இலவு காத்த கிளியான  ம.இ.கா-வின் சிவராஜ், சமூக போராளியாக மாற வேண்டும்

இராகவன் கருப்பையா – கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் நடந்த 2 பொதுத் தேர்தல்களில் தோல்வியடைந்த ம.இ.கா.வின் இதர வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில் அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் அடைந்த ஏமாற்றங்கள் சற்று வித்தியாசமானவை.

அக்கட்சியின் தலைமைத்துவத்தில் உள்ளவர்களிலேயே சற்றுத் துணிச்சலாகவும் துடுக்காகவும் பேசக் கூடிய ஒரே தலைவர் என்று கருதப்படும் அவர், அவ்விரண்டு முறையும் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத’ நிலையில்தான் ஏமாற்றமடைந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலையில் களமிறங்கிய சிவராஜ் அங்கு கடுமையானப் போட்டியை எதிர்நோக்கினார்.

‘கேமரன் மலை உங்களுக்குத்தான்’, என அபோதைய பிரதமர் நஜிப் பி.பி.பி. கட்சித் தலைவர் கேவியஸுக்கு முன்னதாகவே வாக்குக் கொடுத்திருந்தார்.

உற்சாகமடைந்த கேவியஸ் 2 ஆண்டுகளுக்கும் மேல் அங்கேயே முகாமிட்டு அத்தொகுதி மக்களின் நலன்களின் மீது அதீத அக்கரை செலுத்தி மிகுந்த ஆர்வத்துடன் அவர்களை கவனித்து வந்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் கேவியெஸ்ஸின் காலை வாரிய நஜிப் அத்தொகுதியை ம.இ.கா.வுக்கு திசை திருப்பிவிட்டதால் சிவராஜ் அங்கு நிறுத்தப்பட்டார்.

பேராக், தெலுக் இந்தான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மணோகரன் ஜ.செ.க. சார்பில் அங்கு களமிறங்கியதால் போட்டி மிகவும் கடுமையாகவே இருந்தது.

எனினும் வெறும் 597 வாக்குகள் பெரும்பான்மையில் சிவராஜ் அங்கு வெற்றி பெற்றார். ஆனால் அத்தொகுதியைச் சேர்ந்த பூர்வக்குடி மக்களுக்கு சிவராஜ் பெருமளவில் லஞ்சம் கொடுத்து வாக்குகளை வாங்கினார் என மணோகரன் புகாரளித்ததைத் தொடர்ந்து வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது.

இதற்கிடையே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மக்களவை அமர்வுகளில் சிவராஜ் உற்சாகத்தோடு கலந்து கொண்டிருந்தார். ம.இ.கா. போட்டியிட்ட 10 தொகுதிகளில் கேமரன் மலை உள்பட இரண்டில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. மற்றொன்று பேராக்கில் உள்ள தாப்பா தொகுதி.

இருப்பினும் அவருடைய மகிழ்ச்சி 7 மாதங்களுக்கு மட்டுமே நீடித்தது வருத்தத்திற்குரிய ஒன்று. ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவருடைய வெற்றி செல்லுபடியாகாது என அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதன் பிறகு 2 மாதங்கள் கழித்து அங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாரிசான் வேரொருவரை களமிறக்கி அத்தொகுதியில் வெற்றியை பதிவு செய்தது.

அத்தொகுதியை சிவராஜ் தக்க வைத்துக் கொண்டிருந்தால் 15 மாதங்கள் கழித்து கொல்லைப் புறமாக நுழைந்த முஹிடின் அரசாங்கத்தில் ஒரு முழு அமைச்சராக அல்லது குறைந்த பட்சம் ஒரு துணையமைச்சராக அவர் நியமிக்கப்பட்டிருக்கக் கூடும். அந்த சமயத்தில் தாப்பா தொகுதியில் வெற்றிபெற்ற சரவணனைத் தவிர வேறு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் யாருமே பாரிசானில் இல்லை.

கடந்த மாதம் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் கெடாவின் பாடாங் செராய் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட அவர் மீண்டும் உற்சாகத்தோடு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டார்.

சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேல் அங்கு முகாமிட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த சிவராஜை துரதிர்ஷ்ட காலம் துரத்திக் கொண்டே வந்துள்ளதைப் போல் தெரிகிறது.

தேர்தல் நடைபெற சில தினங்களே இருந்த போது அத்தொகுதியின் பக்காத்தான் வேட்பாளர் கருப்பையா திடீரென மரணமடைந்தது எல்லாரும் அறிந்த ஒன்று.

அதனால் அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது தலைவிதி மீண்டும் மாறும் என்று சிவராஜ் சிறிதளவும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இனவாத மற்றும் மதவாத அலையில் நாடு சிக்கியதால் பல்லின மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்தில் திடீரென பக்காத்தானும் பாரிசானும் கைக்கோத்ததும் அனைவருக்கும் தெரியும்.

KUALA LUMPUR 09 Disember. Sivaraj Chandran, perwakilan pemuda, di Perhimpunan Agung MIC yang ke 66. NSTP/Saifullizan Tamadi.

இந்நிலையில் சிவராஜ் அங்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் கம்மியாகிவிட்டதால் பி.கே.ஆர் கட்சியின் புதிய வேட்பாளருக்கு அவர் வழிவிட வேண்டியக் கட்டாயத்திற்கு ஆளானார். இந்தத் தியாகத்திற்காக அவருக்கு வெகுமதி வழங்கப்படும் என பி.கே.ஆர். கட்சியின் செயலாளர் சைஃபுடின் அறிவித்த போதிலும் அது என்ன வெகுமதி என்று சொல்லவில்லை.

எனினும் சிவராஜ் ஒரு செனட்டராக நியமிக்கப்பட்டு துணையமைச்சராக நியமனம் பெறுவார் என ஆரூடங்கள் பரவத் தொடங்கின. இப்படிப்பட்ட நேர்மறையான வதந்திகளினால் அவர் உற்சாகத்தின் உச்சியில் இருந்த போதுதான் மற்றொரு பேரிடி விழுந்தது.

அரசாங்கத்தில் துணையமைச்சர் பதவி எதனையும் தாங்கள் ஏற்கப்போவதில்லை என ம.இ.கா. தலைமையகம் செய்த ஒரு அதிரடி அறிவிப்பானது அவருடைய கனவில் மீண்டும் மண்ணைத் தூவியது.ஆக தொடர்ந்தாற் போல் 2 முறையும் சந்தர்ப்ப சூழ்நிலையில் சிக்கி அரசாங்கத்திற்குள் நுழையும் வாய்ப்பை நூலிழையில் இழந்த சிவராஜிற்கு மீண்டும் வாய்ய்ப்பு கிட்டும் என்பது குதிரை கொம்பாகும்.காரணம், இன-மதவாத அரசியல்தான். பெரும்பான்மையாக இந்தியர்கள் உள்ள தொகுதிகள் இல்லை. மேலும் இனி தேசிய உணர்வு கொண்ட பாதையில் அரசியல் கட்சிகள் பயணிக்க இயலாது.

சிவராரஜின் எதிர்காலம், ஒரு வலுவான இந்தியர்களின் உரிமை குரலை பதிவு செய்யும் இயக்கமாக மஇகா-வை மாற்றுவதில் இருக்க வேண்டும்.