இராகவன் கருப்பையா – இரு வாரங்களுக்கு முன் தேசிய முன்னணி தனது வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய வைபவத்தில் கலந்து கொள்ளாமல் ஒரு ‘டிராமா’வை அரங்கேற்றிய ம.இ.கா. மிக விரைவில் அதன் பலனை அனுபவிக்கும் போல் தெரிகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அக்கூட்டணியைப் பிரதிநிதிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளோரின் பெயர்கள் அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் அறிவித்த அக்கூட்டத்தை ம.இ.கா புறக்கணித்தது எல்லாரும் அறிந்ததே.
பாரிசானின் எல்லா உறுப்புக் கட்சிகளும் அங்கிருந்த வேளையில் ம.இ.கா.வினரை மட்டும் காணவில்லை.
அக்கட்சியினரின் இந்நடவடிக்கை எவரும் எதிர்பாராத ஒன்று எனும் போதிலும் பாரிசான் தலைவர்கள் யாருமே அதனை பொருட்படுத்தவில்லை.
மறுநாள் காலை 10 மணிக்கு அவசர மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறும் என்றும் இத்தேர்தலில் போட்டியிடுவதா அல்லது ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பதா என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் அதன் தலைவர் விக்னேஸ்வரன் செய்த அறிவிப்பு கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி அனைத்து இந்தியர்களின் புருவங்களையும் உயர்த்தியது. ஏனெனில் கடந்த காலங்களில் ம.இ.கா. இப்படி மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதே இல்லை.
தொகுதி ஒதுக்கீடு தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தவே இப்படி ஒரு நாடகத்தை ம.இ.கா. நடத்தியது என்பதே எல்லாருடைய அனுமானமுமாகும்.
ஆனால் அந்த இடைப்பட்ட சுமார் 20 மணி நேரத்தில் ம.இ.கா.வைப் பற்றி எந்த பாரிசான் தலைவரும் கொஞ்சமும் பொருட்படுத்தாதது அக்கட்சிக்கு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும்.
மாறாக தேர்தலில் இருந்து ம.இ.கா. ஒதுங்கினால் அதற்கு ஒதுக்கப்பட்டத் தொகுதிகளை கபலீகரம் செய்வதற்கு கழுகுகளைப் போல இதர உறுப்புக் கட்சிகள் காத்திருந்தன என்று நம்பப்படுகிறது.
ஆனால் தங்களைப் பற்றி யாரும் சட்டைப்பண்ணவில்லை என்பதை உணர்ந்த ம.இ.கா. தலைவர்கள் திடீரென பல்டியடித்து தேர்தலில் பங்கேற்க முடிவு செய்தனர்.
இவ்வாறு அம்னோவை மிரட்டிப் பார்த்த அக்கட்சியினர் சொந்தமாகவே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டனர் என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் இதனால் சற்று சினமடைந்துள்ளதாக நம்பப்படும் அம்னோ தலைமைத்துவம் எதிர்வரும் காலங்களில் ம.இ.கா.வை மேலும் அதிகமாக ஓரங்கட்டக் கூடும்.
அடுத்த வாரம் அப்படியே பாரிசான் ஆட்சியமைத்தாலும் அரசாங்கத்தில் ம.இ.கா.வின் பிரதிநிதித்துவம் குறையவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
தாய்க்கட்சி என்று கூறிக் கொள்ளும் ம.இ.கா.வின் இந்த சிறுபிள்ளைத்தனமானக் காரியத்தினால் நீண்டகாலத்தில் நம் சமூகம்தான் பாதிக்கப்படும்.
இத்தேர்தலில் ம.இ.கா. வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் வாக்குகளும் கூட குறையக்கூடும். அம்னோவின் ஆதரவு இல்லாமல் நாட்டின் எந்தத் தொகுதியிலும் ம.இ.கா. வேட்பாளர்கள் ஜெயிக்கவே முடியாது என்பது நிதர்சனம்.
துடுக்காகப் பேசக்கூடிய சாமிவேலு காலத்திலேயே அம்மோ தலைமைத்துவம் அக்கட்சியை அவ்வளவாகப் பொருட்படுத்தியதில்லை.
இப்படி ஒரு ‘மேகா சீரியலை’ அரங்கேற்றியப் பிறகா ம.இ.கா.வுக்கு மறியாதை கூடப்போகிறது?