சாமானியரைக் கவனித்த சாமிவேலு, சமுதாயத்தை எவ்வாறு கவனித்தார்!

இராகவன் கருப்பையா – ம.இ.கா.வின் முன்னாள் தலைவர் மறைந்த சாமிவேலு அக்கட்சியின் கடந்த காலத் தலைவர்களிலேயே தனித்துவம் வாய்ந்த ஒருவர் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

தனது 31 ஆண்டுகாலத் தலைமைத்துவத்தில் நிறைய பேருக்குத் தனிப்பட்ட முறையில் உதவிகளை வாரி வழங்கியுள்ளார் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் அவருடைய ஆட்சி காலத்தின் போது நம் சமூக மேம்பாட்டிற்கு எவ்வாறான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார், அமலாக்கம் கண்ட திட்டங்கள் எப்படிப்பட்ட பலன்களைக் கொணர்ந்தது என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

சாமானிய மக்கள் மீது அவர் காட்டிய பரிவு, வைத்திருந்த அன்பு, உதவி செய்யும் மனப்பான்மை போன்ற நற்குணங்கள், இளமை காலத்தில் அவர் கடந்து வந்த ஏழ்மையான, கரடுமுரடான பாதையின் பிரதிபலிப்பாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

கடந்த 1936ஆம் ஆண்டில் ஜொகூர், குளுவாங்கில் தோட்டப் பாட்டாளிகளுக்கு மகனாகப் பிறந்த அவர் தனது பதின்ம வயதிலேயே பெற்றோரை இழந்ததாகக் கூறப்படுகிறது.

வறுமையின் பிடியில் வாடிய குடும்பத்தைக் காப்பாற்றக் கோப்பிக் கடைகளில் வேலை செய்துள்ளதோடு, பேருந்து  கண்டக்டராகவும் அலுவலகப் பையனாகவும் கூடப் பணிபுரிந்துள்ளார்.

இள வயதில் கடக்க நேரிட்ட இத்தகைய வாழ்க்கை சூழலால் செம்மைப்படுத்தப்பட்ட அவர் பிற்காலத்தில் தன்னிடம் உதவி நாடி வந்தோரைப் பாசத்தோடு அரவணைக்கத் தயங்கியதில்லை – இல்லையென்று சொன்னதில்லை!

தலைநகர் ஈப்போ சாலையில் அமைந்துள்ள தனது இல்லம் வரை வந்து உதவிக் கேட்போரை அவர் வெறும் கையோடு அனுப்பியதாக வரலாறு இல்லை எனக் கடந்த 80ஆம் ஆண்டுகளிலேயே பரவலாகப் பேசப்பட்டது.

பிள்ளைகளின் கல்விக் கடன், உபகாரச் சம்பளம், மருத்துவச் செலவு, வீட்டு வாடகை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் போன்ற செலவுகளுக்குக் கூடச் சாமானிய மக்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். மேற்கல்வியைத் தொடர இயலாமல் தவித்த பலருக்குத் தனிப்பட்ட வகையில் உதவியுள்ளார்.

அவருடைய இல்லம் மட்டுமில்லாமல் கட்சி அலுவலகம் மற்றும் அமைச்சு வரையிலும் கூட நிறைய பேர் நம்பிக்கையோடு சென்று அவரை சந்தித்துள்ளார்கள்.

அதே சமயம் ம.இ.கா. கட்டிடத்திலும் அமைச்சு அலுவலகமுள்ளும் அவருடைய தனிப்பட்ட, அரசியல் மற்றும் பத்திரிகைச் செயலாளர்களால் அவமதிக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டோரின் கதைகளும் ஏராளம்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் ஆலோசனையின் பேரில் அல்லது அவர்களுக்குத் தெரிந்தேதான் நடக்கும் என்ற போதிலும் சாமிவேலுவைப் பொறுத்த வரையில் அப்படி இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

இவ்வாறு தனிப்பட்ட வகையில் ஆயிரக் கணக்கானோரின் இதயங்களில் இடம் பிடித்தச் சாமிவேலு ஒட்டு மொத்தச் சமுதாயத்தின் மேம்பாட்டு விவகாரத்தில் கோட்டைவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

மிகவும் துணிச்சலான, தனித் தன்மையுடன் செயலாற்றும் ஆற்றலுக்குச் சொந்தக்காரரான அவர் நினைத்திருந்தால் அரசாங்கத்தில் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி நம் சமுதாயத்தின் நீண்டகால மேம்பாட்டுக்கு எவ்வளவோ செய்திருக்கலாம் என்பதே மக்களின் ஆதங்கமாகும்.

கல்வி கற்ற சமூகமாக நம் இனத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான அவ்வளவு வாய்ப்புகளும் அவரிடம் இருந்தன.

