இராகவன் கருப்பையா – நாட்டை உலுக்கிய வரலாறு காணாத வெள்ளப் பேரிடர் நிகழ்ந்து 10 நாள்களைக் கடந்தும் இன்று வரையில் முதன்மையாகப் பேசப்படுவது ஒரே விசயம்தான் – ஒற்றுமை!
அரசாங்க இலாகாக்களும் அமைச்சர்களும் கண்டும் காணாததைப் போல ஆழ்ந்த நித்திரையில் இருந்த முதல் இரண்டு மூன்று நாள்கள் மட்டுமின்றி இன்று வரையிலும் கூட மலர்ந்து கொண்டிருக்கும் இனங்களுக்கிடையிலான இணக்கம் குறித்துத்தான் நாடளாவிய நிலையில் தொடர்ந்து பேசப்படுகிறது.
இந்தியர், சீனர், மலாய்க்காரர் மட்டுமின்றி இங்குப் பணியாற்றும் அயல் நாட்டுத் தொழிலாளர்களும் கூட அந்த இக்கட்டான சூழலில் இன, மதப் பேதமின்றி ஒருவருக்கொருவர் தோல் கொடுத்து உதவிக் கொண்டதை உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் பாராட்டிய வண்ணமாக இருக்கின்றன.
இது போன்ற புரிந்துணர்வும் நல்லிணக்கமும் நல்லுறவும் நம் நாட்டுக்குப் புதிய விசயம் ஒன்றுமில்லை என்பது நாம் எல்லாருமே அறிந்த ஒன்றுதான். காலங்காலமாக எல்லா இனங்களும் மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து வளர்த்த நாடுதான் இது.
ஆனால் அண்மைய ஆண்டுகளாக அந்த ஒருமைப்பாட்டைத் தங்களுடைய சுய இலாபத்திற்காகச் சுக்கு நூறாக நொறுக்கிக் குளிர்காய்ந்தது இனவெறி பிடித்த சில அரசியல்வாதிகள்தான் என்ற உண்மையும் மக்களுக்குத் தெரியும்.
பல்லின மக்களும் ஒற்றுமையாக இருந்தால் அரசியலில் தாங்கள் ராஜ்யம் செய்ய முடியாது என்ற விஷமத்தனமான எண்ணத்தைக் கொண்ட அந்த அரசியல்வாதிகளின் போக்கினால்தான் நாட்டில் பல நிலைகளிலும் இனத்துவேசம் தலைதூக்கி மலிந்து கிடக்கிறது.
எனவே இந்த வெள்ளப் பேரிடரால் ஏற்பட்ட இன ஒற்றுமை இத்தகைய புல்லுருவிகளுக்கு நிச்சயம் மனக் கசப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கும் என்று உறுதியாக நம்பலாம். குறிப்பாகப் பொதுத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அவர்கள் தங்களுடைய நச்சுத் தன்மையைக் கக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் இந்தியாவின் பணச்சலவை சட்டத்தின் பிடியிலிருந்து நழுவி ஓடிவந்து இங்கு ஒளிந்திருக்கும் ஜாக்கிர் நாய் பழையபடி தனது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டார்.
பயங்கரவாதத்தைத் தூண்டக் கூடியவர் எனும் அடிப்படையில் உலகின் பல நாடுகள் அவருக்குத் தடைவிதித்துள்ளன. ஆனால் அவருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கியுள்ள மலேசிய அரசாங்கம் பொது நிகழ்வுகளில் பேசக்கூடாது எனச் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் வாய்ப்பூட்டுப் போட்டது. இனங்களைப் பிளவுபடுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டதால் அவருக்கு அந்தக் கதி நேர்ந்தது.
ஆனால் வார இறுதியில் சமயங்களைப் பிளவுபடுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பாக அவர் வெளியிட்ட விஷக்கருத்தினால் ஒற்றுமையை விரும்பும் பொது மக்கள் மிகுந்த சினமடைந்துள்ளனர்.
பொது மக்கள் மட்டும்தான் கண்டனக்குரல் எழுப்புகிறார்களே தவிர அரசாங்கத் தரப்பில் எல்லாருமே மவுனமாகத்தான் இருக்கிறார்கள். எனவே அவருடைய வாய்ப் பூட்டை யார் திறந்தது, அதற்கு அரசியல் பின்னணி இருக்கிறதா, போன்ற ஐயப்பாடுகள் மக்கள் மனங்களில் இப்போது எழுந்துள்ளது.
இதற்கிடையே இவ்வாரம் கிறிஸ்துவச் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த தேசிய அளவிலான கிறிஸ்துமஸ் பண்டிகை தேனீர் விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் சப்ரி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரோ அவருடைய பிரதிநிதியோ இந்த வருடாந்தர நிகழ்வில் கலந்து கொள்ளாதது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்ட செப்பூத்தே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கொக், ஏற்பாட்டாளர்களின் அழைப்பைப் பிரதமர் இலாகா சற்றும் கண்டு கொள்ளவே இல்லை என்று கூறினார். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
ஆக இன வெறிபிடித்த அரசியல்வாதிகளையும் விஷத்தைக் கக்கும் சமயப் போதகர்களையும் புறக்கணித்து அவர்களுடைய கருத்துகளுக்கு அப்பாற்பட்டு, தங்களுடைய சுயச் சிந்தனையின் பேரில் தற்போது மலர்ந்துள்ள நல்லிணக்கத்திற்குப் பொது மக்கள் உரமிடுவார்களேயானால் அதுவே நம் நாட்டின் செழிப்பத்திற்கு திறவுகோலாக அமையும்.