கி.சீலதாஸ் –முன்னொரு காலத்தில் கிராம வைத்தியர் ஒருவர் மிகுந்த புகழுடனும், சிறப்புடனும் வாழ்ந்து வந்தார். எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும் அதைக் குணப்படுத்துவதில் வல்லவர். இந்த மருத்துவரிடம் மருத்துவம் பயில வந்த மாணவன், குரு வைத்தியர் போகும் இடமெல்லாம் உடன் செல்வது வழக்கம். ஒரு நோயாளியின் வீட்டுக்குப் போனால் குரு வைத்தியர் முதலில் வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டுத்தான் நோயாளியைப் பரிசோதிப்பது வழக்கம். வைத்தியக் குருவின் இந்தப் பழக்கத்திற்கான காரணத்தை அறிய விரும்பி, “குருவே, நீங்கள் ஒவ்வொரு முறையும் நோயாளியின் வீட்டிற்குள் நுழையும் முன்னர் வீட்டைச் சுற்றி வருகிறீர்களே! ஏன்?” என்று கேட்டான்.
அதற்கு குரு, “அடே சிஷ்யா! எல்லா நோய்களும் வயிற்றில் இருந்துதான் கிளம்புகிறது. நாம் ஜீரணிக்காத உணவைச் சாப்பிட்டாலோ அல்லது அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டாலோ நோய் ஏற்படுவது சகஜம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைக் கேட்டதில்லையா?”
குரு சொன்னதில் உண்மை இருக்கிறதா என்பதை அறிய விரும்பினான் சீடன். ஒரு நோயாளியின் வீட்டுக்குப் போனபோது அந்த வீட்டைச் சுற்றிலும் வாழைப்பழ தோல் கிடப்பதைப் பார்த்த வைத்தியர் நோயாளியிடம், “நேற்று அதிகமாக வாழைப்பழம் சாப்பிட்டாயோ?” என்று கேட்க நோயாளியும், “ஆமாம், வைத்தியரே!” என்று ஒப்புக்கொண்டான். சீடனுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் குருவின் பேச்சைச் சந்தேகிக்கலாமா? கூடாது. எனவே, அன்றிலிருந்து நோயாளிகளைப் பார்க்க போனால் எப்பொழுதும் போல் வீட்டைச் சுற்றி வரும் ஒத்திகை நடக்கும்.
ஒரு நாள் கிராமத்து தலைவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரோ வயிற்று வலி எனப் படுத்த படுக்கை. தம் சீடனை அனுப்பி வைத்தார். சீடனும் குருவின் கட்டளையை ஏற்று துணிவோடு போனான். நோயாளியின் வீட்டைச் சுற்றிப் பார்த்தான். சாப்பாட்டு பொருட்கள் உட்கொண்டதற்கான தடயம் ஏதும் காணவில்லை. ஆனால், ஏராளமான செருப்பு ஜோடிகள் இருப்பதைப் பார்த்து, “ஆகா… இந்தச் செருப்புதான் கிராமத் தலைவரின் நோய்க்குக் காரணம்” எனத் தீர்மானித்து, நோயாளியை நன்கு பரிசோதித்த பின்னர், “ஐயா, நேற்று அதிகமாகச் செருப்பைச் சாப்பிட்டதால் இந்த வயிறு கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இன்று பூராவும் வயிறைக் காயப்போடுங்கள். வயிறு சுத்தமாகிவிட்டால் நோய் போய்விடும்!” என்று சொன்னதோடு வயிற்று வலிக்கு மாத்திரையைக் கொடுத்துவிட்டுப் பயணப்பட்டான்.
செருப்புக்கும், தமக்கு ஏற்பட்டிருக்கும் நோய்க்கும் என்ன சம்பந்தம் என்று கிராமத் தலைவர் வைத்தியச் சீடனிடம் கேட்கவும் இல்லை, அவனும் எந்தக் காரணத்தையும் சொல்லவும் இல்லை. நம்பத்தக்க காரணம் அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்க காரணம் ஏதும் புலப்படாவிட்டால் எதையாவது சொல்லி சமாளிப்பதுதான் புத்திசாலித்தனம் எனப் பெரும்பாலோர் நடந்து கொள்வர். செருப்பைச் சாப்பிட்டது என்பதற்கு ஒரு வேளை வைத்திய மொழியில் வேறேதாவது அர்த்தம் இருக்கலாம் என நம்பினார் கிராமத் தலைவர்.
