படகு இருமுறை கவிழ.. தாயை காப்பற்றிய அனுபவம்!  

இராகவன் கருப்பையா- வெள்ளப்பேரிடரில் நாம் கண்ட அனுபவங்கள், மனித நேயம் உள்ள மக்கள் நம்மிடையே பலர் உள்ளனர் என்பதையும், பொது நலம் காப்பதும், துணிந்து உதவுவதும் – ஒரு புதிய இலக்கணத்தை வாழ்வியலில் இணத்துள்ளதையும் உணர முடிகிறது.

அந்தப்பிணைப்பு இந்தியர்களிடம் அதிகம் இருந்தாக கருதப்படுவதற்கான காரணம், அரசின் இனவாத ஒடுக்குதலால் உருவான தாக்கம், பரிவும் பாசமும் கொண்ட ஒரு ஆக்கரமான  உந்துதலாகவும் சவாலாகவும் உருவாக்கம் கண்டதாகும். இவை,  மென்மேலும் நாம் வலுபெற வழி வகுக்கும் என நம்பலாம்.

இதோடு பாசப்பிணைபுடன் பலர் செயல்பட்டு உள்ளனர், அவர்களில் ஒருவர் தன் கதையை பகிர்கிறார்.

சுமார் 12 அடி வெள்ளத்தில் மூழ்கிய தனது வீட்டின் மேல் மாடியில் சிக்கிக் கொண்டிருந்த தாயாரைக் காப்பாற்றச் சென்ற போது இரு முறை படகு கவிழ்ந்து உயிருக்குப் போராடியதாகக் கூறுகிறார் ஒரு தொழில் முனைவர்.

படகு குப்புறக்கவிழ்ந்து அதற்கடியில் சிக்கிக் கொண்டு திணறிய அத்தருணத்தில் மரண வாசலில் இருப்பதைப் போன்ற பயங்கர உணர்வு ஏற்பட்டதாகக் கூறும் கேசவ சுந்தர் மறக்க முடியாத தனது அனுபவத்தை இவ்வாறு விவரிக்கிறார்.

கடந்த 16ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி இடைவிடாது மழை பெய்து கொண்டிருந்த போதிலும் பெரிய வெள்ளம் வரும் அளவுக்கு நிலைமை மோசமாகாது என்று எண்ணி நாங்கள் எல்லாருமே மெத்தனமாக இருந்துவிட்டோம்.

சனிக்கிழமை காலையில் அலுவலகத்தில் இருந்த என்னை அம்மா தொலைபேசியில் அழைத்த போதும் கூட ஸ்ரீ மூடாவில் சாதாரணமான வெள்ளம் வழக்கமான ஒன்றுதானே என்று இருந்துவிட்டேன்.

நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அழைத்த அம்மா, வீட்டினுள் சுமார் 2 அடி உயரத்திற்கு வெள்ளம் புகுந்துவிட்டதாகப் பதறியதைத் தொடர்ந்து உடனே விரைந்தேன்.

அங்குப் போய்ச் சேர்வதற்குள் மல மளவென உயர்ந்த நீர் சுமார் 5 அடி உயர வெள்ளக்காடாக அவ்விடத்தை உருமாற்றியிருந்த கோலம் எனக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீட்டில் தனியாக இருக்கும் அம்மாவை மேல் மாடிக்குச் சென்று பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டுப் படகு ஒன்றை ஏற்பாடு செய்ய முற்பட்ட என் மனதை ஒருவித அச்சமும் அவ்வேளையில் ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை. ஏனெனில் 84 வயதுடைய என் அம்மாவை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்பது மட்டுமே அப்போதைய என்னுடைய வேட்கை.

ஆங்காங்கே ஒருசில படகுகள் மட்டுமே அங்குமிங்குமாக விரைந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தன. அங்கு உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த அரசு சாரா நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் எனக்குப் படகுக் கிடைப்பதற்குள் பிற்பகல் மணி 3 ஆகி விட்டது.

‘வந்து காப்பாற்று ஐயா’ எனக் கைப்பேசியில் என்னை அழைத்து அழுது கொண்டிருந்த அம்மாவுடனான தொடர்பும் திடீரெனத் துண்டிக்கப்பட்டது என் மனதை மேலும் படபடக்கச் செய்தது.

ஒருவாறாக மூவர் பயணம் செய்யக்கூடிய அந்தச் சிறிய படகில் நான் அமர்ந்த போது வெள்ளம் கிட்டத்தட்ட 12 அடிக்கு உயர்ந்து விட்டது. ‘பேட்டரி’ எனப்படும் மின்கலத்தினால் இயங்கும் அப்படகில் பாதுகாப்பு அணிகலன்கள் எதுவுமில்லை. மின்கலம் பழுதடைந்தால் படகை இயக்குவதற்கு இரண்டு துடுப்புகள் இருந்தன, அவ்வளவுதான்!

