பாஸ் கட்சியாக மாறும் அம்னோ, அம்னோவாக மாறும் பி.கே.ஆர்.

இராகவன் கருப்பையா –15ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சமயம், இனம் தொடர்பான ‘அரக்கன்’ எனும் தீவிரவாதம் தலைவிரித்தாடுவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்நாட்டில் பொது மக்கள் எவ்வளவுதான் சமய, இன பேதமின்றி ஒற்றுமையாக வாழ முற்பட்டாலும் அதனை சீர்குழைத்து நடுவில் குளிர் காய்வது காலங்காலமாக பல அரசியல்வாதிகளின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகவே உள்ளது.

‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில்தான் நம் நாட்டின் அரசியல்வாதிகள் அண்மைய ஆண்டுகளாக பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக அம்னோவிலும் பாஸ் கட்சியிலும் உள்ள பலர் இப்படிப்பட்ட யுக்தியைக் கையாண்டுதான் நகர்ப் புறங்களுக்கு அப்பால் உள்ள மலாய்க்காரர்களைக் குழப்பி அரசியல் நடத்துகின்றனர் என்று கூட சொல்லலாம்.

ஆனால் சீர்திருத்தங்களை முன்னிறுத்தி பல்லினங்களை பிரதிநிதிக்கும் பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்த மலாய்க்காரர்களும் இவ்வாறே நடந்து கொண்டால் அதனை நாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

அண்மையில் மத்திய பொருளகம் 5 புதிய நிறுவனங்களுக்கு ‘டிஜிட்டல்’ எனப்படும் இலக்க முறையிலான புதிய பொருளகங்களை அமைப்பதற்கான உரிமங்களை அங்கீகரித்தது. இந்த 5 நிறுவனங்களில் ஒன்று மட்டுமே பூமிபுத்ரா நிறுவனம் என்று நம்பப்படுகிறது.

பி.கே.ஆர். கட்சியின் தலைமைச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோன் இதனை அரசியலாக்கி, ‘ஏன் ஒரு பூமிபுத்ரா நிறுவனத்திற்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது’ என கேள்வி எழுப்பியது நமக்கெல்லாம் வியப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்கும் வழிவகுத்தது.

அந்த 5 நிறுவனங்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கை இனபாகுபாடின்றி ஆற்றலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது என மத்திய பொருளகம் நியாயமாக விளக்கமளித்துள்ளது.

ஆனால் இதுநாள் வரையில் இனவாதமோ தீவிரவாதமோ இல்லாத நடுநிலையானக் கட்சி எனும் அடையாளத்தை கட்டிக் காத்து வந்த பி.கே.ஆர். கட்சிக்கு சைஃபுடினின் கருத்து ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.

இத்தகையப் போக்கை அவர் கடைபிடிப்பாரேயானால் அம்னோவுக்கும் பி.கே.ஆர். கட்சிக்கும் என்ன வித்தியாசம் எனும் ஐயப்பாடும் எரிச்சலும் மக்கள் மனங்களில் எழுவதில் தவறில்லை.

முன்னாள் உள்நாட்டு வணிகம், பயனீட்டாளர் அமைச்சரும் கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கட்சியின் சக்திவாய்ந்த பொதுச் செயலாளர் பதவியையும் வகிப்பதால் இதனை தனது தனிப்பட்டக் கருத்து என்று சொல்லிவிட முடியாது.

அடுத்தவாரம் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலில் அதன் உதவித் தலைவர் ரஃபிஸியை எதிர்த்து துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் மலாய்க்கார உறுப்பினர்கள் மத்தியில் ஒரு ‘ஹீரோ’வாகக் காட்டிக் கொள்ள இப்படி அவர் பேசியிருகக் கூடும். அல்லது எதிர்வரும் பொதுத் தேர்தலை கருத்தில் வைத்து இதனை செய்திருக்கக் கூடும்.

எது எப்படியாயினும் அவருடைய உள்நோக்கத்தை அது புலப்படுத்துவதாகவே உள்ளது.

பி.கே.ஆர். கட்சியின் நிலை இவ்வாறு இருக்க, அம்னோவின் போக்கு பாஸ் கட்சியைப் போல உள்ளது. எனினும் அம்னோவுக்கு இதுபோன்ற நிலைப்பாடு புதிய விசயமில்லை.

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டை ஆட்சி புரிந்த அக்கட்சி பல தருணங்களில் தனது தீவீர இனவாதப் போக்கை அப்பட்டமாகவே வெளிப்படுத்தியுள்ளது. அதன் தலைவர்கள் பலர்  பாரிசான் கூட்டணியின் தோழமைக் கட்சிகளான ம.சீ.ச.வைப் பற்றியும் ம.இ.கா.வைப் பற்றியும் கொஞ்சம் கூட கவலைப்படுவதே இல்லை.

இவ்விரு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் அது புளித்துப் போன ஒன்றாகப் போய்விட்டது என்றால் அது மிகையில்லை. கண்டிக்கவோ தண்டிக்கவோ வலுவில்லாத நிலையில் கண்டும் காணாததைப் போல இருந்துவிடுகின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டில் ஆட்சியை இழந்த அம்னோ எதிர்கட்சியாக அமர்ந்து கொண்டு தீவிர இனவாதக் கருத்துக்களை உமிழ்ந்து கொண்டிருந்ததை மக்கள் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் அண்மையில் வெளியிட்ட ஒரு கருத்து இதற்குச் சான்றாகும். அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ மகத்தான வெற்றி பெற்றால் ஷாரியா சட்டங்களுக்கு அதிமான அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் செய்யப்படும் என அவர் அறிவித்தது பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக மலாய்க்காரர் அல்லாதாருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அப்படிப்பட்ட சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால் ஷாரியா நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எதிர்த்து சிவில் நீதிமன்றங்களில் முறையீடு செய்ய முடியாத நிலை ஏற்படக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன என்று நம்பப்படுகிறது.

ஆண்டாண்டுகாலமாக பாஸ் கட்சிதான் இதுபோன்ற விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகர்ப் புறங்களுக்கு அப்பால் உள்ளவர்களை கவர்ந்திழுக்க முற்படும். ஆனால் தற்போது அம்னோவும் இதே போன்ற யுக்தியைக் கையாள நினைப்பது அதன் அரசியல் சுயநலத்தையே பிரதிபலிக்கிறது.

ஆக இஸ்லாமியர்களின் நலனை மட்டுமே முன்னிருத்தி அரசியல் நடத்தும் பாஸ் கட்சியின் பாணியை பின்பற்றத்துடிக்கிறது அம்னோ. அம்னோவைப் போல மலாய்க்காரர்களின் நலனை முன்னிருத்தி செயல்படத் துடிக்கிறது பி.கே.ஆர்.

இப்படிப்பட்டவர்களின் சுயநலப்  போக்கிற்கு மத்தியில் மலாய்க்காரர் அல்லாதாரின் நிலை குறித்த ஒரு விவாதம் தேவை. அதற்கு இனவாதமற்ற மலாய்காரர்கள் முன் வர வேண்டும்.

இனவாத எல்லையில் சிக்கிய இலங்கை தீவின் அவல அரசியலை ஒருகணம் நோக்குதல் அவசியமாகிறது.