சீடன் தன் குருவின் மனைக்குத் திரும்பியதும் நடந்ததை விளக்கினான். குருவின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை. “அடப்பாவி! செருப்புக்கும் வயிற்று வலிக்கும் என்ன தொடர்பு? இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுற மாதிரி இருக்கிறதே!”
“குருவே, தங்களின் அணுகுமுறைகளைப் பார்த்து பழகிவிட்டேன். உணவுப் பண்டங்கள், சாப்பிட்டதற்கான ஆதாரம் கிடைக்காததால் காணப்பட்ட செருப்பை நோயின் காரணமாகச் சொன்னேன்” என்று விளக்கினான்.
“சிஷ்யா… காரணம் சொல்லும்போது அது நியாயமானதாக, ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, சிந்திக்கத்தக்கதாக இருக்க வேண்டும். ஒரு சூழ்நிலைக்குக் காரணம் வேண்டும் என்பதற்காக மனதில் படும் பொருந்தாத, ஆதாரமற்ற காரணங்களைச் சொல்லக்கூடாது. இன்றைய சூழ்நிலையில் உன்னை நம்பி இருக்கலாம். உன் முட்டாள்தனத்தை நம்புவதாகக் கூட நடந்திருக்கலாம். ஆனால், நீயே அதைச் சுத்த மூடன் என மட்டுமல்ல ஒரு பரம மோசடிக்காரன் என்று தீர்மானித்திருந்தால் அதில் ஆச்சரியப்பட வேண்டாம்” என்றார்.
குருவின் விளக்கத்தைக் கேட்ட சீடன், குருவின் மனத்தில் ஏற்பட்டிருக்கும் சங்கடத்தை நீக்கும் என்ற நம்பிக்கையில், “குருவே! நான் கிராமத் தலைவரின் வீட்டை விட்டுக் கிளம்பும்போது அவர் பணியாட்களிடம் வீட்டைச் சுற்றியுள்ள செருப்புகளை அகற்றும்படி சொன்னார்!” என்றான்.
“நல்ல வேளை. நீ தப்பித்தாய்! அந்தச் செருப்புகளை உன் மீது வீசாதது உன் பாக்கியம்” என்றார் கிராமத் தலைவர்.
இந்தச் சின்ன துணுக்கைக் கேட்டு பல ஆண்டுகளாகிவிட்டன. அதில் உள்ளடங்கியிருக்கும் கருத்து ஆழமானது, சாகாவரம் பெற்றது என்பது என் நம்பிக்கை.
இக்காலகட்டத்தில் அரசியல்வாதிகள், பொதுநலவாதிகள், சமயவாதிகள் எதையாவது சொல்லுவார்கள். அவர்கள் சொல்லுவதில் மதிக்கத்தக்க அர்த்தம் ஏதாவது இருக்கிறதா என்பதை நினைத்துப் பார்க்காமல் தாம் சொல்லுவதுதான் சரி, கொடுக்கும் விளக்கங்களை மறுப்பின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கர்வம் கொண்டவர்களாக இருப்பதையும் நாம் அறிந்திருப்பது நல்லது.
சமீபத்தில் சீனர்களின் உணவு உண்ணும் கலாச்சாரத்தைப் பற்றி முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது அந்தக் கலாச்சாரம் தேசிய ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குத் தடையாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
சீனர்கள் உணவு உண்ணும்போது குச்சி இணைகளைப் (சாப்ஸ்டிக்ஸ்) பயன்படுத்துவதை விமர்சித்த மகாதீர், மலாய்க்காரர்களைப் போல் கைவிரல்களைப் பயன்படுத்தாதது தேசிய ஒருங்கிணைப்புக்கு இடையூறாக உள்ளது என்கிறார். இந்த உணவுக் குச்சியிணையைச் சீனர்கள் மட்டுமல்ல ஜப்பானியர்களும், கொரியர்களும் தங்களின் உணவு கலாச்சாரமாகக் கொண்டிருப்பதை மகாதீரின் ஆய்விலிருந்து நழுவியது விசித்திரமே. அது ஒரு புறமிருக்க, உணவு உண்ணும் முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது மகாதீரின் கவனத்தை ஈர்க்காததும் வியப்பே.
மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட காலனித்துவ அரசியல், அவர்களின் வாழ்வு முறை ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் பரப்பப்பட்டது மட்டுமல்லாது அவர்களின் சமய, கலாச்சார வழிகள் கூட ஆக்கிரமிக்கப்பட்டவர்களின் மீது திணிக்கப்பட்டன. முகலாயர்களின் செல்வாக்கும் கவனத்தில் கொண்டிருப்பது தேவைதான்.
மேற்கத்திய உணவு உட்கொள்ளும் கலாச்சாரத்தைப் பார்த்தால் சாதாரண ஆசியக்காரனுக்கு வியப்பாக இருந்திருக்கலாம். வெள்ளையர்கள் கரண்டி, முட்கரண்டி, கத்தி போன்ற உணவு கருவிகளைப் பயன்படுத்துவார்கள். நாகரிக சீனர்களின் உணவகங்கள் மட்டுமல்ல மற்ற இனத்தவர்களின் உணவகங்களில் கூட கத்தி, கரண்டி, முட்கரண்டி போன்ற சாதனங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. உணவுகளை உண்ட பிறகு பற்களில் சிக்கிக்கொண்ட உணவுத் துணுக்குகளை அகற்ற பல் குச்சியும் (இதைக் கடப்பாரை என்று சொல்வதும் உண்டு) வழங்கப்படுகிறது.
தேசிய ஒருங்கிணைப்பில் உணவுப் பிரச்சினை. மகாதீரின் கணிப்புப்படி உணவுக் குச்சி கலாச்சாரம் தடையாக இருக்கிறதாம். அடுத்து என்ன? பெரும்பான்மையினர் உண்ணும் உணவில் காணப்படும் கட்டுப்பாட்டைச் சிறுபான்மையினரும் பின்பற்றினால் தேசிய ஒருங்கிணைப்பு துரிதமாகும் என்பது அவருடைய தேசிய ஒருங்கிணைப்புக்கான வழி. இது நியாயமான அணுகுமுறையா?
மேல்மட்டத்தில் இருப்பவர்கள் மேற்கத்திய உணவுகளில் மோகம் கொண்டு அத்தகைய உணவகங்களுக்கு அடிக்கடி போவது இயல்பாகிவிட்டது. அரசு வழங்கும் விருந்துகளில் கரண்டி, முட்கரண்டி கொடுக்கப்படுகின்றன. கைவிரல்களைப் பயன்படுத்தும்படி உற்சாகப்படுத்தப்படவில்லையே. வாழை இலை உணவகங்களைத் தவிர்த்து, சாதாரண உணவகங்களில் கூட கரண்டி, முட்கரண்டி கலாச்சாரம் ஓங்கி காணப்படுகிறது. வாழை இலை சாப்பாட்டில் கூட மேற்கத்திய கரண்டி கலாச்சாரத்துக்கு இடமளிப்பதைக் காணலாமே. இந்தச் சாதாரண உண்மைகளைத் தங்க கோபுரத்தில் அமர்ந்திருக்கும் மகாதீர் போன்றவர்களுக்குப் புரியாது என்பது தெளிவாகிவிட்டது.
மகாதீரின் கருத்து எப்படிப்பட்ட ரகத்தில் சேர்ப்பது? கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற துணிவில்லாத, நேர்மையான நோக்கங்களைக் கொண்டிராத, தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து பிறர் மீது பழியைச் சுமத்துவது போன்ற அநாகரிக செயல்களைக் கையாளுவோரின் ரகத்தில் சேர்ந்துவிட்டார் என்றால் அதில் பிசகு இல்லையே!
We should ignore his comments. He is responsible for divide Malaysians for his own and his family’s gain.