கீழே சுமையுந்து போன்ற கனரக வாகனங்கள் அல்லது வேறு தடங்கல்கள் ஏதாவது இருக்கக் கூடிய சாத்தியத்தால் அந்த மீன்பிடி படகைச் செலுத்திய அதன் உரிமையாளர் மிகவும் மெதுவாகத்தான் அதனை ஒட்டிச் சென்றார்.

அம்மாவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இருப்பு கொள்ளாமல் நிம்மதியிழந்திருந்த எனக்கு அம்மாவின் பாதுகாப்பு மட்டுமே சிந்தனையைக் கலக்கிக் கொண்டிருந்தது.

புறப்பட்டுச் சுமார் 300 மீட்டர் தொலைவில் சற்றுப் பெரிய இயந்திரப்படகு ஒன்று வேகமாக எங்களை முந்திச் சென்ற போது ஏற்பட்ட அலைகளில் எங்களுடைய குட்டிப் படகு திடீரெனத் தலைகுப்புறக் கவிழ்ந்தது.

சுமார் 12 அடி ஆழமுடைய தண்ணீரில் படகுக் கடியில் சிக்கக் கொண்டு மூச்சுக்காகத் திணறிய அத்தருணத்தில்தான் மரணத்தின் வாசல் கண்களுக்குத் தென்பட்டதைப் போன்ற பயங்கர உணர்வு என்னைப் பீடித்தது. தண்ணீரில் மூழ்கி இறப்பது என்றால் இதுதானோ எனும் எண்ணம் கூட ஒரு நொடியில் வந்து மறைந்தது.

தப்பிக்க வழியில்லையா, அம்மாவை இனிப் பார்க்க முடியாதா, இறப்புதான் அடுத்த கட்டமா, என்ற சிந்தனையெல்லாம் அந்த வினாடிகளில் வாட்டி என்னை மேலும் வலுவிழக்கச் செய்தது.

படகுக்கடியில் மூச்சுத் திணறலில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த இரண்டொரு நிமிடங்களில் நிறையத் தண்ணீரையும் குடித்துவிட்டுத் தட்டுத்தடுமாறி மேலெழுந்த போது வெள்ளப் பெருக்கில் படகு சற்றுத் தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

என்னைக் காப்பாற்றுவார் என்று நான் எதிர்பார்த்த படகின் உரிமையாளரோ தனது படகை விரட்டிப் பிடிக்க நீந்திச் சென்ற நிலையில் நான் தனித்து விடப்பட்டுள்ளதை உணர்ந்தேன். மரணத்தின் பிடியிலிருந்து தப்பிய எனக்கு நானே துணை என்று நினைத்துக் கொண்டு அருகிலிருந்த விளக்குக் கம்பத்தைத் தாவி பற்றிக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பு என்னுடைய அதிர்ஷ்டம்தான். அந்த மின் கம்பத்தில் சில மின் கம்பிகள் அறுந்துத் தொங்கிக் கொண்டிருந்த போதிலும் விளையக்கூடிய ஆபத்தைப்பற்றி அப்போது சிந்திக்க நேரமில்லை.

ஒற்றுகையில் நீந்திக் கொண்டே படகை மெதுவாக நான் இருந்த இடத்திற்கு இழுத்து வந்த அதன் உரிமையாளர் குப்புறக் கிடந்த அதனை மீண்டும் மிதக்கவிடத் திருப்புவதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். நானும் ஒற்றுகையில் மின் கம்பத்தைப் பிடித்தவாறே இருவரும் ஒரு வழியாக அப்படகைப் புரட்டிப் போட்டோம்.

படகில் இருந்த மின்கலம் நீரில் மூழ்கிவிட்டதால் இனித் துடுப்பைக் கொண்டுதான் அதனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இப்போது. அதற்கு முன்னதாகப் படகினுள் தேங்கியிருக்கும் நீரை வெளியாக்க வேண்டும்.

ஒற்றுகையில் படகைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை அள்ளி வெளியே கொட்டியது சற்றுக் கோமாளித் தனமாக இருந்தாலும் அந்தச் சமயத்தில் எங்களுக்கு வேறு வழியில்லை. அதிர்ஷ்டவசமாக மிதந்து வந்த ஒரு சமையல் பானையும் நெகிழி டப்பாவும்தான் அச்சமயத்தில் உதவியது.

