இராகவன் கருப்பையா- இந்நாடடில் காலங்காலமாக சீனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் கடிகாரத் தொழிலில் பல்லின மக்களும் பிரமிக்கும் வகையில் கோலோச்சி வருகிறார் ஓர் இந்தியர்.
கடந்த 20 ஆண்டுகளாக தலைநகர் பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் ‘குலோரி டைம் எண்டர்பிரைஸ்’ எனும் நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாகக் கடிகாரத் தொழில் செய்து வரும் குணாளன் சடையப்பன், இத்துறையில் சீனர்களை மிஞ்சும் அளவுக்கு தடம் பதித்து வருகிறார்.
முன்னதாக சுமார் 10 ஆண்டு காலத்திற்கு மஸ்ஜிட் இந்தியா பகுதியில் ஒரு சீனரின் கடிகாரக் கடையில் பணியாற்றிய அவர் இத்துறையின் வேலை நுணுக்கங்களையும் நிர்வாக நடைமுறைகளையும் கவனமாகக் கற்றுக் கொண்டதாகக் கூறினார்.
எவ்வளவுதான் திறமையாக வேலை செய்தாலும் மாற்று இனத்தவரிடம் வேலை செய்யும் போது அந்தத் திறமைக்கு முழுமையாக அங்கீகாரம் கிடைப்பதில்லை. எனவேதான் இத்தொழிலை சுயமாகத் தொடக்குவது என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறும் குணாளன் நொடிப் பொழுதில் கடிகாரங்களை பழுதுபார்ப்பதிலும் வல்லவராகத் திகழ்கிறார்.
தலைநகர் பண்டார் மக்கோத்தா செராஸில் வசிக்கும் அவர் காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணி வரையில் தனது கடையைத் திறந்து வைத்துள்ளார்.
இதுவரையில் ஆயிரக் கணக்கான கை கடிகாரங்களையும் சுவர் கடிகாரங்களையும் பழுதுபார்த்துள்ள 51 வயது குணாளனுக்கு மணைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகள் முதலாம் படிவத்திலும் 2ஆவது மகள் ஆறாம் வகுப்பிலும் பயில்கிறார்கள். அவருடைய ஒரே மகன் இவ்வாண்டு முதலாம் வகுப்பு சென்றுள்ளார்.
எவ்விதமான கடிகாரங்களையும் பழுதுபார்ப்பதில் வல்லமைப் பெற்றுள்ள அவர் சீனத் தயாரிப்பிலான கடிகாரங்களைக் கையாள்வதுதான் சிறமமாக உள்ளது என்று கூறுகிறார். ஏனென்றால் தரமில்லாத அதன் பாகங்கள் சுலபத்தில் உடைந்துவிடுவதே இதற்கான காரணமாகும்.
பழுதடைந்த கடிகாரங்களை சரி செய்வதற்கு தேவையான அதி நவீனக் கருவிகளையும் பெற்றுள்ள குணாளன் எதிர்காலத்தில் தனதுத் தொழிலை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளார். ஆனால் பொருளாதார சிக்கல்தான் அதற்குத் தடையாக உள்ளது.
ஒரு முறை அரசாங்கத்தின் ‘தெக்குன்’ சிறுதொழில் கடனுதவியைப் பெற்ற அவர் இத்தொழிலை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கு பெரியத் தொகை தேவைப் படுவதாகக் கூறுகிறார். குறிப்பாக புதிய, நவீனக் கடிகாரங்களையும் உபரி பாகங்களையும் கொள்முதல் செய்வதற்கு இலட்சக்கணக்கான ரிங்கிட் தேவைப்படுகிறது.
மிகப் பழமையானக் கடிகாரங்களை பொழுது போக்கிற்காக சேகரிப்போர், பழுதடைந்தவற்றை சரி செய்வதற்கு குணாளனைத்தான் நாடி வருகின்றனர். அம்மாதிரியானக் கடிகாரங்களை கையாளும் ஆற்றல் நிறைய பேரிடம் இல்லை என்பதே இதற்குக் காரணம்.
தற்போது தனது கடையில் நூற்றுக்கணக்கான கடிகாரங்களை விற்பனைக்கு வைத்துள்ள குணாளனின் திறமையை அங்கீகரிங்கும் வகையில் நம் இனத்தவர் மட்டுமின்றி பல்லினங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் அதிக அளவில் ஆதரவு வழங்குகின்றனர்.
Doctor Jam(கடிகார மருத்துவர்) என்று செல்லமாக அழைக்கப்படும் அவருடையக் கூர்மையான பார்வையிலிருந்து எந்த ஒரு கடிகாரப் பாகமும் சுலபத்தில் தப்பிவிட முடியாது என்பதற்கு அவருடையத் திறமையே சான்று.
(இவரின் கடை முகவரி: 280, Jalan Tun Sambanthan, Brickfields, 50470 Kuala Lumpur. தொடர்பு எண்: 011-2808 5117)