் கூடிய அனுகூலங்களைக் கருத்தில் கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு இரவு பகலாகப் பல்வேறு யுக்திகள் கையாளப்படுவதாக நம்பப்படுகிறது.
பாரிசான் ஊழல்வாதிகள் நிறைந்த ஒரு கட்சி எனப் பட்டயம் பூசப்பட்டுள்ள போதிலும் மலாக்காவில் அக்கூட்டணி பதிவு செய்த வெற்றிக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. பாரிசான் மீது மக்களுக்கு மீண்டும் அன்பு வந்துவிட்டது அல்லது மறுபடியும் நம்பிக்கை துளிர்விடுகிறது என்று அவ்வெற்றி பொருள்படாது.
எனவே ‘பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்’ எனும் அடிப்படையில்தான் காடெக்கில் ம.இ.கா.வுக்கு வெற்றிக் கிட்டியது எனப் பரவலாகப் பேசப்படுவதால் அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதையும் அக்கட்சியின் உறுப்பினர்கள் உணரவேண்டும்.