பாடாங் செராய் தொகுதியில் ம.இ.கா. விலகுவதே சிறப்பு

இராகவன் கருப்பையா –அடுத்த வாரம் நடைபெறவிருக்கும கெடா, பாடாங் செராய் தொகுதிக்கான நாடாளுமன்றத் தேர்தலில் பாரிசான் கூட்டணி பக்காத்தானுக்கு வழி விடுவதே விவேகமானச் செயலாக இருக்கும்.
‘நான் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் இங்கு சேவையாற்றிவிட்டேன். என்னால் விலக முடியாது’ என பாரிசான் வேட்பாளரான ம.இ.கா.வின் சிவராஜ் பிடிவாதமாக வீண் விதண்டாவாதம் செய்வதில் எவ்விதப் பயனும் இல்லை.
கடந்த 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற 13ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தானின் கோபாலக்கிருஷ்ணனும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரு தேர்தல்களிலும் அதே கூட்டணியைச் சேர்ந்த கருப்பையாவும் அத்தொகுதியில் வெற்றி பெற்றனர்.
ஆனால் கடந்த வாரம் நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலின் முடிவுகளை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் இம்முறை அங்கு இந்தியர் ஒருவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
எனவே அங்கிருந்து ஒரு அங்குலம் கூட நகரப் போவதில்லை என சிவராஜ் அடம் பிடிப்பதில் அர்த்தமில்லை என்பதே எல்லாருடையக் கருத்தாகவும் உள்ளது.
பக்காத்தான் சார்பில் இம்முறையும் அங்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கருப்பையா தேர்தல் நடைபெறவிருந்த சில தினங்களுக்கு முன் திடீரென மரணமடைந்தது நாம் அறிந்ததே.
கருப்பையா ஒரு சிறந்த சேவையாளர் என்ற போதிலும் சமய, இன வெறி ஆதிக்கத்தில் மூழ்கியுள்ள தற்போதைய சூழலில் அவர் கூட வெற்றி பெற்ற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
அது மட்டுமின்றி மலாய்க்காரர்கள் அதிகமாக வசிங்கும் அத்தொகுதியில் ஒரு மலாய்க்காரர்தான் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என ஆங்குள்ள பக்காத்தான் ஆதரவாளர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினர். தேர்தல் பிரச்சாரங்களின் போது அன்வார் நேரடியாக அங்குச் சென்று நிலைமையை சீர்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட அத்தொகுதியில் 19 விழுக்காட்டினர் மட்டுமே இந்தியர்கள். மலாய்க்காரர்கள் 62%, சீனர்கள் 17%.
அதனுள் உள்ள இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் பெரிக்காத்தானைச் சேர்ந்தவர்கள்தான் வெற்றி பெற்றுள்ளனர் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய மற்றொரு அம்சமாகும்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் சிவராஜ் தனது நிலைப்பாட்டை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு பி.கே.ஆர். வேட்பாளர் சோஃபி ரசாக்கிற்கு வழிவிட்டால் அத்தொகுதியை பக்காத்தான் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
பாரிசான் சார்பில் அம்னோ களமிறங்கினால் கூட நிலைமை அவ்வளவு மோசமாக இருக்காது. ஆனால் ம.இ.கா. வேட்பாளர் எனும் வகையில் சிவராஜ் படுதோல்வியடைவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது. வைப்புப் தொகையை அவர் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பொதுத்தேர்தலில் இம்முறை ம.இ.கா. போட்டியிட்ட 9 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது நாம் அறிந்ததே.
தாப்பா தொகுதியில் அக்கட்சியின் துணைத்தலைவர் சரவணன் மொத்தம் 18,393 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள போதிலும் அவருக்கு எதிராக 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசியலில் முற்றிலும் புதியவரான பக்காத்தானின் சரஸ்வதி கந்தசாமி 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெரிக்காத்தான் வேட்பாளர் முஹமட் யட்ஸான் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெற்றனர்.
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலைப் போலவே இம்முறையும் ம.இ.கா. வேட்பாளர்கள் எந்த அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு இம்முடிவுகள் நல்லதொரு உதாரணமாகும்.
நாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும் எனும் வேட்கையில் நிறைய இடங்களில் ம.இ.கா. உறுப்பினர்களே பக்காத்தான் வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளது தற்போது அம்பலமாகி வருகிறது.
அந்த வகையில் பாடாங் செராயில் உள்ள ம.இ.கா. உறுப்பினர்களே சிவராஜுக்கு எதிராக வாக்களித்தாலும் வியப்பில்லைதான்.
எனவே இத்தகைய ஒரு அலையில் சிக்கி தன்மானத்தை இழப்பதைவிட சிவராஜ் இப்போதே கவுரவமாக ஒதுங்கிக் கொள்வதே சாலச் சிறந்த ஒரு முடிவாக இருக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
இதே போன்ற ஒரு சூழலில் பஹாங்கின் தியோமான் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் வேட்பாளர் பாரிசானுக்கு விட்டுக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.