மாறாக மகாதீர்தான் தனது முன்னைய பதவி காலத்தின் போது சாமிவேலுவைத் தனது சுயநல அரசியலுக்குச் சாதகமாகப் பெருமளவில் பயன்படுத்திக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

மகாதீரின் பெருந்திட்டமான புத்ரா ஜெயா நிர்மாணிக்கப்பட்ட போது எண்ணற்ற நம் சமூகத்தினர் நிர்க்கதியானது வரலாறு. சாமிவேலுவுக்கு அது தெரியாமல் இல்லை.

இந்தியச் சமூகத்திற்கு வானளவில் ஆசை காட்டிக் கெடாவில் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை அமைத்தார் சாமிவேலு. ஆனால் இன்று வசதி குறைந்த நம் பிள்ளைகளுக்கு அது எட்டா கனியாக வெறும் கனவாகவே கரைகிறது.

மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் இடம் கிடைப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் நம் பிள்ளைகள் கெஞ்சிக் கூத்தாட வேண்டியிருக்கிறது.

சொத்துகளை விற்று, நகைகளை அடமானம் வைத்து, காப்புறுதி பாலிசியைச் சரண் செய்து, அங்குமிங்கும் கடன்களை வாங்கி மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த நம் சமூகத்தின் நிலை கடைசியில் என்ன ஆனது என்பது ஊர் அறியும்.

தொழில் செய்ய முனையும் நம்மவர்களுக்கு லைசென்ஸுகள் கிடைப்பதில்லை. கட்டிட நிர்மாணிப்புகளுக்கு நம் இனக் குத்தகையாளர்களுக்கு டெண்டர்கள் கிடைப்பதில்லை.

தேர்வுகளில் மிகச் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றும் நம் பிள்ளைகளுக்கு அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பதில்லை. அரசாங்க உபகாரச் சம்பளம் வழங்கப்படுவதிலும் நம் இனம் ஒதுக்கப்படுகிறது.

முறையான பிறப்புப் பத்திரங்கள் மற்றும் குடியுரிமை இல்லாமல் பள்ளிச் செல்ல முடியாமலும் சரியான வேலை அமையாமலும் ஆயிரக்கணக்கானோர் இன்னமும் பரிதவிக்கின்றனர். அரசாங்கத்தில் வேலை கிடைப்பதும் குதிரைக் கொம்புதான்!

நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சாரார் இன்னமும் சொல்லொண்ணா வறுமையின் பிடியில் சிக்கி வாடுகின்றனர். தடுப்புக் காவலில் இந்திய இளைஞர்கள் மரணமடைவது ஒரு தொடர்கதையாகவே உள்ளது.

இது போன்ற இன்னும் நிறையப் பிரச்சினைகளைச் சாமிவேலு தெரிந்தும் தெரியாததைப் போல உதாசீனப்படுத்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அவர் நினைத்திருந்தால் அம்னோவின் இனவாதத்திற்கு எதிராக அவருடைய பாணியிலேயே கேள்வி எழுப்பி முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது நம் சமூகம் நிமிர்ந்து நிற்பதற்கு வழி வகுத்திருக்கலாம்.

எனினும் கடந்த 1990ஆம் ஆண்டில் நம் சமூக மேம்பாட்டுக்கு அரசாங்கம் வழங்கிய டெலிக்கோம் பங்குகளைத் திசை திருப்பிய குற்றச்சாட்டுகளைச் சுமந்து நின்றதால் தட்டி கேட்கும் வலுவை அவர் இழந்திருக்கக் கூடும்.

அரசாங்கப் பதவியில் இருந்த 31 ஆண்டுகளும் அமைச்சரவையில் தான் ஓருவர் மட்டுமே முழு அமைச்சராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துடிப்பு மிக்க அடுத்த கட்டத் தலைவர்களை அருகில் நெருங்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்ததும் எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.

இருப்பினும், ஒரு வலுவான அமைப்பு உருவாக்கிய அவர், எல்லாவற்றுக்கும் மேலாக, திறமையானதொரு அரசியல் ஆளுமையும் முன்னோக்கு சிந்தனையும், மக்களை முன்னிலை படுத்தும்  தலைமைத்துவத்திற்கு வித்திடாமல், தமக்குக் தலையாட்டிய தலைவர்களிடம் கட்சியை ஒப்படைத்துச் சென்றது நம் சமூகத்தின் அரசியல் பின்னடைவுக்கு மேலும் காரணமாக அமைந்தன.“நல்லதோர் வீணை செய்து, அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ..” என்ற பாரதியின் வரிகளை பொய்யாக்க தவறியவர்களுள் ஒருவராக ‘சாதனைத்தலைவரும்’ அமர்கிறார்.