படகு கவிழ்ந்த போது எங்கள் இருவருடைய கைப்பேசிகளும் நீரில் மூழ்கியதால் யாரையும் உதவிக்கு அழைக்கவும் வாய்ப்பில்லை. இந்நிலையில் அம்மாவைப் பற்றிய நினைப்பு என்னை மீண்டும் கவ்வி கொண்டு வாட்டத் தொடங்கியது.

எப்படியோ ஒருவழியாகத் துடுப்பைக் கொண்டே படகைச் செலுத்திச் சென்ற நாங்கள் ஏறக்குறைய 2 மணி நேரங்களுக்குப் பிறகு வீட்டு வளாகத்தைச் சென்றடைந்தோம்.

மேல் மாடியின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தவாறு அம்மா நின்று கொண்டிருப்பதைப் பார்த்த போதுதான் எனக்கு மறுபிறவியெடுத்த ஒரு பிரம்மை ஏற்பட்டது.

இருந்த போதிலும் படகை வீட்டின் கூரைக்கு அருகில் கொண்டு செல்லவோ, நான் கூரை மீது ஏறவோ, அம்மாவை ஜன்னல் வழியாக வெளியேற்றவோ மூடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பரிதவித்த கனங்களை இன்னமும் மறக்க முடியவில்லை.

இவ்வளவு சிரமப்பட்டு வீட்டைச் சென்றடைந்த போதிலும் சுமார் 20 மீட்டர்  தொலைவில் இருந்த அம்மாவை நெருங்க முடியாமல் போனது ஒரு கொடுமையான விசயம்தான். ‘பேட்டரி முடிஞ்சி ஃபோன் நின்னுப் போச்சி ஐயா. யாரையும் கூப்பிட முடியல. எனக்குப் பசிக்கிது ஐயா. ரொட்டி ஏதாவது இருக்கா’ என்று அம்மா கெஞ்சிய போது எனக்கு இதயமே நின்றுவிடும் போல் இருந்தது. பெற்றத்தாயின் பசித் தீர்க்க ஒரு ரொட்டித்துண்டுக் கூடக் கொடுக்க முடியாத பாவியாக உள்ளூர அழுதேன் அத்தருணத்தில்.

எனினும் என்னைச் சுதாகரித்துக் கொண்டு, ‘தைரியமாக இருங்க அம்மா. நான் சாப்பாடு கொண்டு வறேன். போயிட்டு வேறப் படகில வறேன்’ என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தோம். ஜன்னல் வழியாக அம்மாவை வெளியேற்றியிருந்தாலும் இந்தப் படகில் அவரை ஏற்ற எனக்குத் துணிச்சல் இல்லை என்பதுதான் உண்மை.

‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்பதை நிறைய தடவை படித்திருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அன்றுதான் அந்தச் சொற்றொடரை உண்மையிலேயே அனுபவித்தேன்.

புறப்பட்டு 10 நிமிடங்களீள்ல் மறுபடியும் எங்கள் படகு கவிழும் என்று நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இம்முறை துடுப்பைக் கொண்டு இயக்கப்பட்ட எங்கள் படகை வேகமாக முந்திச் சென்ற மற்றொரு இயந்திரப் படகு மிகச் சுலபத்தில் கவிழ்த்துவிட்டுப் பறந்தது.

ஏற்கெனவே பட்ட அனுபவம் எனக்கு உதவியதால் இம்முறை மின்னல் வேகத்தில் தாவி அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையை இருக்கப் பற்றிக் கொண்டேன். ஆனால் அக்கிளை படக்கென்று உடைந்து மீண்டும் நான் தண்ணீருக்குள் விழுந்த போதுதான் அது முருங்கை மரக் கிளை என்று தெரிந்தது.

இன்னமும் விடாது மழை பெய்து கொண்டிருந்ததால் மேகங்கள் கருக்கத் தொடங்கிச் சீக்கிரமே இருள் சூழ ஆரம்பித்த அவ்வேளையில் வேறொரு படகுக்காரர் எங்களுக்கு உதவ முன்வந்தார். அவருடைய உதவியுடன் எங்கள் படகை மீண்டும் மிதக்கவிட்ட பிறகு அதனைக் கட்டி இழுத்துச் செல்லவும் அவர் முன் வந்தார்.

பாதுகாப்பாக நாங்கள் வெளியே வந்து சேர்ந்த போது ஏறத்தாழ மணி 8 ஆகிவிட்டது. அதன் பிறகு இரவு சுமார் 10 மணிக்குத்தான் சற்றுப் பெரிய படகு ஒன்றை ஏற்பாடு செய்து தனது தாயை மீட்டு வந்ததாகக் கூறினார் கேசவ சுந்தர்.