இராகவன் கருப்பையா – புலனம் வழியாக நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ ‘காலை வணக்கம்’ சொல்வது உலகளாவிய நிலையில் தற்போது வழக்கத்தில் உள்ள ஒன்றாகிவிட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டில் ‘வட்ஸப்’ எனப்படும் இந்த புலனம் அறிமுகம் காண்பதற்கு முன் ‘எஸ்.எம்.எஸ்.’ எனப்படும் குறுஞ்செய்தி வாயிலாக ‘காலை வணக்கம்’ சொல்லும் ஒரு வழக்கம் நடைமுறையில் இருந்த போதிலும் அதற்குக் கட்டணம் விதிக்கப்பட்டிருந்ததால் அதன் பயன்பாடு அதிக அளவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
எனினும் புலனத்தை பயன்படுத்துவதற்கு கட்டணம் இல்லையாதலால் ‘காலை வணக்கம்’ தற்போது விரிவாக்கம் கண்டு, ‘மதிய வணக்கம்’, ‘மாலை வணக்கம்’ மட்டுமின்றி ‘இரவு வணக்கம்’ வரையில் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறது.
மற்ற வேளைகளில் இல்லாவிட்டாலும் நேரடியாகவோ புலனம் வழியாகவோ காலையில் ‘வணக்கம்’ சொல்வது ஒரு நல்ல வழக்கம்தான். அதில் தவறே இல்லை. உற்சாகத்திற்குத் தூண்டுகோலாகவும் அது அமையும்.
இருந்த போதிலும் ‘புரோட்காஸ்ட்’ எனும் வழி முறையில் ஒரே ‘க்ளிக்’ செய்து எண்ணற்றத் தொடர்புகளுக்கு ‘காலை வணக்கம்’ சொல்ல முற்படுவது எத்தனை பேரை புண்படுத்துகிறது என்பதை பலர் உணர்வதில்லை.
‘புரோட்காஸ்ட்’ வழி ஒரே ‘க்ளிக்’கில் மொத்தம் 256 பேருக்கு தகவல்களையோ படங்களையோ அனுப்ப முடியும் எனும் போதிலும் அந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் வழிகள் உள்ளன.
ஆனால் இப்படி அனுப்பப்படும் போது அவற்றை பெறுபவர்கள் அச்சமயத்தில் எம்மாதிரியான மன நிலையில் அல்லது சூழ்நிலையில் உள்ளனர் என்பதை பெரும்பாலோர் உணராமல் இருக்கின்றனர்.
உதாரணத்திற்கு குடும்ப உறுப்பினர் ஒருவர் கோர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பட்சத்தில் இதர உறவுகள் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கும் வேளையில், “இன்றைய தினத்தை சிறப்பாகக் கொண்டாடுங்கள், இன்று நடப்பவையெல்லாம் உங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்க என் வாழ்த்துகள்” என ஒரு செய்தியை அனுப்புவது பொருத்தமாக அமையுமா?
“இன்று என்ன நடந்தாலும் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்,” அல்லது “இன்று உங்களுக்கு அழகான விடியல்….அற்புதமானத் துவக்கம்,” போன்ற வாழ்த்துகள் அத்தருணத்தில் ஏற்புடையதாக இருக்குமா?
அனுப்புபவர் அறியாமையில்தான் அவ்வாறு செய்கிறார் எனும் போதிலும், அந்த குடும்பம் இருக்கும் பதற்றமான, பரபரப்பான சூழலில், “இவனுக்கு அறிவே இல்லை” என்று கூட சிலர் நினைக்க வாய்ப்பிருக்கிறது.
அதே போல, இறப்பு ஏற்பட்டுள்ள ஒரு இல்லத்தில் மிகுந்த சோகத்துடன் இறுதி காரியங்களில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு, “இன்றைய பொழுது நல்ல பொழுதாகவும் நன்மைகள் நிறைந்த நாளாகவும் புன்னகை பொங்கிடும் பொன் நாளாகவும் அமையட்டும்,” என்றொரு வாழ்த்தை அனுப்பினால் அவருக்கு எப்படி இருக்கும்?
அல்லது, “காலை வணக்கம், மலர்ந்துள்ள இன்றைய பொழுது உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைய என் வாழ்த்துகள்”, எனறொரு வாழ்த்தை அனுப்புவது முறையான ஒன்றா?
ஆக, இத்தகைய குளறுபடிகளைத் தவிர்ப்பதற்கும் மனச் சங்கடங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் ‘புரோட்காஸ்ட்’ முறையை பயன்படுத்தாமல் ஒவ்வொரு தொடர்புக்கும் தனித்தனியாக வாழ்த்துகளை அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்தால் யாருக்கு எம்மாதிரியான வாழ்த்தை அனுப்புகிறோம் என்று நமக்குத் தெளிவாகத் தெரியும்.
உலகிலேயே மிக அதிகமான புலன பயன்பாட்டைக் கொண்டுள்ள இந்தியாவில் இருந்துதான் ஒவ்வொரு நாள் காலையிலும் மில்லியன் கணக்கான ‘காலை வணக்கம்’ வாழ்த்துகள் வெளியாகின்றன என்று நம்பப்படுகிறது.
அவற்றைப் பெறும் நாம் இனிமேலாவது ‘இடம், பொருள், ஏவல்’ பார்த்து அனுப்புவது அவசியமாகும். ஒவ்வொன்றாக, தனித்தனியாக அனுப்புவது சற்று சிரமம்தான். இருந்த போதிலும் அதுவே சாலச்சிறந்த வழிமுறையாகும்!